அத்தியாயம் – 34
தேவனின் பேச்சில் ஜீவன் பரிதவித்து குலுங்கி அழுத நாயகியை உயிர்பற்று பார்த்த தேவன் சட்டென எழுந்து அவள் முன்நிற்க, அழுது சிவந்த முகம் திகைத்து போனது.
“என் பொண்டாட்டி மாதிரி ஒரு இளகிய மனசுக்காரி இந்த உலகத்திலே இருக்க வாய்ப்பில்லைனு, எம்புட்டோ தரம் உள்ளுக்குள்ள பூரிச்சி போயிருந்திருக்கேன் டி.. ஆனா இப்ப தானே தெரியிது எப்படா இவன் செத்து தொலைவான், நம்ம இஸ்டத்துக்கு நிம்மதியா வாழலாம்னு உன் மனசுல எண்ணம் வந்ததால தான்டி நீ ஒதுங்கி போயிருக்க..”
இத்தனை தூரம் ஆனா பின்னும் தன்னை காண வர்றாதவளை, ஏதாவது ஒரு வகையில் வதைத்து விடும் எண்ணத்தில், வார்த்தையினை ஈட்டியாக பாய்ச்சிட,
“ஐய்யோஓஓ.. போதுங்க இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க..” பலத்த கதறலோடு செவிகளை பொத்திக்கொண்டு கத்தியவளை, மனமிரங்காது பார்த்தான் தேவன்.
“அப்டித்தான்டி சொல்லுவேன்.. ந்நா எப்படா செத்து ஒழிவேன்னு ஒவ்வொரு நாளும் நீ எதிர்பாத்து காத்திருந்துருக்க, அதுதா நெசம்.. இல்லைனு உன் மனச தொட்டு சொல்லு டி பாப்போம்..” பற்களை கடித்தவன் சட்டையினை பாய்ந்து வந்து பற்றிய நாயகி,
“போதுங்க.. இதுக்கு மேல எதுவும் பேசி என்னைய கூரு போடாதீய.. உங்களையே தெய்வமா நெனச்சி, அனுதினமும் என் மனசுக்குள்ள பூஜிக்கிற என்னைய பாத்து என்ன வார்த்த சொல்லிப்புட்டீய..
பிரிஞ்சி இருந்தாலும் எப்போதும் நீங்க சந்தோசமா இருக்கனும். எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா நீண்ட காலம் வாழணும்னு தானே ஒவ்வொரு நிமிசமும் நினைச்சி கடவுள்கிட்ட வேண்டிட்டு இருப்பேன். அப்பேர்ப்பட்ட என்னைய போயி ஏங்க அபாண்டமா பேசி துடிக்க வைக்கிறீங்க”
தேவனின் சட்டை காலரை கரங்கள் நடுங்காதிருக்க இறுக்கிப் பிடித்துக் கொண்ட நாயகி, அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து தேம்பி அழ, மனைவியின் விளியில் உள்ளம் வெம்பி தானும் அவளை அணைத்துக் கொண்டான் நடுக்கமாக.
“செத்தாலும் முகத்துல முழிக்காதேனு சொல்லி தொரத்திவுட்ட பொறவு, உசுருக்கு ஊசலாடுற உங்கள பாக்க தகிரியம் இல்லாம, எங்க மீறி வந்து பாத்துபுட்டா உங்களுக்கு திரும்ப ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து பயந்து ந்நா செத்து பொழச்ச வேதனையெல்லாம் உங்களுக்கு எங்கே தெரிய போவுது..
எப்பவும் என்னைய வார்த்தையால வதைக்கணும், ந்நா துடிக்கணும். இதுக்கு பதிலா என்னைய ஒரேடியா கொன்னு கூட போட்டுடுங்களேன் நிம்மதியா செத்து போறேன்..”
குமுறி அழுத மனைவியின் பேச்சில் இதய அதிர்வோடு அவளை வேகமாக தன்னிடமிருந்து பிரித்த தேவன், ஆங்காரமாக முறைத்த முறைப்பு எல்லாம் எங்கே அவள் கருத்தில் பதிந்தது.
