அத்தியாயம் – 36
நிறைமாத கர்ப்பிணியாக தனது மேடிட்ட வயிற்றை பிடித்தபடி, கணவனின் கரத்தை மற்றொரு கையால் பிடித்துக் கொண்டு, தோட்டத்தில் மெல்லமாக நடை பயின்ற கோதையின் பார்வை முழுக்க ஆனந்தன் மீது தான்.
ஏனோ இப்போதெல்லாம் அதிகம் பிடிக்கிறது அவனையும் அவன் முசுடு முகத்தையும். ஆரம்பத்தில் பார்த்த ஆனந்தபாலனுக்கும் இப்போதிருக்கும் ஆனந்தபாலனுக்கும் “யம்மாடியோவ் எம்புட்டு வித்தியாசம்” நாளுமொரு முறையாவது வியக்காமல் இருக்க முடியாது அவளால்.
அவளிடம் மட்டும் அத்தனை கனிவு அக்கறை என மொத்தமாக மனைவி பைத்தியம் பிடித்து சுற்றும் கணவனை, நெஞ்சிக்குழியில் தாங்கியே சுக வேதனையில் தவித்துப் போவாள் கோதை.
பரட்டை தலை முடி எல்லாம் இப்போது சீராக திருத்தப்பட்டு, பெரிய மீசை, லேசான சுருள் தாடி, வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி என அப்பட்டமாக தேவன் ஜாடையில் அண்ணனின் செயலாளராக வேலைப் பார்ப்பவன், மற்ற நேரங்களில் தோட்டம் தொறவு வேலைகளை கவனித்துக்கொண்டும் பொறுப்பான மனிதனாக வளம் வரும் கணவனை, “ஐய்யோ என் தங்கமே.. செல்லமே..” என மடியில் போட்டு முத்தமிட்டு திகட்டாமல் கொஞ்சிக் கொண்டே இருக்கலாமே தோணும்.
அவனையே பார்த்தபடி நடந்த கோதை திடீரென கால் தடுக்கி தடுமாறியவளை, பதறிப் பிடித்த ஆனந்தன்,
“கண்ண எங்குட்டு டி வச்சிருக்க, பாத்து நடக்க தெரியாது. கால காட்டு காயம் பட்டுருக்க போவுது..” அவசரமாக அவள் காலை எடுத்து மடியில் வைத்து ஆராய்ச்சி செய்தவனை, நிறைந்த புன்னகையுடன் பார்த்த கோதைக்கு, கணவனோடு நீண்ட காலம் வாழ கொள்ளை கொள்ளையாய் ஆசைகள் தோன்றின.
“என்னங்க லேசா சீல தடுத்துடுச்சு, எனக்கு ஒன்னுமில்லைங்க பயப்படாதீய” அவன் தலை வருடி விட்டவளை, தலை தூக்கி முறைத்தான் ஆனந்தன்.
“யாருக்கு எனக்கா பயம்.. அப்டியே ஒன்னு வச்சேன்னு வையி இந்த நக்கலா சிரிக்கிற சிரிப்பு எல்லாம் எங்குட்டு போவும்னு தெரியாது. கழுத வயசாவுது இன்னும் ஒழுங்கா நடக்க தெரியல. வயித்துல கல்லையா கட்டி வச்சிருக்க புள்ள இருக்குறது தெரியல” கடினமாக சாடியவனுக்கு, இவளது சின்ன சின்ன கவனக்குறைவான செயலிலும், பெருமளவு பதைபதைப்பு உண்டாகி உள்ளம் நடுங்கி போகிறது.
“தெரியாம தட்டி விட்டுடுச்சிங்க இனிமே கவனமா இருக்கேன்” மெல்லிய குரலில் பாவமாக சொன்ன கோதைக்கு தான் நன்றாக தெரியுமே, அவனது கோபமே தன்மேல் உள்ள அன்பில் தான் என்று.
“மச்.. என்னத்தையாவது சொல்லு. சரி நடந்தது போதும் வா சாப்ட்டு நேரத்தோட படுப்போம். காத்தால ஏதோ டெஸ்ட்டு எடுக்க ஆஸ்பத்திரிக்கு வர்ற சொல்லி இருந்தாவலே, அது எதுக்கு” பேச்சிக் கொடுத்தபடியே அவளை விட பெரிதாக இருந்த வயிற்றையும் அவளையும் தாங்கி பிடித்து பாதுக்காப்பாக அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.
