அத்தியாயம் – 26
ஊரின் எல்லைக்கு காரோட்டி வந்து நிறுத்தி ஸ்டியரிங் மீது தலை குப்புற படுத்துக்கிடைந்த தேவனின் இதயத்தை, பலமாக தாக்கி ரணகளமாக்கி இருந்தது கோதை பேசிய ஒவ்வொரு வார்த்தையும்.
“பேச நேரம் குடுக்கலையா..? ஆமா அப்டியே பேசிட்டாலும் அவளை பத்தி பேசுவாளா.. இல்ல என்னைய பத்திதே பேசிவாளா..! வாய தொறந்தாலே அமுதாவ இப்டி வளத்தனும் அப்டி வளத்தனும்.
ஆனந்து அத்தானுக்கு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்கணும், அவையல்ட்ட பேசி புரிய வைங்கனு அவைங்கள பத்தி கவலை படரவ, அப்டியே குழந்தை இல்ல குட்டி இல்ல, எந்த டாக்டர பாத்தா புள்ள பொறக்கும். எந்தெந்த சாமிக்கு பரிகாரம் பண்ணா புள்ள வரும்.
கண்ட ஆசாமி சொல்றதயெல்லாம் கேட்டு, வீட்ல தகிடு வாங்கி வச்சி, மூணு வேளைக்கும் அதுக்கு பால ஊத்தி வழிபட்டா புள்ள வரும்னு, வாய தொறக்க விடுற அந்த சொற்ப நேரத்துல கூட பூஜ பரிகாரம் டாக்டரு சாமியாருனு கேட்டு கேட்டு அலுத்து போனதுதே மிச்சம்.
அவள்ட்ட சந்தோசமா பேச வந்தாலே புள்ள இல்ல புள்ள இல்லன்ற கொறைய சொல்லியே, அழுது வடிஞ்சி பைத்தியம் புடிக்க வச்சிடுவா..
ஆசையா பக்கத்துல படுக்க வச்சிக்கிட்டா, நெஞ்சில சீண்டி, ஆசைய தூண்டி, எல்லாம் முடிஞ்ச பொறவு மறுபடியும் குழந்தை வேணும்னு வெம்பிட்டு வந்து நின்னா, எப்டி அவள ஆசையா அணைச்சிக்க முடியும். ஆத்தே அம்மேனு பயந்துட்டு வாய தொறக்குறதுக்கு முன்னாடி உதறி தள்ளிவுட்டுதே போவ தோணும்.
எனக்கு புள்ள முக்கியம் இல்ல டி நீ மட்டும் ஆயிசுக்கும் கூட இருந்தா போதும்னு சொன்னா, எந்த ஒரு கேள்வியும் கேக்காம அமைதியா ஏத்துப்பாளா..?”
விரக்தியாக தனிமையில் கத்தியவனின் இடைக்கண்ணோரம் கசிந்த சொட்டு கண்ணீரோடு, மீண்டும் தலைக்குப்புற படுத்தவன், அப்படியே தலை திருப்பி நாற்பது அடி தூரத்தில் இருந்த நாயகியின் வீட்டை பார்த்தான்.
அன்று விரைவாக கையில் இருந்து வீடு திரும்பிய நாயகி, முன்பு இருந்ததை விட உடல் மெலிந்து, கன்னங்கள் ஒட்டி, புதிதாக எடுத்த புடவையில் ஒன்றினை ஏனோதானோவென கட்டி இருந்தாள்.
கடையில் இருந்து மீதமான காய்கறிகளை கொஞ்சம் பையில் அள்ளிப்போட்டு எடுத்து வந்த நாயகி, வரும்போதே கலைத்து வந்தவள் வீட்டின் திண்ணையில் அக்கடானு சற்று நேரம் அமர்ந்து கண்மூடி இளைப்பாற, ஆரம்பம் முதலே அவளை பார்த்துக்கொண்டிருந்த தேவனின் பற்கள் ஆத்திரத்திலும் இயலாமையிலும் நரநரவென அரைப்பட்டது.
“எல்லாத்தை பத்தியும் கவலப்பட்டு இன்னைக்கு இவ எந்த நிலைமைல இருக்கானு பாரு.. அப்போ கூட புத்தி வராது இவளுக்கு” கோபத்தில் கார் சீட்டில் குத்திய தேவனின் மனம், மனைவியின் நையிந்த கோலம் கண்டு வலிக்க வலிக்க பிசைந்தது.