“என்ன டி பேச்சி பேசுற.. கொஞ்ச நாளு தனியா இருந்ததும், இந்த தேவங்கிட்ட பயம் விட்டு போச்சா..” ருத்ர விழிகளை உருட்டியவன் கோவச்சூடு, அவள் அம்பகத்தை தாக்கியது.
“என்ன சொன்ன.. என்ன சொன்ன.. நிம்மதியா செத்து போறியா.. ந்நா உசுரோட இருக்க வரைக்கும் ஒன்னைய நிம்மதியா வாழ மட்டும் இல்ல டி, சாகவும் விட்டுடுவேனா நானு..
கோவத்துல விட்ட ஒத்த வார்த்தைய இம்புட்டு தூரம் புடிச்சி தொங்கிட்டு என்னைய உசுரோட வதைச்சல்ல, இதுக்கெல்லாம் சேர்த்து ஒனக்கு பெருசா தர்றேன். இப்பவே பொறப்படு எங்கூட வா..” அவள் கரம் பற்றி இழுக்க, அச்சத்தில் உடல் விரைத்து அவனது இழுப்புக்கு செல்லாமல் அசையாது நின்ற மனைவியை கண்கள் சுருக்கிப் பார்த்தான்.
“தயவுசெய்து என்னைய இப்டியே விட்டுடுங்க.. எனக்கு உங்ககூட வர்ற விருப்பம் இல்ல” என்றாள் கம்மிய குரலில்.
“ஏன் அப்பா ஏதாச்சி சொல்லுவார்னு பயப்படுறியா..?”
“அவைய என்னைய ஏதாச்சி சொல்றது ஒன்னும் எனக்கு புதுசில்லைங்க. ஏன்னா மாமா சொல்றது எல்லாம் ஒரு விதத்துல பாத்தா சரியாதா இருக்கு..
என்னால உங்களுக்கு அவமானம் மட்டுந்தே சேருதே தவிர எந்த ஒரு நல்லதும் நடக்கல. என்னால பிள்ளை உண்டாவ முடியல.
ந்நா உங்களுக்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவ. என்னால உங்களுக்கு சின்ன சந்தோசம் கூட கெடச்சது இல்ல. தாலி கட்டின பாவத்துக்கு மட்டுந்தே, ஊர் உலகத்துக்காக வேற வழி இல்லாம உங்கூட வாழ வேண்டியதா போச்சி, இல்லாட்டி என் தம்பிய போல நாளும் ஒரு பொண்ணோட சந்தோசமா இருந்திருப்பேன், ஒன்னால எனக்கு நிம்மதியே இல்லனு, எத்தனையோ தரம் நீயலே சொல்லி இருக்கீயலே..
அதுனால ந்நா உங்களுக்கு புடிக்காதவளாவே இருந்துட்டு போறேங்க. உங்கள விட்டு வந்தது வந்ததாவே இருக்கட்டும். என் நெனப்ப மொத்தமும் துடைச்சி எறிஞ்சிட்டு நீங்க மாமா சொல்ற பொண்ண கட்டிக்கோங்க. அப்டி ந்நா இங்கன ஒரே ஊர்ல இருக்குறது உங்களுக்கு தொந்தரவா இருந்தா, நானும் என் குடும்பமும் இந்த ஊரை விட்டே போய்டுறோம்..”
குரல் நடுங்க அவள் சொல்லி முடிக்க, அதே வேகத்தில் தேவனின் ஐவிரலும் அச்சாக அவள் கன்னத்தில் பதிந்து, கதவில் முட்டி விழுந்த நாயகி திகைத்து போக, தேவனின் பொறுமை எல்லை கடந்தது.
“என்ன டி கொஞ்சம் விட்டா உன் பாட்டுக்கு பேசிட்டு இருக்க.. யாரு குடுத்த தகிரியம் இது ஹான்.. நானும் எம்புட்டு தூரந்தே நீ விதண்டாவாதமா பேசுறத எல்லாம் கேட்டு பொறுமையா பொறுத்து போறது.