“குழந்தை பொறக்க நாள் நெருங்கிட்டதால, பிபி சுகர் அளவு எல்லாம் எப்டி இருக்குனு பரிசோதனை பண்ண கூப்ட்டு இருக்காவ” அவன் உணவை அள்ளி வாயில் வைக்க, கணவன் ஊட்டும் விருந்து கசக்கவா செய்யும். பெரிதாக வாய் திறந்து ஆனந்தன் விரல்களை விழுங்கி ஆனந்தம் கண்டாள் கோதைபெண்.
“ம்.. சரி ந்நா சாப்ட்டு வர்றேன் நீ உள்ள போயி படுக்குறதா இருந்தா படு. முதுகு வலிக்க போது” உண்டபடியே அவள் நலனில் அக்கறை காட்டிய ஆனந்தனுக்கு, நாள் கிட்டத்தில் நெருங்க நெருங்க, ஒருவித அச்சம் படர்ந்து பெரும் கவலை நெஞ்சில் சூழ்ந்து கொண்டது.
“வலிச்சா நீங்க புடுச்சி விட மாட்டீயலா.. சாப்பாட்டை குடுங்க நானே ஊட்டி விடுறேன்” கணவன் மீது ஓவர் டோஸ் காதல் கூடி தட்டை பிடுங்கி, தானே அவனுக்கு ஊட்டி விட, தடித்த உதடு மடித்து அவள் மெல்லிய விரலை கவ்வி உணவோடு மென்று விழுங்க, கூச்சத்தில் நெளிந்தாள்.
பிள்ளை உண்டானதை சொல்லாமல் விட்ட கோவம் ஆரம்பத்தில் இருந்தாலும், கோதையின் பயத்தை புரிந்துகொண்டு ஒவ்வொரு நாளும் உள்ளங்கையில் தாங்கி, தன் மகவை சுமக்கும் முல்லைக்கொடியை கண்ணில் வைத்து காத்து வருகிறானே! சில நேரங்களில் பிறவி குணம் வெளிவருவதையும் தடுக்க முடியாது.
** ** **
“இந்தா நாயகி இதுல பழங்க இருக்கு, நீ கோத அமுதா எல்லாரும் ஜூஸ் போட்டு குடிங்க. இந்த பைல பையனுக்கு புது சட்ட துணி இருக்கு, தண்ணில நெனச்சி காயவச்சிட்ட பொறவு போட்டுவுடு” வெளியே சென்று வந்த தேவன் மனைவி கைகளில் பையை கொடுக்க,
“ம்.. குடுங்க” என இன்முகத்துடன் வாங்கிக் கொண்டு செல்லப் போனவளை கரம் பற்றி தடுத்தான்.
“ஏய், ஏதாவது எங்கிட்ட கேட்கணுமா..” எப்போதுமே இப்படி கேட்டிடாதவன் திடீரென கேட்கவே புரியாமல் விழித்தாள்.
“என்னங்க கேக்கணும்.. நீங்கதே எனக்கு தேவையானது எல்லாத்தையுமே வாங்கி குடுத்துடுறீயலே. வேற என்ன கேக்க” பலமாக யோசிக்க, ஒன்றுமே தேவை இல்லை அவளுக்கு.
“மச்.. கேக்குறதுனா பொருளோ பணமோ இல்ல டி, வேற ஏதாவது” நேரடியாக விஷயத்திற்கு வராமல் இவனும் குழப்பி, அவளையும் குழப்பி விட்டான் தேவன்.
“வேறையா..” உதடுகள் முணுமுணுத்து கண்கள் சுருக்கிட, பொறுமை பரிபோனது.
“பச்.. ஒனக்கு ஒன்னும் புரியாது இங்கன வா நானே சொல்றேன்” மனைவியை இழுத்து தன்னருகில் அமர்த்திக் கொண்ட தேவன், சில கணங்கள் அவளது யோசனை படர்ந்த முகத்தினையே கூர்ந்து பார்த்து பேச்சை தொடர்ந்தான்.
“ஆரம்பத்துல குழந்தை வேணும்னு அடிக்கடி கேப்பியே, இப்போல்லாம் அதை பத்தின பேச்சே இல்லையே..” என நிறுத்திய தேவனுக்கு, மனைவி குழந்தையை கேட்டபோதெல்லாம் தோன்றாத குழப்பம், சுத்தமாக அப்பேச்சை நிறுத்தியதும் மனதுக்குள் என்னவோ நிருடியது.
