அத்தியாயம் – 30
அன்று இரவு தாமதமாக வந்த தேவனை விழித்திருந்து வரவேற்ற கோதை, தயங்கி தயங்கி அவனுக்கு இட்லியை எடுத்து வைக்க, வெளுத்த முகத்துடன் தானாக உண்டவனை யோசனையாக பார்த்தாள்.
“ம்.மா..மா..” கோதையின் அழைப்பில், இட்லியை பிட்ட கரம் அப்படியே நின்றது.
“அப்டி க்.கூப்பிடலாம் தானே?” அனுமதி கேட்டு தயங்கியவளை, ஒற்றை பார்வை பார்த்துவிட்டு மீண்டும் உண்ண தொடங்க, அவன் மறுப்பு சொல்லாமல் இருந்ததே அனுமதி வழங்கிய திருப்தியை தந்தது.
“நாயகி அக்கா வீட்டுக்கு போனதா அவைய சொன்னாக” கோதை சொன்னதை காதில் வாங்காதன் போல இட்லியை விழுங்கியவன் தொண்டை குழி கண்ட வலியினை, அவன் மட்டுமே உணர்ந்தான்.
“மன்னிச்சிடுங்க மாமா.. ந்நா தேவை இல்லாம ஏதேதோ பேச போயி தானே நீய அங்கன போயிருக்கீய. நெசமா ந்நா இப்டிலாம் நடக்கும்னு நெனச்சி எதுவும் சொல்லல. அக்காவ சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வந்து பழையபடி சந்தோசமா இருப்பீங்கன்ற எண்ணத்துலதே மனசு கேக்காம பேசிப்புட்டேன்” வருத்தம் தொய்ந்த குரலில் மன்னிப்பு கேட்ட கோதையை நிமிர்ந்து பார்க்கவில்லை அவன்
“அமுதா பாவம் சின்ன பொண்ணு, அக்கா அவள பாசமா வளத்திட்டதால அவையள விட்டு குடுக்க முடியாம வாய்க்கு வந்தத பேசி இருப்பா. நீங்க எதுவும் மனசுல வச்சி வருத்தப்படாதீய மாமா..” எப்போதும் கம்பீரமாக வளம் வரும் தேவன், இரண்டு மூன்று நாட்களாக எதையோ பறிகொடுத்தவன் போல நடமாடுவதை காணும் போது குற்றவுணர்வாகி போனது.
“மச்.. எனக்கு யாரோட கரிசமும் தேவயில்ல புரிஞ்சிதா.. அது என் சம்சாரம் வீடு ந்நா நெனச்சா எப்ப வேணாலும் போவேன் வருவேன். யார் சொல்லியும் போவணும்னு எனக்கு அவசியம் இல்ல..
அங்கன போயி ஒக்காந்திருக்க அவளே என்னைய புரிஞ்சிக்காத போது, வேற யாரு என்னத்த சொல்லி ந்நா வருத்தப்படுறதுக்கு இருக்கு!!
ஹ்ம்.. அவள கொடுமை படுத்தி அடிமையா வச்சிருந்தேனாம், அவ வளத்தின கழுதையே என் மூஞ்சிக்கு நேரா சொன்னா..
அப்போ அவளும் இம்புட்டு வருசமா எங்கூட அடிமை வாழ்க்க வாழுறதா தானே, ஒவ்வொரு நாளும் நெனச்சி வாழ்ந்திருப்பா.. பொறவு எங்கிருந்து என்னைய அவ புரிஞ்சிகிட்டுருப்பா.. எப்போடா விடுதலை கிடைக்கும்னு காத்திருந்தா, கிடைச்சதும் சுதந்திரமாகிட்டா..”
கடுமை நிறைந்த விரக்தி பேச்சில், தன்னவளே தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற பெருத்த ஏமாற்றமும் ஏக்கமும் தேவன் முகத்தில் இழையோடியதை நன்கு உணரவே செய்தாள் கோதை.