நீ யாரு டி என்னைய அடுத்த கண்ணாலம் பண்ண சொல்றதுக்கு..? ஏன் நாந்தே ஒன்னைய அந்த அளவுக்கு கொடும பண்ணி அடிச்சி தொரத்திவுட்டு இருக்கேனே, புருசங்காரன் சரிஇல்லனு நீயும் இன்னொரு கண்ணாலம் பண்ணிட்டு அவனோட சந்தோசமா இருக்க வேண்டியது தானே? என்ன மசுருக்கு டி தனியா கெடந்து கஸ்டப்பட்டுகிட்டு கெடக்குற.. நானே வேணும்னா தங்கமான மாப்பிளையா பாத்து ஒனக்கு கட்டி வைக்கட்டுமா” தேவனின் சரவெடி ஆக்ரோஷ பேச்சில், விதிர்விதிர்த்து போனவளுக்கு இதயமே நின்று போனது.
“என்ன டி அப்டி பாக்குற.. கட்டி வைக்கட்டா.. சந்தோசமா அவன் கைய புடிச்சிட்டு போய் வாழுறியா..” அவள் தாடை பிடித்து அழுத்தி கண்களால் எரிக்க, “ம்ஹும்..” என அவசரமாக தலையாட்டியவளின் கண்களில் இருந்து நிற்காமல் வழிந்த கண்ணீர், தேவனின் கரத்தை நனைத்தன.
“ஹ்ம்.. என் எடத்துல வேற ஒரு ஆம்பளைய வச்சி பாக்க ஒன்னால முடியாதுல்ல. பொறவு எப்டி டி ந்நா மட்டும் உன் எடத்த வேற ஒருத்திக்கு குடுத்து அவளோட சரசமாடி புள்ள பெப்பேன்னு நெனச்ச..
அப்போ இம்புட்டு வருசமும் கோவத்துல பேசுற பேச்சை அம்புட்டையும் கணக்கெடுத்து வச்சி, எங்கூட பொய்யா வாழ்ந்திருக்க அப்டித்தானே..”
கோவத்தில் முகம் சிவக்க கர்ஜித்தவனை, நெஞ்சிக்கூடு அதிர பார்த்த நாயகிக்கு, தொண்டைக்குழி தாண்டி அடுத்த வார்த்தை வருவேனா என்றது.
“என்னைய நீ புரிஞ்சிக்கிட்டது அம்புட்டுதேந் டி..” விரக்தியாக அவளது அருகிலேயே அமர்ந்து தலையினை பிடித்துக் கொண்ட தேவனை தொட நடுக்கமாக கை நீட்டியவளை, சட்டென தன்னிடம் இழுத்து அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து ஆழ மூச்செடுக்க, அப்பாடா போன உயிர் மீண்டும் கிட்டிய உணர்வில், அழுத்தமாக இதழ் முத்திரை தேவன் பதிக்க, உறைந்து போனாள் வேதநாயகி.
“மன்னிச்சிடுங்க..” சத்தமே இல்லாது உதடுகள் முணுமுணுத்தது, அவள் கழுத்தில் வாசம் செய்தவனுக்கு தெளிவாகவே கேட்டிருக்க,
“எதுக்கு..?” என்றான் கண்கள் மூடியபடி.
“உங்கள உடைஞ்சி போற அளவுக்கு வருத்திப்புட்டேனே..” கலங்கி உரைத்த நாயகியின் கரம் தானாக உயர்ந்து கணவனின் கேசம் கோதிட, அப்பப்பா இதுவல்லவோ தேவசுகம் அவனுக்கு.
“மன்னிப்பா..”
“ம்..”
“ஒனக்கா..”
“ம்..”
“அதுசரி..” என்றான் நகைப்பாக.
“ஏங்க என்னைய மன்னிக்க மாட்டீயலா” நாயகியின் குரல் இறங்கி போனது.
“ம்ஹும்..கண்டிப்பா மன்னிப்பு கெடையாது டி” உறுதியாக சொன்ன கணவனை பாவமாக பார்த்த விழிகளில் மென்முத்தம் பதிக்க, சட்டென அவள் இமை மூடவும், தேங்கி நின்ற உவர் நீர் அவன் உதட்டில் விழுந்து தீர்த்த சுவை தந்தது.
“என் விசயத்துல ஒன்னைய எனக்கு கட்டி வச்சி அப்பா எனக்கு பெரிய பொக்கிஷத்தை குடுத்தது போல, அமுதாக்கு அப்பா பாத்து கட்டி வச்சா அவளும் என்னைய மாறி சந்தோசமா வாழுவான்னு நெனச்சேன் டி..