கணவனின் பேச்சில் இமைகளில் பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்த நாயகியின் முகத்தில், விரக்தி மட்டுமே நிலைத்து இருந்தது.
“கெடைக்காதுனு தெரிஞ்ச பொறவு அதை பத்தி பேசி ஒன்னும் ஆக போறதில்லையேங்க. அதே கேக்கல” தலை குனிந்து கொண்டவளின் இமைகளுக்குள் நிறைந்த கண்ணீர் அவள் மடியில் சொட்டிட, தாடை பற்றி அவள் முகம் நிமிர்த்திய தேவனின் முகமும் வேதனையில் மரிந்து போனது.
“எ.என்ன டி சொல்ற” எனும் போதே ‘எப்படி தெரிந்தது இவளுக்கு’ மனம் பதைத்து விட்டது.
“இங்கிருந்து போன பொறவு, அந்த காய்கறி கடைல வேலை பார்த்தேனே, அப்போ வெயில் அதிகமாகி கண்ண இருட்டிட்டு வந்துச்சி. அங்கனவே மயக்கம் போட்டு விழுந்துட்டேன்னு பக்கத்துல இருக்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாக.
என் கூட வந்த ஒரு பாட்டி, ஒருவேளை ந்நா பு.புள்ள உண்டாகி இருக்கேனோனு சந்தேகப்பட்டு பரிசோதனை செஞ்சி பாக்க சொல்லி இருக்காவ போல.
அப்பதே டாக்டர் எல்லாத்தையும் எங்கிட்ட சொன்னாங்க. புள்ள உண்டாகுற அளவுக்கு எனக்கு சக்தி இல்லையாமே..” சொல்லும் போதே தொண்டை விக்கி, கண்ணீர் மாலையாக கொட்டிட, இறுகிய அணைப்பிற்குள் மனைவியை கொண்டு வந்த தேவனின் கண்களும் கலங்கி, துடிக்கும் உதடுகளை அடக்க அவள் உச்சியில் அழுத்திக் கொண்டான்.
“ந்நா என்ன பாவம் பண்ணேன்னு எனக்கு இந்த தண்டனையோ தெரியலைங்க. ஆனா நீங்க இந்த ஊருக்காக மக்களுக்காக எம்புட்டோ உதவி பண்ணி படியளக்குற தெய்வமாச்சே உங்களுக்காக கூட ஒரு குழந்தைய அந்த கடவுள் தந்திருக்க கூடாதா..” தன் நெஞ்சில் புதைந்து தேம்பி அழும் மனைவி, அப்போது கூட தனக்காக குழந்தை பெற்று கொடுக்க முடியவில்லையே என்றே வருத்தம் கொள்ள ஆண் மனம் நொந்து கொண்டது.
“மச் அழாதே டி.. இப்ப என்ன குழந்தை பெத்தா மட்டுந்தே வாழ்க்க முழுமுற்று பெருமா! ஒனக்காக ந்நா எனக்காக நீ இதுதே என்னைக்கும் நிரந்தரம். குழந்தைகள் எல்லாம் நம்ம வாழ்க்கையோட ஒரு பகுதி மட்டும் தான்டி. வந்தாலும் சந்தோசம் இல்லைனாலும் இதோ நீயும் நானும் இப்டியே ஒன்னோட ஒன்னு கடைசி வரைக்கும் கட்டிகிட்டே கெடப்போம்.
ந்நா என்னைக்கும் தெளிவா தான்டி இருக்கேன். எனக்கு என் நாயகி மட்டும் போதும். ஒனக்கும் இந்த தேவன் மட்டும் போதும்னா, இனிமே நீ எதுக்காகவும் கலங்கி ஏங்கிடக் கூடாது. மீறி நீ கலங்கினா எனக்கு உசுரு கலங்கி போவும்ன்றத எப்பவும் மறந்திடாத டி”
அவள் கண்ணீரை துடைத்து விட்ட தேவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைக்க, கத்தலும் கதறலுமாக கணவன் நெஞ்சில் அழுது தீர்த்த நாயகியின் மனம், கணவனின் மெய் காதலை எண்ணி ப்ரம்மத்து போனது.
இளமையில் காதல் ஒரு அழகென்றால், காலம் கடந்தாலும் புரிதலில் உண்டாகும் காதல் அழகோ அழகு தான்.
தொடரும்.