“ஒங்கள புரிஞ்சிக்காம இருந்திருந்தா இம்புட்டு வருசமும் அக்கா இங்கன வாழ்ந்திருக்கவே முடியாது மாமா.. உங்க கூட இருந்தா அடிமை வாழ்க்கை என்ன? அது எப்பேர்ப்பட்ட நரகமான வாழ்க்கையா இருந்தாலும் சந்தோசமா ஏத்துக்கிட்டு வாழ அவங்க எப்பவும் தயங்க மாட்டாக. அப்பேர்ப்பட்டவங்களே இன்னும் உங்கள தேடி வராம இருக்க காரணம் என்னனு என்னைக்காவது யோசனை பண்ணி பாத்தீயலா..”
ஒவ்வொரு வார்த்தையும் நன்றாக யோசித்து பயந்து பயந்து உபயோகித்த கோதையை, கண்கள் இடுங்க பார்த்த தேவனுக்கும் அப்போது தான் அந்த யோசனையே மூளையில் முட்டியது.
“ஆமால்ல எதுக்கு அவ என்னைய பாத்ததும் ஓடி ஒளியிற அளவுக்கு அம்புட்டு பயந்தா..? என் கோவத்த மட்டும் இல்ல, என்னோட ஒவ்வொரு பரிமானத்தையும் கூட இருந்தே பாத்தவ, திடீர்னு எதுக்கு பேய பாத்தது போல என்னைய பாத்து அப்டி அரண்டு போனா” அன்று தன்னை தானே அடித்துக் காயப்படுத்திக் கொண்ட கன்றிய கரத்தை குனிந்து பார்த்தான்.
“ஐய்யோ வலிக்குமேனு.. அப்பக்கூட எனக்காக தானே என் நாயகி துடிச்சி போனா.. நாந்தே கேனக்கிறுக்கன் என்னவோ செஞ்சி அவள பயமுறுத்தி இருப்பேன். ஆனா என்ன செஞ்சேன்?” தனக்கு தானே முணுமுணுத்து யோசனையில் மூழ்கிட, கோதை சத்தமில்லாது இடத்தை காலி செய்திருந்தாள்.
“தேடி தேடி போயி பெரியவன மூள சலவ செய்யலைனா ஒனக்கு தூக்கமே வராதா டி?” கை வளைவில் இருந்த மனைவி காணாமல் போனதும் தூக்கம் தெளிந்த ஆனந்தபாலன், வெளியே கேட்ட பேச்சி சத்தத்தில் அமைதியானவன், கோதை உள்ளே வந்ததும் மீண்டும் தன்னுள் இறுக்கி வைத்துக் கொண்டான்.
“அக்காவ பிரிஞ்சி அவைய கஸ்டப்படுறத பாக்கவே பாவமா இருக்குங்க, அதே என்னால முடிஞ்ச அளவுக்கு அக்கா கூட சேர என்ன வழியோ அதை பண்ணேன். அவைய செஞ்ச தப்ப உணர்ந்து அதை சரி பண்ணா தானே அக்கா இங்கன வருவாக” அவன் மார்பு சூட்டில் மூச்சிமுட்டி திணறினாலும் விலகாமல் பதில் தந்தாள்.
“ம்.. பொம்பளைங்க எல்லாம் ஒன்னு சேந்து ஆம்பளைங்க எங்கள போட்டு தள்ள முடிவெடுத்துடீய.. நடத்துங்க நடத்துங்க.. கடைசில என் அப்பன் சொன்னது நெசமாயிபுடுச்சி பாத்தியா..” அலுப்பாக கூறிய கணவனை தலை தூக்கி பார்த்த கோதை கண் சிமிட்டி சிரிக்க, அச்சிரிப்பினில் தொலைந்தான் கட்டுக்காளை.
“கோத..”
“என்னங்க”
“மச்.. ஒண்ணுமில்ல டி..”
“ஏதாச்சு சொல்லனுமா?” தலை தூக்கி அவன் முகம் பார்த்தாள்.
