Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 27

வதைக்கும் அகிம்சையே! – 27

by Indhu

அத்தியாயம் – 27

“அண்ணிஇஇ..” வாசலில் கேட்ட கண்ணீர் ததும்பும் குரலில், நெஞ்சில் ஈரம் கசிய பெற்ற உள்ளம் துடிக்கும் உணர்வோடு ஓடி வந்த நாயகி, லேசான மேடிட்ட வயிற்றோடு நின்றிருந்த அமுதாவை கண்டதும் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருக்கும் போதே, மீண்டும் “அண்ணிஇஇ..” என்று தவிப்போடு நாயகியை அணைத்துக்கொண்டாள் அமுதா.

“அமுதா எப்டி இருக்க தங்கோ..” வாரி அணைத்து முத்தமிட்டாள் அவள் உச்சியில்.

“ந்நா நல்லா இருக்கேன் அண்ணி. ஆனா என்னால நீங்கதா இப்டி கஷ்டப்பட்டு நிக்கிறீங்க” கண்ணீரோடு உரைத்தவளை, மௌனப் புன்னகையோடு எதிர்நோக்கினாள் நாயகி.

“இது ஒன்னால இல்ல அமுதா, என்னைக்காவது ஒருநாள் ந்நா அந்த வீட்டவுட்டு வெளிய வர்றவதே. உன் அண்ணனே என்னைய வெளிய தொரத்தி அடிக்கலைனாலும் நிச்சயமா உன் அப்பா என்னைய அங்கன விட்டுவச்சிருக்க மாட்டாக. அதுனால நீயி எதைப்பத்தியும் நெனச்சி வருத்தப்படாத”

அவளுக்கு ஆறுதல் கூறிய நாயகி, கவனிப்பில்லாது நின்றிருந்த அமுதாவின் கணவனை அவசரமாக உள்ளழைத்தாள்.

“உள்ள வாங்க தம்பி, ஒக்காருங்க” இருக்கையை இழுத்துப் போட்டு அமர சொல்ல,

“நீங்களும் உக்காருங்க க்கா..” மரியாதையாக சொன்னவன், நாயகியையும் அமர்த்திக்கொண்டு அமுதாவோடு தரையில் அமர்ந்த ஹரி,

“இந்தாங்க க்கா, வாங்கிக்கங்க” ஒரு பெரிய பையை நீட்டிட,

“என்ன தம்பி இதெல்லாம்” சங்கட்டமாக நெளிந்தாள்.

“ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வர்றோம் சும்மா எப்டி வர்றது” என்றிட அப்போதும் தயக்கம் தான் அவளுக்கு.

“இல்ல தம்பி.. அது..”

“என்ன இல்ல தம்பி.. வார்த்தைக்கு வார்த்தை தம்பி தப்பினு கூப்பிடறீங்க, ஆனா தம்பி வாங்கிட்டு வந்ததை மட்டும் வாங்க இப்டி தயங்குறீங்களே.. இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல அக்கா..” பொய் கோபத்தில் அலுத்துக்கொள்ள,

“அச்சோ தம்பி அந்த பைய குடுங்க. ந்நா போயி உங்களுக்கு டீ போட்டு கொண்டாறேன்” ஹரி கையில் இருந்த பையை அவளாகவே வாங்கிக்கொண்டு மணக்க மணக்க டீயும், அமுதாக்கு பாலும் கொண்டு வந்து கொடுத்து, இருவரது நலமும் குழந்தையின் வளர்ச்சியும் ஒன்று விடமால் ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டாள்.

“தலை பிரசவம் அம்மா வீட்லதே பாக்கணும், ஆனா ஒனக்கு ந்நா என்ன செய்ய போறேன் டி” கலங்கி தவித்த நாயகி மடியில் ஆயாசமாக படுத்துக்கொண்ட அமுதா,

“நீங்க எங்க இருந்தாலும் அதுதா என் அம்மா வீடு. எனக்கு நீங்க மட்டும் போது அண்ணி. அப்பா அண்ணனுங்க யாரும் வேணா.. ஒரு முழம் பூவும், அரை டசன் வளையளும் உங்க கையாள மாட்டிவிட்டு மருத்துவச்சிய கூட்டியாந்து எனக்கு இங்கனவே கூட பிரசவம் பாருங்க, ஆனா வசதி குறைச்சல் அது இதுன்னு சொல்லி என்னைய கண்டுக்கிடாம மாமியார் வீட்லே உட்டுபுடாதீங்க அண்ணி. பொறவு ந்நா உங்களோட பேசவே மாட்டேன்”

அவள் கரத்தை இழுத்து தன் கழுத்தோடு சுற்றிக்கொண்டு ஆசையாக அவள் மடியில் உருல, நாயகியின் நெஞ்சம் பூரித்து போனது.

