அத்தியாயம் – 28
அண்ணி..
அக்கா..
நாயகி.. பலவிதமான குரலில் தவிப்பாக அழைத்த ஒவ்வொரு அழைப்புக்கும், மெல்ல இமை அசைத்து மயக்கத்தில் இருந்து விடுபட்டு கண் விழித்த வேகத்தில், பயந்தடித்து எழுந்த நாயகியை கண்டு அனைவரும் பரிதவித்து போயினர்.
“நாயகி ஒண்ணுமில்லமா பயப்படாத” லட்சுமியின் ஆறுதலில் சற்றே ஆசுவாசம் அடைந்த நாயகி, சுற்றி எங்கிலும் கணவனை தேட, எங்குமவன் இல்லாமல் போகவே, ஏமாற்றத்திலும் அவனுக்கு என்னானதோ என்ற கவலையிலும் விழிநீர் சிந்த மௌனமாக அமர்ந்திருந்தவளை, வேதனையாக பார்த்தனர் மற்ற அனைவரும்.
தேவன் செய்த அலப்பறையில் மயங்கி சரிந்த நாயகியை, அவனே தான் உயிர் வலியோடு தூக்கி படுக்க வைத்தது. கண்ணீரும் துடிப்புமாக அவள் கிடந்த கோலம் இதயத்தை குத்தவில்லை. மாறாக அவள் தன்னை பார்த்து அஞ்சிய அம்பகம் இரண்டும் அவனை கூர்வாளாய் குத்திக் கிழிக்க இதயத்தில் பெருவலி கண்ட தேவன், தன் கைவலி மறந்து அறையை விட்டு வெளியே வந்தான்.
அதுவரையில் உள்ளே கேட்ட நாயகியின் அலறல் சத்தத்தில் வெளியே இருந்த அனைவருமே பீதியாகி, கதவை படபடவென தட்டிக்கொண்டிருந்தவர்கள், தேவன் வந்தது தான் தாமதம் உடனே சென்று நாயகி நிலை கண்டு பதறி போயினர்.
“என்ன தம்பி ஆச்சி.. எங்க பொண்ண உங்களுக்கு புடிச்சி போனதால தானே நாங்க கட்டி குடுத்தோம். ஆனா அவ இங்கன வந்து சொல்ற ஒவ்வொரு விசயமும் கேட்டு பெத்தவங்க எங்களுக்கு கதிகலங்குது தம்பி”
தங்கராசு ஓடி வந்து கலங்கி நிற்க, அமைதியை மட்டுமே தந்து நின்றான் தேவன்.
“என் அண்ணிய என்ன பண்ணீங்க. வீட்ல இருக்கும் போதுதா அவங்கள ஒரு மனுசியா கூட மதிக்காம, கொத்தடிமை மாதிரி நடத்தி, அப்பா பேச்சை கேட்டு பயம்புறுத்தி வச்சிருந்தீங்க. இங்க வந்தும் அவங்க நிம்மதிய கொலைச்சி மயக்கமாகுற அளவுக்கு கத்தி அராஜகம் பண்றீங்க.
என்ன யாரும் உங்க முன்னாடி குரல ஒசத்த மாட்டாங்கன்ற தகிரியத்துல உங்க இஸ்டத்துக்கும் ஆடுறீங்களா..”
நாயகியின் நிலைகண்டு கொதித்து போன அமுதா, ஒரு முடிவோடு அண்ணன் முன்பு நின்று ஆங்காரமாய் கேள்விகனை தொடுக்க, தேவனின் ஆழுத்தமான பார்வை அவளை எச்சரிக்கை விடுதத்து எதையும் கவனிக்காதவளாக,
“ந்நா உங்க மானம் மரியாதைய கொலைச்சிட்டு ஹரிய கட்டிக்கிட்டதால தானே என் அண்ணி கழுத்துல இருந்த தாலிய அத்துவீசி வெளிய தொரத்தினீங்க.. அப்டின்னா உங்க மரியாதை போக நடந்துகிட்டதுக்கு முதல் காரணமே, நீங்களும் அப்பாவும்தா அண்ணா..”
அழுத்தம் திருத்தமாக குற்றத்தை அவர்கள் மீதே வைக்க, ஆத்திரத்தில் பற்கள் அரைப்பட்டாலும் புருவம் இடுங்கினான் தேவன்.