** ** **
“ஏய் இந்தா டி லந்தா.. பேச பேச முறுக்கிட்டு போறவ.. ஒன்னைய சமாதானப்படுத்தி கொஞ்சிட்டு திரியிறதுதே என் வேலையா என்ன. ஆஆ.. ஊஊ.. ன்னா மூஞ்சிய திருப்பிட்டு அங்குட்டு இங்குட்டு நடந்து என்னத்தையாவது செஞ்சிட்டு இருக்கவ.. பேசிட்டு இருக்கேன்னுல்ல நின்னு பேசு டி”
பாத்திரத்தை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த கோதையின் தோளைப்பற்றி வேகமாக தன்னை பார்த்து திருப்பிட, அமைதியாக தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்திப் பார்க்க, நன்கு அழுதிருப்பாள் போலும் முகமெல்லாம் சிவந்து காணப்பட்டதில், அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
“அழுதியா டி” கோபத்தில் அடித்துவிட்டு சென்றதில் தான் வலித்து அழுதாளோ என்ற பரிதவிப்பில் தன்னையே நொந்து போனான்.
“இதுக்கு தான்டி அடி வாங்குற. கேட்டா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதா.. அடிச்சது வலிச்சுதா கோத..”
சற்றே பொறுமையை இழுத்து பிடித்து கேட்க,
அப்போதும் பதில் இல்லை என்றதும், அவள் கையில் இருந்த பாத்திரத்தை பிடுங்கி படாரென தூக்கி எறிந்தவன், அவள் மிரண்டு நிற்கும் போதே மனைவியை கையில் தூக்கிக்கொண்டு அறைநோக்கி செல்ல, பதட்டத்தில் தானாக அவன் கழுத்தை சுற்ற போன கரங்கள், கூடத்தில் டீ அருந்தியபடியே தீயாக இருவரையும் முறைத்துக்கொண்டிருந்த தண்டாயித்தை பார்த்ததும், சங்கடத்திலும் பயத்திலும் கணவன் கையில் இருந்து இறங்க முற்பட்டவளை முறைத்து, இன்னும் அழுத்தமாக இறுக்கிக்கொண்டு தனதறைக்கு வந்து நிறுத்திய கணவனை கண்டு உள்ளங்கை வியர்த்து போனது.
“என்ன டி பெரிய இவளா நீயி.. தாலிய கட்டிபுட்டானே இனிமே இவன் நமக்கு அடிமை என்ன பண்ணாலும் கெஞ்சிட்டு ஓடி வருவான்னு மிதப்புல திரியிறியா..” மனைவி கேட்டு பதில் சொல்லாது இருப்பது மேலும் மேலும் கோவத்தையே அதிகரிக்க செய்ய, அங்கிருந்த பொருட்களை எல்லாம் தட்டிவிட்டு உடைத்தவனை கண்டு நெஞ்சி பதறி போனாள்.
“தயவுபண்ணி உடைக்காதீய.. எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல அதே அமைதியா இருந்தேன். மத்தபடி நீய நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லைங்க..” கமறிய குரலில் கெஞ்சிய கோதை, கண்ணீரை துடைத்தபடி தன்நிலை சொல்ல, உடைப்பதை நிறுத்திவிட்டு அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் ஆனந்தபாலன்.
“உடம்புக்கு முடியலையா? ஏன் என்னாச்சி..? என்ன பண்ணுது ஒனக்கு? ஏய்.. எதையாவது வாய தொறந்து சொல்லு டி நாய.. புடிச்சி வச்ச புள்ளையார் கணக்கா நின்னுட்டு இருந்தின்னா என்ன டி அர்த்தம்”
அவள் பேச என்ன மூச்சி விட கூட நேரம் கொடுக்காது, அடுத்தடுத்த கேள்விகனையில் துளையாய் துளைத்தவனை எச்சில் விழுங்க கண்ட கோதை,
“த்.த..தலைவலிதாங்க வ்.வேற ஒண்ணுமில்ல” திக்கித்திணறி சொல்லி முடிப்பதற்குள், அவள் தோள் இரண்டும் அவன் கையோடு பிஞ்சி போய்டுச்சி.
“தலைவலினா பொறவு என்னத்துக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சிட்டு இருக்க. கொஞ்ச நேரமாவது படுத்து தூங்கி ஓய்வெடுக்குறது. வா வந்து இப்பவே படு” அவள் சோர்ந்த முகம் என்னவோ போல் மனதை ரணப்படுத்திட, தன்னை விட்டு ஒதுங்கி ஒதுங்கி நின்றவளை இழுத்து மெத்தையில் சரிந்தான்.