“ஏய் அம்மு கொஞ்சமாவது அடக்கமா படு டி, நீ பிறண்டு உருளுறது அந்த அக்காக்கும் வலிக்கும், வயித்துல உள்ள புள்ளைக்கும் வலிக்கும் போல” காதல் மனைவியின் சேட்டையில் ஹரி நக்கலடிக்க,

“உனக்கு பொறாமை டா, ஆசையா இருந்தா நீ போயி உங்க அம்மா மடில படுத்து உருலு. எங்க அண்ணி என்னைய எதுவும் சொல்ல மாட்டாங்க.. அப்டி தானே அண்ணி” அன்னையான அண்ணியிடம் கன்னம் கிள்ளி கொஞ்ச, மகளான குட்டி நாத்தியை நாயகி விட்டுக்கொடுப்பாளா!!

“நீ படுத்துக்க தங்கோ” அவள் தலை வருடி புன்னகைத்தவளை, இருவரும் கண்டு புன்னகை செய்தனர்.

அடித்து உதைத்து மிரட்டியாவது மனைவியை இழுத்து செல்ல வந்த தேவனின் பார்வையில் இவையெல்லாம் தப்பாமல் பட்டுவிட, ஏக்கத்திலோ அல்லது கோபத்திலோ கொலுந்து விட்ட கோபத்துடன் படாரென உள்ளே வந்தவனை கண்டநொடி, “அடி யாத்தே.. இவையலா..” பேயை பார்த்தது போல விழுந்தடித்து அறைக்குள் ஓடி ஒளிந்த மனைவியின் செயலில், என்னத்தையோ பரிகொடுத்த உணர்வில் இதயம் அடிபட்டு துடித்தது.

அண்ணனை பார்த்ததும் உள்ளுக்குள் அரண்டாலும் தைரியமாக பின் நகர்ந்து கணவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்ட தங்கையின் செயலும், தவறாமல் அவன் கண்ணில் விழ, விரக்தியாக இதழ் கோணியது.

“ஹ்ம்.. வெளிய போனவைங்க பூரா ஒன்னு சேந்து கொண்டாடி சிரிக்குதுங்க. ஆனா இதுங்க நல்லதுக்காகவும், வசதியா வாழ வேண்டியும் பாத்து பாத்து எல்லாமே செஞ்ச என்னைய நயா பைசா அளவுக்கு கூட மதிக்கல. இதுக்கெல்லாம் சேத்து வச்சி இருக்கு..”

உள்ளுக்குள் புழுங்கியபடி பின்கை கட்டி கடுமையாக பற்களை கடித்த தேவனை, இன்னும் வாய் மொழியாக அண்ணா என விளிக்காது, கணவன் கரத்தை மட்டுமே இறுக பற்றி இருந்த அமுதாவை எரிக்கும் பார்வை பார்த்தான்.

தேவனின் கடும் பார்வையில் தொண்டை வறண்ட ஹரி, “அம்மு போலாமா” என்றான். எங்கே தங்களால் சண்டை முற்றி ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ என்ற எண்ணத்தில்.

“என்ன ஹரி அவசரம். இது எங்க அண்ணி வீடு. நாம அவங்கள பாக்க தானே வந்தோம். நீ உக்காரு, எனக்கு பசி எடுக்குது சோறு போட்டு எடுத்துட்டு வர்றேன்”

அண்ணங்காரன் நிற்பதை கண்டுகொள்ளாது, நாயகி செய்து வைத்த உணவினை தட்டில் போட்டு எடுத்து வந்து, ஹரிக்கு ஒரு வாய் கொடுத்துவிட்டு தானும் அவனோடு ஏதோ சிரித்து பேசி உண்ணத் தொடங்கி இருக்க, கபகபவென் எரிந்தது தங்கையின் உதாசீனம்.