“பொம்பள பேச எடம் குடுத்தா, திமிரு கூடிபுடும்.. பொம்பளக்கு அதிக எடம் குடுத்தா, ஏறி தலைக்கு மேல உக்காந்துப்பா.. பொம்பள தலைமை தலைதூக்கினா ஆம்பளைங்க மூலைல முடங்கி போய்டுவோம்.. பொம்பள என்னைக்குமே ஆம்பளைங்களுக்கு தலை வணங்கிதா நடக்கணும்.
அப்டி இப்டினு பொம்பளைங்களுக்கு எதிரா, தப்பான கருத்தை உங்க ரெண்டு பேத்துக்கும் பதிய வச்சி.. பதிய வச்சி.. இன்னைக்கு கட்டின பொண்டாட்டடிக்கே எதிரா நிக்கிற நிலைமை யாரால வந்தது..?
எல்லாமே நம்ம அப்பாவால வந்தது.
மாப்பிளை பாத்தீங்க சரி, என்னைய ஒருவார்த்தை கேட்டீங்களா? உனக்கு பிடுச்சிருக்கா அமுதானு. இல்லையே!
எனக்கு புடிச்சா என்ன புடிக்காட்டி என்ன.. எக்கேடாவது போயி கஷ்டப்படட்டும்னு தானே, அத்தனை பணத்தாசை பிடிச்ச தடியனுங்க இருக்க வீட்ல, ஒன்னுமே தெரியாத என்னைய கட்டிகுடுக்க பாத்தீங்க.”
தனது இத்தனை நாள் ஆதங்கத்தையும் அடி ஆழத்தில் இருந்து வெளிக்கொணர செய்ய,
“அம்மு, அமைதியா இரு. இது அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைப் ப்ராப்லம் நீ தலையிடாத வா” தேவனின் கடுமை உணர்ந்தும், அவன் வயதுக்கு மரியாதை தந்தும், ஹரி அவளை அடக்க முயற்சிக்க,
“இல்ல ஹரி, இப்டி எல்லாத்தும் அமைதியா போய்ட்டு வாய மூடிட்டு இருந்தா, இவங்க பண்ற அக்கிரமங்களால என் அண்ணிதா மேலும் மேலும் கஷ்டப்பட்டு நிப்பாங்க” என்றாள் தேவனை பார்த்தபடியே.
“எனக்கு ஹரிய புடிச்சிது, உங்கள்ட்ட அப்பாட்ட ஏங்கி தவிச்ச பாசத்துக்கு ஈடு கட்டும் விதமா, ஹரி என்னைய அவ்வளவு கேரிங்கா பாசமா பாத்துகிட்டான். ஆம்பள பொம்பளனு பிரிச்சி பழகுறவன் இல்ல. மனிதாபிமானத்தோட அக்கறை காட்டுறவன்.
இப்ப ஹரியோட என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா நீங்க பாத்த மாப்பிளைய கட்டிக்கிட்டு இருந்தேன்னா, இந்நேரம் இன்னொரு நாயகியா அடுப்படிக்கும் கட்டிலறைக்கும் ஓடி ஓடியே, அடிமை வாழ்க்கைல மனசு வெறுத்து போயிருந்திருப்பேன் அண்ணா..
பொம்பளைங்க நாங்களும், புடிச்சவங்களோட நாலு சந்தோசத்தை அனுபவிக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே!” வேதனையாக ஒலித்த தங்கையில் வார்த்தையில், கனத்த இதயத்தை மேலும் மேலும் கனக்க வைத்து கட்டி ரத்தம் தேங்கிய உணர்வோடு உடல் இறுகி நின்றான் அமரதேவன்.
“அப்பா அண்ணனுங்கனு நீங்க மூணு பேர் இருந்தும் அன்னைக்கு ந்நா பாசத்துக்கு ஏங்கி தவிச்ச போது, என் அண்ணி மட்டும் அம்மா போல வந்து தாங்கலைனா, இன்னைக்கு ந்நா எந்த நிலைமயில இருந்திருப்பேன்னு யாருக்குமே தெரியாது. அந்த கவலையும் உங்களுக்கெல்லாம் கிடையாது.