“சொல்ல நெறைய இருக்கு டி. ஆனா எங்க தொடங்கி எங்க முடிக்கனுதே தெரியல.. என்னவோ தெர்ல, மனசெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு” தெளிவில்லாத முகத்துடன் நெஞ்சை நீவியவன் முன்நெற்றி முடியை இதமாக வருடியது கோதையின் கரம்.
“கண்டதும் போட்டு குழப்பிக்காம, நிம்மதியா இருங்க, எப்பப்ப என்னென்ன நியாபகம் வருதோ ஒவ்வொன்னா சொல்லுங்க நிதானமா கேட்டுக்குறேன். இப்ப தூங்குங்க” நெஞ்சில் சரிந்த அவன் முகத்தை மென்மையாக அணைத்து தட்டிக்கொடுக்க, அவள் வாசத்தை ஆழ ஸ்வாசித்தவன் மனம் மட்டும் தீராத குழப்பத்துடனே அலைமோதியது.
** ** **
“இந்த தரமும் தோல்வி.. எப்டி எப்டி எப்டி..?
அம்புட்டு செலவு பண்ணி காச வாரி இறைச்சும், அந்த தேவா பைய என்னைய கேவலமா தோக்கடிச்சிட்டானே..
இவைன் வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த அளவுக்கு இந்த ஊரையே, என் பார்வை அசைவுல அடக்கி ஆண்டேன் தெரியுமா.. ஆனா எப்போ இந்த பைய எனக்கு போட்டியா வந்தானோ அன்னைக்கே என்னைய சல்லிப்பைசாவா ஆக்கிப்புட்டான்”
கோவத்தில் தாடை இறுக கத்திக் கொண்டிருந்த சக்கரை பக்கத்தில், அவரது ஆட்கள் யாருமே செல்லாமல் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.
“ந்நா ஆசைப்பட்ட பதவி, ஆளுமை, அதிகாரம் எல்லாமே அனுபவிக்கனும்னா, இனிமே அவன நிம்மதியா விட்டு வைக்க கூடாது..” தீர்க்கமாக மனதில் எண்ணிய சக்கரபாண்டி,
“காத்தா.. மலையாண்டி எங்க டா இருக்கீங்க..” நாயகியை பின்தொடர சொன்னவர்களை கத்தி அழைக்க,
“ஐய்யா” பவ்யமாக முன்னால் வந்து நின்றனர் இருவரும்.
“இன்னும் ஒரு வாரத்துல அந்த தேவா பயலுக்கு கல்யாணம், அதுக்குள்ள அவன் மொத தாரத்து கதைய முடிச்சி, அந்த பழிய தூக்கி தேவா பேர்ல போடுங்க.
யார் கேட்டாலும் மானம் மரியாதைய நட்டாத்துல விட்டுட்டு போன கோவம் தீராம, ப்ரெசிடெண்ட்டு பதவிக்காக பதுங்கி இருந்துட்டு, பதவி நிரந்தரமானதும் அவனே அவன் பொஞ்சாதிய ஆள வச்சி கொன்னுபுட்டதா கதைய கட்டுங்க..
பதவிக்கு பதவியும் பறிபோய்டும், கல்யாணத்துக்கு கல்யாணமும் நின்னுடும், அவம்மேல உள்ள மதிப்பு மரியாதை அத்தனையும் ஒன்னுவிடாம சனங்க மத்தியில இருந்து நாரிபோயி, செய்யாத கொலைப்பழிக்கு அசிங்கப்பட்டு அவமானப்பட்டு ஜெயிலுக்கும் போயிடுவான்..”
கொடூரமான திட்டம் தீட்டி சக்கரபாண்டி அரக்க சிரிப்பு சிரிக்க, அவன் அடியாள் இருவரும் அசட்டு சிரிப்போடு, “ஐய்யா..” என மண்டையை சொரிந்தனர்.
“என்னங்க டா.. உங்க சிரிப்பே ஒரு மார்க்கமா இருக்கு” இருவரையும் கூர்ந்தார் சக்கரை.