“அச்சோ இவைய என்னத்துக்கு இங்க வந்தாகனு தெரியலையே! ஒருவேளை அமுதா வந்த விசயத்த கேள்விப்பட்டு, அவள ஏதாவது சொல்ல வந்திருப்பாகளா?” உள்ளே பதட்டமாக நின்ற நாயகிக்கு, நீண்ட நாட்களுக்கு பிறகான கணவனின் தரிசனத்தை கண்ணார கண்டு மகிழ முடியவில்லையே என்ற வருத்தத்தில் கண்ணீர் முட்டியது.

“ஏய்.. நாயகி.. வெளிய வாடி..” பொறுமை இழந்த தேவன் கத்திய கத்தில், உள்ளிருந்தவளின் இதயமே அதிர்ந்து ஆட்டம் கண்டது.

“ஏய் நீ வர்றியா இல்ல ந்நா உள்ள வரவா டி ..” பின்னங்காலால் வேட்டியை நெம்பி எடுத்து முட்டிவரை கட்டிக்கொண்டு உள்ளே பாய போன தேவன் முன்பு அரணாக நின்றாள் அமுதா.

“அண்ணா இப்ப எதுக்கு இங்க வந்து கத்துறீங்க.. அதா அண்ணிக்கும் உங்களுக்குமான உறவு என்னைக்கோ முடிஞ்சி போச்சே, உள்ளாட்சி கட்சி தேர்தல்லையும் ஜெயிச்சாச்சி இனி அடுத்தகட்டம் கல்யாணம் தானே. பொறவு எதுக்கு இங்க தேவை இல்லாம வந்து கத்தனும்”

அமுதாவின் கேள்வியில் ரத்தம் கொதித்துப் போன தேவன், கொஞ்சமே கொஞ்சமாக தொப்பை போட்டதை போல இருந்த அவளது குட்டி வயிற்றில் அழுத்தமான பார்வை பதித்து,

“வயித்து புள்ளகாரியா இருக்கியேன்னு பாக்குறேன். இல்ல நீ பண்ண காரியத்துக்கெல்லாம் சேத்து வச்சி கொண்டேபுடுவேன். போ.. போயி உன் அண்ணி செஞ்ச சோத்த பெனஞ்சி கொட்டிக்க” தங்கையிடம் கட்டுக்கடங்கா கோபத்தில் காய்ந்து விட்டு மீண்டும் மனைவியை தான் கத்தினான்.

“ஏய் இந்தா டி ஆள வச்சி பேச வைக்கிறியா..மரியாதையா வெளிய வந்திடு இல்ல நடக்குறதே வேறயா இருக்கும்” அமுதாவை சட்டை செய்யாது கத்த, உள்ளிருந்த நாயகிக்கு அச்சத்தில் உடல் உதறல் எடுக்க தொடங்கியது.

“என் மூஞ்சில முழிச்சா ந்நா செத்ததுக்கு சமானம்” அன்று அத்தனை கோபத்துடன் விளித்தவன் வார்த்தை மீறி, எப்படி அவன் முகத்தில் முழிப்பது? என்ற தவிப்போடு மனைவியவள் தவித்து நிற்க, இவன் விடுவதாய் இல்லை.

விட்ட டோஸில் அரண்டு போன அமுதாவிற்கு அதற்கு மேலும் சோறு இறங்குமா! முகம் வெளிறி போனவளை தன் கைவளைவில் நிறுத்திக்கொண்ட ஹரி, “இவ்வளவு பயத்தை வச்சிக்கிட்டு எதுக்கு டி அவர்கிட்ட போயி வாங்கி கட்டிக்கிட்டு வர்ற” அவள் பயந்த முகம் பார்த்து உள்ளுக்குள் சிரிப்பாக வந்தது அவனுக்கு.

“மச்.. சும்மா இரு ஹரி.. நானே பயப்படாம நிக்க படாத பாடுபட்டு அவர வெறுப்பேத்தி வெளிய அனுப்ப பாத்தேன், ஆனாலும் மசியாம எப்டி அண்ணிகிட்ட வீஞ்சிக்கிட்டு போறாரு பாரு. அண்ணி வெளிய வந்தா அடிச்சி கிடிச்சி போட்டுடுவாரோனு பயமா இருக்கு டா” தேவனின் கோவத்தில் நடுங்கிய அமுதா, மீண்டும் அவனிடம் பேசவே அஞ்சி நின்றாள்.