நம்ம அப்பாதா அந்த காலத்து மனுசன் ஆனா உங்களுக்கும் ஆனந்து அண்ணனுக்கும் நிகழ்காலம் அத்துபடி தானே.. பொறவு எதுக்கு ஆம்பள பொம்பள ஈகோவ மூளை முழுக்க பரப்பி வச்சிருக்கீங்க அண்ணா..
பொம்பளைனாலே ஆம்பளைக்கு பணிஞ்சி போகணும்ற உங்க நியதிய தூக்கி எறிஞ்சிட்டு, பொம்பளைய மொதல்ல ஒரு மனுசியா மதிக்க கத்துக்கங்க அண்ணா..
ஒவ்வொரு பொம்பளைக்குள்ளும் உணர்வுகள் இருக்கு. ஆசைகள் இருக்கு. நிறைய நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. சோகங்கள் இருக்கு. குட்டி குட்டி சந்தோசமும் இருக்கு.
இதையெல்லாம் உள்ளுக்குள்ள போட்டு புதச்சிட்டு, வெறும் ஜடமா என் அண்ணி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் நரகம் அண்ணா.. சத்தியமா என்னால எல்லாம் என் அண்ணி போல தியாகியான ஒரு வாழ்க்கைய வாழ முடியாதுனுதா சாக துணிஞ்சேன்.
ஆனா அண்ணி என்ன காப்பாத்தி, அவங்களே கல்யாணமும் பண்ணி வச்சி, இதோ இப்ப உங்க முன்னாடி ரெட்ட உசுரா நிக்க காரணம் என் அண்ணி மட்டும்தா.
அவங்கள நீங்க மதிக்கலைனா கூட பரவால்ல அண்ணா.. ஆனா திரும்ப திரும்ப தேடி வந்து கஸ்டம் மட்டும் படுத்தாதீங்க. ஏற்கனவே நிறைய மனஉளைச்சல்ல தனியா தவிச்சு நிக்கிறாங்க, அது போதாதுன்னு மலடி மலடினு அவங்கள ஒவ்வொரு முறையும் வார்த்தையால குச்சிக்கிழிச்சி அப்பா பண்ண கொடுமைகள எல்லாம் கூட இருந்து பாத்தவ ந்நா.
இதுக்கு மேலயும் என் அண்ணி படுற கொடுமைய எல்லாம் அமைதியா நின்னு என்னால வேடிக்கை பாக்க முடியாது”
தைரியத்தை வரவழைத்து முதல் முறையாக அண்ணனை எதிர்த்து பேசிய அமுதா, அவனது கம்பீர தோரணை மெல்ல மெல்ல தளர்வதை கண்டு, தங்கையவள் உள்ளம் பதகளித்து விம்மியது.
“உங்க மேல எனக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு அண்ணா. உங்கள எதிர்த்து பேசுற தைரியம் எல்லாம் எனக்கு துளியும் இல்ல. ஆனா என் அண்ணி கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல அண்ணா..
உங்க இஸ்டத்துக்கு தாலி கட்டி, அந்த பொண்ணோட உணர்வுகளை மதிக்காம கட்டின தாலிய அறுத்து வீசுற உரிமைய உங்களுக்கு யாரு அண்ணா குடுத்தது? அந்த அளவுக்கு உங்க கோவம் உங்க கண்ண மறச்சிடுச்சா என்ன?”
கண்ணீரோடு குரல் நடுங்க கேட்டிட, தேகம் தளர இடிந்து நின்றவனுக்கு பேச நா எழவில்லை என்பதே நிஜம்.
அவன் ஒன்றை நினைத்து இங்கு வந்திருக்க, ஆனால் நடந்த சங்கதியோ முற்றிலும் அவனை குற்றவாளியாய் மாற்றி அமைத்து, இரும்பு இதயத்தை பலவீனம் ஆக்கி சுக்களாக நொறுக்கி இருந்தது.
கால்கள் தளர தேவன் வீட்டை விட்டு வெளியேறி இருக்க, அண்ணனை எதிர்த்து பேசியதை தாங்காது, உடைந்து அழுந்த அமுதாவை அணைத்து தேற்றி இருந்தான் ஹரி.
தேவன் சென்ற செய்தி கேட்டு ஏக்கமாக வாசலை வெறித்த நாயகியின் கண்கள், கண்ணீரில் பூத்து நின்றது.
தொடரும்.