“இல்லைங்கய்யா அன்னைக்கு அவன் பொஞ்சாதிய ருசி பாத்துட்டு போட சொன்னீங்க. இன்னைக்கு வெறும் போட்டு தள்ள மட்டும் சொல்றீங்களே, நல்லா சொலையான கட்ட அதே..” அவன் தயங்கி தயங்கி சொல்ல, அதற்கும் பலமான சிரிப்பு சக்கரையிடம் இருந்து வந்தது.
“டேய் முட்டாள்.. அன்னைக்கு இருந்த நெலம வேற பெருசா பின்விளைவுகளை பத்தி யோசிக்காம அப்டி சொல்லிப்புட்டேன். ஆனா இப்ப நல்லா யோசனை பண்ணி பாத்தா, அவள ருசி பாத்து சாவடிக்கிறது எல்லாம் நமக்கே அது பெரிய ஆபத்தா முடிஞ்சிடும்.
அந்த தேவா பைய லேசுபட்டவன் இல்ல டா.. என்ன இருந்தாலும் அவ அவன் பொஞ்சாதி, லேசா நம்ம மேல சந்தேகம் வந்தாலும் ஒருத்தர் கூட உசுரோட இருக்க முடியாது.. எல்லாத்துக்கும் மேல அவனுக்கு அவன் தம்பி அம்புட்டு பக்கபலமா இருக்கான்..
அண்ணி பாசத்துல உசுர கூட விடுவான்.. அதுனால அவள தொடாம, அவ உசுர மட்டும் எடுங்க போதும்”
திட்டவட்டமாக சக்கரை எச்சரித்துவிட்டு செல்ல, அந்த எச்சரிக்கையை தாண்டிய இச்சை அவ்விருவர் கண்களிலும் நிரம்பி வழிய, ஒருவரை ஒருவர் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர்.
** ** **
பஞ்சாயத்து அலுவலில் தேவாக்கு பலத்த மரியாதை செலுத்தி பதவி ஏற்பு விழாவினை சிறப்பாக நடத்தி முடித்ததும், மக்கள் கூட்டம் கூடி, மாலை மரியாதை என கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தது தேவனை.
ஆனால் தேவனோ, அதில் எதிலும் பெரிதாக நாட்டமின்றி பெயருக்கு சிரித்து வைத்து, தனது திட்டங்களை மக்களிடையே பேசி, அவர்களை மகிழ்வித்தவன் நினைவு முழுக்க மனைவியிடம் தான் தரிகெட்டு திரிந்தது.
இந்நேரம் ஆரத்தி, பூஜை என்று அனைவருக்கும் கறி விருந்து வைத்து சந்தோசத்தில் தன்னை கொண்டாடி தீர்த்து, காதலி போல தன்னையே சுற்றி சுற்றி வந்து கள்ளமாக ரசித்து என கிறுக்கி போல ஏதேதோ செய்து கிறக்கமூட்டி வைப்பாளே..
அவள் நினைவை நினைத்து தனியாக சிரித்தவன் மூச்சி, மனைவியின் அருகாமைக்கு ஏங்கி ஏக்கமாக வெளிவந்தது.
ஆனால் கோதையும் சும்மா இல்லையே, நாயகி இருந்து பொறுப்பாக என்னென்ன செய்திருப்பாளோ அவை அனைத்தும் செய்தாள் தான். ஆனாலும் மனைவி போல் வருமா அவனுக்கு? அவளிடமிருந்து கிடைக்கும் அரவணைப்பும் அக்கறையும் அவளிடம் மட்டுதானே உணர்ந்து அனுபவிக்க முடியும்.
** ** **
“எனக்கென்னவோ அந்த தம்பி அன்னைக்கு ஒன்னைய அழைச்சிட்டு போகதே வந்திருக்கும்னு தோணுது நாயகி. நடுவுல அந்த அமுதா புள்ள என்னென்னவோ பேசி தம்பி கோவத்த தூண்டி விட்டுடுச்சி” கவலையாக சொன்ன லட்சுமியை மௌனமாக சில நொடி பார்த்த நாயகி, பெருமூச்சு விட்டாள்.