“நாயகிஇஇ.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. கதவ தொற டி” கதவை ஓங்கி ஒரு எட்டி விட்டதில், அது தானாக திறந்துகொண்டதும் உள்ளே புகுந்த வேகத்தில் மீண்டும் கதவடைத்துக்கொள்ள, வெளியே நின்றிருந்த இருவருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது என்றால், அப்போதே வெளியே சென்று வந்த நாயகியின் தாய் தந்தை இருவரும் தேவனின் ருத்ர அவதாரம் கண்டு மிரண்டு போயினர்.

இறுகிய முகம் துடிக்க, கோபத்தில் விடைத்த நெஞ்சோடு தன் எதிரே ஐய்யனார் உருவத்தில் நின்றிருந்தவனை கண்டு,  வாய்பொத்தி அச்சத்தில் நடுநடுங்கி போன நாயகி, பொற்பாதம் தரையில் ஊன்றி பின்னோக்கி மெல்ல நகர்ந்து சுவற்றில் மோதி கலங்கி நின்றவளை, தலைசாய்த்து கண்கள் சுருக்கி பார்த்த தீப்பொறி பார்வையில் மூச்சிமுட்டி திகைத்து போனாள்.

“அப்டித்தான் டி.. இன்னும் என்னைய பாத்து பயப்படு.. அப்பதே இந்த உலகத்துக்கு ந்நா எம்புட்டு பெரிய கொடூரன்னு நிரூபிக்க முடியும். இன்னும் பயப்படு டி.. இரு இரு இந்த பயம் பத்தலை, இன்னொன்னு பண்றேன் இன்னும் நல்லா பயம் வரும்”

தலையை ஸ்லோமோவில் ஆட்டி முகத்தை அவளிடம் கொண்டு வந்து சைக்கோ போல கத்திய தேவன், சன்னல் பக்கமிருந்த பழைய துருப்பிடித்த கம்பியை எடுத்து, நாயகியை ஓங்கி அடிக்க வருவது போல, பாய்ந்து கொண்டு வந்தவன், ஆஆஆ.. அவள் பாதி முகத்தை மூடி அலறும் வேளையில், தனது மற்றொரு கரத்தில் வேகமாக அடித்துக்கொண்ட சத்தத்தில், உயிர் துடித்து அலறினாள் நாயகி.

“ஐய்யோ.. என்னங்க பண்றீங்க..” கரங்கள் நடுங்க கண்ணீரோடு பதறியவளின் துடிப்பை கண்டு, அரக்கன் போல ரசித்தான் தேவன்.

“ம்ம்.. அப்டித்தா.. இன்னும் பயந்து கத்து டி..” மீண்டும் இறுகிய கரத்தின் மீது இரும்பு கம்பி கொண்டு அடித்தான்.

“ஆஆ.. ஐய்யோ.. வேணாங்க.. தயவுசெய்து அந்த கம்பிய கீழ போடுங்க.. கை வலிக்குமே..” கன்றி வீங்கிய அவன் கரம் கண்டு, உயிர் வதை கண்ட நாயகி, கெஞ்சும் அழுகையோடு அவனை நெருங்க,

“ஆ.. ஆ.. கிட்டக்க வராத டி.. அங்கனவே நில்லு.. ந்நா யாரோ எவனோ.. எனக்கு வலிச்சா என்ன.. இல்ல செத்தாதா என்ன.. ஒனக்கு எதுக்கு டி பதறுது.. நீ என்னைய பாத்து ஒரு கொடூரன போல பயப்பட மட்டும் செய்யி, மத்தபடி உன் துடிப்பு மயிர எல்லாம் எனக்காக காட்டாத.. ம்ம்.. இப்ப பயப்படு டி..”

தன்னை பார்த்ததும் மிரண்டு நடுங்கி ஓடி வந்து ஒளிந்துகொண்ட அவள் செயலில், இங்கு ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்றே மறந்தவனுக்கு, மனைவியின் பயம் அவன் மூளையை செயலிழக்க வைத்து சைக்கோவாக மாற்றி இருந்ததில், மீண்டும் மீண்டும் தன்னை தானே வதைத்துக்கொள்ள, அவள் ஜீவன் வதைப்பட்டு மூச்சடங்கி தரையில் சரிந்தாள் நாயகி.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!