ஆனா ஒருக் கட்டத்துக்கு மேல, அந்த குடும்பத்துக்கு தேவை அமுதா இல்ல அமுதாவால வர்ற போற வரதட்சணையும் சொத்துந்தான்னு தெரிஞ்ச பொறவு, நானே கல்யாணத்த நிறுத்திப்புட்டு, கடைசி நேரத்துல என் நண்பன் பையனுக்கு அமுதாவ கட்டி வச்சிப்புடலாம்னு பாத்தேன்.
அவனுக்கு வாக்கு குடுத்துட்ட அந்த நேரத்துல, அமுதா வேற சாதிபயல விரும்பினதும் இல்லாம, நீயே அவிங்கள சேத்து வச்சது எனக்கு தீராத கோவத்த ஏற்படுத்துச்சி. சாதி கௌரவம் எனக்கு முக்கியந்தே, ஆனா அதைவிட பெருசு என் நண்பங்கிட்ட குடுத்த வாக்கு தவறி போச்சேன்னு ஆத்திரம்.
அவன் பெருந்தன்மையா அந்த விசயத்தை எடுத்துக்கிட்டாலும் என்னால சாதாரணமா எடுத்துக்க முடியாம, கோவத்துல புத்தி இழந்துட்டேன் டி.
அதுல உங்கிட்ட ந்நா ரொம்பவே கடுமையா நடந்துகிட்டேன். அப்பா மேல உள்ள மரியாதைல அவரையும் தடுக்காம விட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன் நாயகி.
நியாயப்படி பாத்தா, ஆரம்பத்துல இருந்தே என் அப்பா பேச்சை கேட்டு ஆம்பள திமிர்ல ஆடி, ஒன்னைய வருத்தி உன் மனச நோகடிச்சதுக்கு எல்லாம் சேர்த்து நாந்தே உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும். நீதே என்னைய பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும்.
தயவுசெஞ்சி என்னைய மன்னிச்சி எங்கூட சேந்து வாழு டி..”
தவறை உணர்ந்து மனைவியிடம் மன்னிப்பை யாசகம் கேட்டு பாவமாக கெஞ்சிய தேவனை, அதிர்ச்சி விலகாது பார்த்த நாயகிக்கு மூச்சே நின்று போனது.
“என்னங்க பேசுறீங்க.. எங்கிட்ட போயி மன்னிப்பு அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் கேட்டுகிட்டு.. கூட வந்து வாழு டின்னா வாழ போறேன்..
ந்நா ஒருத்தி கண்டதையும் பேசி உங்கள குழப்பி உட்டுப்புட்டேன். தயவுசெய்து ந்நா பேசின எல்லாத்தையும் மறந்துடுங்க” பதட்டமாக உரைத்த நாயகிக்கு, மனமே கனத்து போனது, கணவனின் மன்னிப்பு வார்த்தையில்.
“மச்.. எதுக்கு டி இம்புட்டு பதட்டப்படுற, சாதாரண மன்னிப்பு தானே கேட்டேன். ஒன்னு மன்னிக்கிறேன்னு சொல்லு இல்லையா, ஒனக்கெல்லாம் மன்னிப்பு கெடையாது போடானு சொல்லு. அத்தவுட்டு எதுக்கு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற..” பெரிதாக தேவன் சலிக்க,
“எதே.. போடாவா..” அவன் சொன்னதை கேட்ட திகைப்பில் வாய் பிளந்து உறைந்தவளின் செயலில், சிரிப்பு வந்து விட்டது தேவனுக்கு.
நீண்ட நாட்கள் கழித்து கிடைத்திருக்கும் மனைவியின் அருகாமையில் கிறங்கி தன்னை தொலைத்த தேவன், நலுங்கி இருந்த அவள் நெஞ்சணையில், நன்றாக முகம் தேய்த்து, கைகள் பிணைந்து விளையாடுவது எதையும், நாயகி இருந்த பதட்டத்தில் உணரவே இல்லை.