“இருக்கலாம்மா.. ஆனா என்ன புண்ணியம்? அவையலுக்கு என்னால புள்ள குட்டி பெத்து குடுக்க முடியுமா.. முடியாதே.. பொறவு எதுக்கு அவைய சந்தோசத்துக்கு ந்நா ஒருத்தி குறுக்க நிக்கணும்” துக்கம் அடைக்கும் தொண்டையை செருமிக்கொண்ட நாயகி, இப்போதும் ஒன்றும் அறியாத மண்டாக தான் இருந்தாள் கணவன் விடயத்தில்.
“என்னவோ போ.. அன்னைக்கே நிதானமா பயப்படாம உன் புருசங்கிட்ட பேசி இருந்தா, எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்திருக்கும். வீணா நீ பயந்தடிச்சி ஓடி அந்த தம்பிய கோவப்படுத்தி உட்டுப்புட்ட. பாவம் நல்ல தம்பி டி” என்றார் தேவனின் நல்ல செயல்களை எண்ணி கவலையாக.
என்ன தான் தண்டாயிதம் இவர்களை வசதி பார்த்து ஒதுக்கி வைத்திருந்தாலும், இதுநாள் வரை மருமகன் என்ற ஸ்தானத்தை விட்டுக்கொடுக்காது, இருவருக்கும் என்னென்ன தேவையோ அதனை அனைத்தையும் முன்வந்து செய்ய தேவன் தயாராக தான் இருக்கிறான்.
ஆனால் பெண்ணை கொடுத்தவர்கள் தானே அதனை ஏற்க சங்கோஜப்பட்டு தடுத்து வருகின்றனர். ஒரே ஒரு சொல் தவறாக வந்துவிட்டாலும், ஏழையின் சுயமரியாதை அடிப்பட்டு போவதை தாண்டி, உயிர் வதை கண்டு விடுமே..
அப்படி இருந்தும் வெல்லத்தில் அடித்து சென்ற வீட்டை சீரமைத்து, வசதியாக ஓடு போட்ட வீட்டை கட்டிக்கொடுபதற்குள் அவர்கள் முகத்தை பார்க்க முடியவில்லை. அத்தனை தயக்கம் இருவருக்கும்.
வயது முதிர்ந்த பின்னும் சொந்த மருமகனிடம் கூட தன்மானம் விட்டு, கிடைக்கும் சலுகையில் ஒய்யாரமாக வாழ நினைக்காமல், சுயமாக உழைத்து வாழ நினைக்கும் அவர்களின் சுயமரியாதையை மதித்து, தூர இருந்தே இருவருக்கும் தேவையான அனைத்தும் தானாக கிடைக்கும்படி செய்து விடுவான்.
அது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் சகஜமாக உரிமை எடுத்துக்கொள்ள தான் இன்றளவும் தயக்கம் கொள்கின்றனர். அது ஆரம்பத்திலே தண்டாயிதபாணி அவர்களிடம் தகுதி பார்த்து நடந்துக்கொண்ட முறையினால் கூட இருக்கலாம்.
அந்த எண்ணத்தில் மூழ்கி இருந்த லட்சுமியிடம் சொல்லிக்கொண்டு, மாலை நான்கு மணியை போல் கடைக்கு கிளம்பி சென்ற நாயகியை சூழ்ந்து கொண்டது பேராபத்து.
தன் மானத்தை காக்க வழியறியாமல் கண்ணீரும் கதறலுமாக காட்டு வழி செம்மண் பாதையில் ஓடிக்கொண்டிருந்த நாயகியை, இரு வெறிப்பிடித்த மிருகமும் ஒன்றுகூடி வளைத்துப் பிடித்து, பெரிய பாறை ஒன்றில் அவள் தலையினை மோதி இருந்தனர்.
தொடரும்.