“ஏதோ கோவத்துல கண்டதும் பேசி பட்டுனு கைய நீட்டிப்புட்டேன். அதுக்குதே நீயி பேசாம இருக்கேன்னு தெரியும். ஆனாலும் என் அண்ணங்கிட்ட நேரடியா போயி அப்டி பேசி இருக்க கூடாதுல்ல டி. எனக்கு பெரியவன பத்தி நல்லாவே தெரியும். அவனால நாயகி இல்லாம சுட்டு போட்டாலும் இருக்கவே முடியாது.
ஏதோ புருசன் பொஞ்சாதி சண்ட அதுக்காக அவளை அப்டியே போன்னு விட்டுடுவானா.. அவளே விட்டு வெளகி போனாலும், இவைன் விடமாட்டன் அவள. அதுனால இனிமே நாயகிய பத்தின கவலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு என்னைய மட்டும் கவனி, அவள பாத்துக்க என் அண்ணன் இருக்கான்”
மனைவியிடம் சமாதானப் பேச்சி நடத்தி, தான் அடித்த அடியில் ஐவிரல் பதிந்து வீங்கி இருந்த அவள் மென்கன்னத்தில் அவன் உதட்டின் மூலம் இதமாக ஒத்தடம் கொடுக்க, ஸ்ஸ்.. கண்மூடிய கோதையின் விழிகளுக்குள் நீர் கோர்த்து நின்றது.
** ** **
அன்று தேர்தல் முடிவுக்கு ஊரே காத்துக்கிடக்க, எப்போதும் கணவனின் வெற்றிக்காக தவறாமல் கடவுளை வணங்கும் வணங்கும் நாயகி, அன்றும் அதிகாலையே கோவிலுக்கு வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்தவளாக,
“இந்த தரமும் அவையதே ஜெயிப்பாகனு தெரியும். இருந்தாலும் ஒன்னைய வேண்டிக்கிறேன் அவையல ஜெயிக்க வச்சிடு சாமி. அப்பதே இந்த ஊரும் நல்லா இருக்கும், ஊர் சனமும் காவாளி பயலுங்க பயம் இல்லாம ஊருக்குள்ள நிம்மதியா நடமாட முடியும்” மனமுருக வேண்டியவளுக்கு முடிவு வரும் வரை அன்னம் தண்ணீர் இறங்கவில்லை.
ஆனால் தேவனுக்கோ வாழ்க்கையே வெறுத்த உணர்வில், என் பொண்டாட்டியே கூட இல்ல இனிமே ஜெயிச்சா என்ன ஜெயிக்காட்டி என்ன என்ற கடுப்பில் இருந்தவனுக்கு, அவன் தந்தை வேறு திருமணத்தில் விருவிருப்பாக இருப்பதை பார்க்க பார்க்க பொண்டாட்டி மீது தான் வெறி வந்தது.
“திமிரு புடிச்ச கழுதைய நானா வந்து கெஞ்சி கூத்தாடி கூப்பிடனும்னு எதிர்பாக்குறா போல, போடி அந்த அளவுக்கெல்லாம் நீயி வர்த் இல்ல” வீம்பாக நினைத்தாலும்,
“என் பொண்டாட்டி தேவதைடா அவளுக்காக என்ன வேணாலும் பண்ணலாம்” நெஞ்சை நீவியவன் மனம் மனைவியை பட்டவர்த்தனமாக புகழ்ந்து தள்ளியது.
“நாளில்ல தேவா.. இந்த அப்பா போற ஸ்பீட பாத்தா, நாளைக்கே கூட கல்யாணத்த முடிச்சி வச்சிடுவாரு போல. இனிமே அவளா வருவான்னு எதிர்பாத்து காத்திருந்தா ஏமாத்திபுடுவா. போயி சப்பு சப்புனு நாலு அற கன்னத்துல வுட்டு பரபரன்னு புடிச்சி இழுத்துட்டு வந்திட வேண்டியதுதே..”
தீர்க்கமாக முடிவெடுத்த தேவன், மனைவி தேடி அதிவேகத்தில் புறப்பட்டு இருந்தான்.
அதேநேரம் கணவனின் கரம் கோர்த்தபடி காரில் இருந்து இறங்கி, தனது ஐந்து மாத கருவோடு ஆசைஆசையாக நாயகியை பார்ப்பதற்காக வந்திருந்தாள் அமுதா.
அடுத்தடுத்த வில்லங்கம் ரெடி.
தொடரும்.