“ரெண்டு மாசமா தனியா கெடத்தி பட்டினி போட்டுட்டியே டி பாவி.. நீ இல்லாம, உன் மூச்சி காத்த சுவாசிக்காம, ஒவ்வொரு நாளும் ந்நா தவிச்ச தவிப்பு இருக்கே, ப்பா.. மரணம் கூட அம்புட்டு வலிய தராது டி.. உன் பிரிவு என்னைய சிறுக சிறுக கொன்னேபுடுச்சி..” கரகரத்த குரலில் ரணமாக உரைத்த தேவனை கண்ணீரோடு குனிந்து பார்த்த நாயகியின் உதட்டை, வெடுக்கென கவ்வி ஆழ்ந்த முத்தத்தில் திளைத்தவனை கண்டு, பெரிதாக அம்பகம் விரிந்தன பெண்ணுக்கு.
தேவனின் கோபதாபங்களை அனைத்தையும் எளிதாக கடந்து செல்லும் நாயகியால், அவனது சிறு கலக்கத்தை கூட தாங்க முடியாது மனம் வெதும்பி போனவளுக்கு, சுட்டுப்போட்டாலும் கணவன் மீது கோபம்கொள்ளவே தெரியாது.
இதோ ஒற்றை மன்னிப்பில் அவன் செய்த அனைத்தையும் மொத்தமாக மறந்து, கணவனை மடியில் தாங்கி நெஞ்சில் அணைத்துக் கொண்டு கிடக்கும் அவள் தான் நிஜ நாயகி.
கணவனுக்கு அடக்கி போவதற்கு பெயர் அடிமை என்றால், ஆயுளுக்கும் தேவனின் அடிமையாக வாழ நாயகி தயார் தான்.
தேவனின் இயல்பும் மாறாது. நாயகியின் அன்பு கொண்ட மென்மையும் மாறாது.
கணவன் எவ்விழியோ மனைவியும் அவ்வழியில் எவ்வித கட்டாயமும் இல்லாது பயணிக்க நாயகிக்கு கை வந்த கலை என்றால், அவளுக்கு கட்டளை இட்டு வழி நடத்துவதில் கர்வம் கொண்ட ஆளுமைவாதியாக இருப்பது தேவனுக்கும் கை வந்த கலை தான்.
நீண்ட நேர முத்தப் போரில் பெண் ஆடை கலைந்து, மென்பஞ்சி பொதிகளில் கிறங்கி சித்தம் கலங்கிய தேவன், அவள் நெஞ்சிக் குழி எங்கும் உதட்டால் நிருட, சிறு அதிர்வோடு தேகம் சிலிர்த்து போன நாயகி தேவனின் முதுகில் அழுத்தமாக கட்டிக்கொள்ள, ஸ்ஆஆ.. என்றவனின் சிறு அலறலில் பதறிப் போனாள்.
“அச்சோ என்னங்க ஆச்சி..” கத்திக் குத்துப்பட்ட காயத்தில் அழுத்தி விட்டாள் போலும். வலியில் முகம் இருண்ட தேவனை அவசரமாக எழுந்து சோதித்த நாயகி, கட்டு போட்டிருந்த முதுகை கண்டு கண்ணீர் வடித்தாள் அதனை மென்மையாக வருடி.
“மச்.. ஒன்னு இல்ல டி. அழாத” வலியினை மறைத்து புன்னகைத்தவன், தனது இதயப் பையில் வைத்திருக்கும் மனைவியின் தாலிக்கொடியை கையில் எடுத்து அவள் முகத்தின் நேரே தொங்க விட, நாயகியின் கண்கள் மேலும் கரித்துக் கொண்டு வந்தது.
“என்ன டி அப்டி பாக்குற.. இத்த ந்நா அத்து வீசிபுட்டு பட்ட வேதனை எனக்கு மட்டுந்தா டி தெரியும். உன் வெத்து கழுத்த பாக்க பாக்க உசுரு போவுது டி. இனி ஒரு தரம் எம்புட்டு கோவம் வந்தாலும் சரி இந்த ஒரு தப்பை மட்டும் செய்யவே மாட்டேன் நாயகி” அவள் கண்ணீரை துடைத்த தேவன், நாயகி கண்மூடிய நேரம் தாலி சரடை அவள் கழுத்தில் மாட்டி விட்டவன், வீரிட்டு அழ தயாரானவளின் இதழை அதிவேகத்தில் முற்றுகை இட்டிருந்தான்.
தொடரும்.