அத்தியாயம் – 25
சற்று முன்னர் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவரை ஓடி வந்து தாங்கிய தேவன், “அப்பா ஆஸ்பத்திரிக்கு போலாம் வாங்க” பதட்டமாக தூக்க முயல,
“இல்ல ப்பா.. என்னைய இப்டியே விட்டுடு யாருக்கும் எந்த கஸ்டமும் இல்லாம செத்து போய்டுறேன்” பேச முடியாமல் தவித்த தகப்பனை கண்டு, நாற்பது வயதிலும் சிறுவனாக நடுங்கினான் பிள்ளையவன்.
“ஏம்ப்பா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீய. எங்களுக்கு ஒன்னைய விட்டா யாரிருக்கா..”
“நானும் அதே கவலைல தாம்ப்பா ஒவ்வொரு நாளும் தவியா தவிக்கிறேன். எனக்கு பொறவு ஒனக்கு யார் இருக்கா.. பொஞ்சாதியும் இல்லாம புள்ளையும் இல்லாம ஒத்தையில நீ கஸ்டப்படுறத என்னால பாக்க முடியாதுய்யா.. ந்நா ப்.போறேன்..” ஒவ்வொரு வார்த்தையும் பேச அத்தனை கடினமாகி போனது.
“அப்பா தயவுசெய்து அப்டி பேசாதீய. யார் இருந்தாலும் இல்லைனாலும் எனக்கு நீங்கதே முக்கியம் ப்பா..” தகப்பன் கையை பிடித்துக்கொண்டு முகம் வெளிறி போனான்.
“அப்பா முக்கியம்னா அப்போ ந்நா சொல்றத கேளு தேவா. நீ மறு கல்யாணம் கட்டி புள்ளைகுட்டியோட சந்தோசமா வாழுறத ந்நா பாக்கணும். இதை என் கடைசி ஆசையா கூட நினைச்சிக்கோ. ஆனா மறுப்பு சொல்லிடாத தேவா, அப்டி சொன்னா என் உசுரு இப்பவே நின்னுடும்”
சரியான நேரத்தில் நேக்காக காய் நகர்த்தி நினைத்ததை சாதிக்க நினைத்த தண்டாயிதம், இதுதான் நேரம் என்று இல்லாத வலியை இருக்குனு நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியில் முனக,
“சரி ப்பா.. உங்க ஆசை என்னவோ அதன்படி செய்றேன். இப்ப வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்” தந்தை உயிர் முக்கியமே என்ற பதட்டத்தில் எதைபற்றியும் யோசிக்காமல் அவசரமாக வாக்குக்கொடுத்த தேவனுக்காக, நடிப்பை நீட்டிக்க இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கி விட்டு, மகன்களின் பலத்த உபசரிப்புடன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
வீடு வந்தவருக்கு ஒரே கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து நடக்க வேண்டிய திருமண வேலையில் தண்டாயிதபாணி பரபரப்பாகி போக, விஷயம் அறிந்த தேவனுக்கு நிலைக்கொள்ளவில்லை.
முகமும் உடலும் இறுகிய நிலையில் தந்தையை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல், ஜடம் போல் சுற்றி வந்தவனுக்கு அப்போது கூட நாயகி மீதுதான் அத்தனை ஆத்திரம் வந்தது.
“எல்லாம் அவளால, அவ மட்டும் என் பேச்சை கேட்டு ஒழுங்கா இருந்திருந்தா எனக்கு இப்டி ஒரு சங்கட்டமான சூழ்நிலை வந்திருக்குமா.. ந்நா கோவமா இருந்தா என்ன? தப்பு முழுக்க அவர் பேர்ல இருக்கும் போது, அவதானே எங்கிட்டக்க மன்னிப்பு கேட்டு எப்படியாவது என்னைய சமாதானம் செய்ய முயற்சி பண்ணிருக்கணும்.
ஆனாபாரு ந்நா ஒத்த வார்த்த சொல்லி தொரத்தி விட்டேன்னு அவ வீட்டோட போயி செட்டில் ஆயிட்டா.. என்னையவிட்டு போவ எப்ப எப்பனு இருந்திருக்கா போல, நாந்தே பைத்தியக்காரனாட்டும் எந்நேரமும் அவளையே நெனச்சிட்டு இருந்திருக்கேன்.
நாயி எப்டி ஏங்க வைக்கிறா.. மூஞ்சிய கூட காட்ட மாட்டேங்கிறாளே..” தலை முடியை பிய்த்துகொண்ட தேவனின் அறைகதவவை தட்டிவிட்டு தயக்கமாக உள்ளே வந்த கோதை,
“க்.கொஞ்சம் பேசணும்” என்றாள் மெல்லிதாக.
அவள் குரல் கேட்டதும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சீரான பார்வையால் கோதையை ஏறிட்டு பார்த்த தேவன், திருமணமாகி வந்ததில் இருந்து இன்று தான் தம்பி மனைவியாக அவளை நேர் எதிர் சந்திக்கிறான்.
பரவாயில்லை, தம்பி அவன் மனைவியை நன்றாக தான் வைத்திருக்கிறான் என்று மெச்சும் அளவிற்கு, பட்டும் நகையும் பூவும் வைத்து பார்க்கவே கண்ணுக்கு லட்சனமாக இருந்தாள் கோதை.
“என்ன பேசணும்..” இதுவரை நேரடியாக பேசிடாதவனின் கரார் குரலை கேட்டு, உள்ளங்கை வேர்க்க நின்ற கோதை, தன் கணவன் குரலையும் தேவன் குரலோடு ஒப்பிட்டு பார்த்தவளுக்கு, பெரிதாக வித்தியாசம் தோன்றவில்லை. இருவரது குரலும் ஏறத்தாழ ஒரேமாதிரி இருக்கவும், ஓர் நொடியானாலும் இமைகள் விரிந்தது ஆச்சிரியத்தில்.
“ஒங்கிட்ட பேசுற தகுதி எனக்கில்லைனு தெரியும் ஆனாலும் மனசு கேக்கல. அதே என் மனசுல பட்டதை சொல்லிட்டு போவலாம்னு வந்தேன். ஒரே நிமிசம் ந்நா பேசிட்டு போய்டட்டுமா” எங்கே சொல்ல வருவதை கேட்காமல் வெளியே துரத்தி விடுவானோ என்ற அச்சத்தில், தயங்கி தயங்கி பேச அனுமதி கேட்டவளுக்கு, ஒற்றை பார்வையாலே பேசு என அனுமதி கொடுத்திருந்தான்.
“சொல்றேனே தப்பா எடுத்துக்காதீய, அமுதா அவ காதலிச்ச பையனோட சேர்த்து வச்சதா நாயகி அக்கா மேல கோவப்பட்டு வீட்டவிட்டு அனுப்பிடீய. ஒங்கள பொறுத்தவரைக்கும் அதுதே நியாயம்.
ஏன்னா அமுதா ஒங்க வீட்டு பொண்ணு. அவளை யாருக்கு கட்டிதரணும்ன்ற முடிவு எடுக்குற உரிமை எல்லாம், அவ சொந்த அண்ணனுங்க உங்களுக்கும், பெத்தவருக்கும் மட்டும்தே இருக்கு.
அந்த உரிமைய, யாரோ ஒரு வீட்ல இருந்து இங்கன வாழ வந்த பொண்ணு நிச்சயமா பறிச்சிருக்க கூடாது. அது பெரிய தப்புதே.. வந்தவங்க சும்மா இல்லாம யாரோட கவனிப்பும் இல்லாம அனாதை போல கிடந்த அந்த ஆறு வயசு பொண்ணையும் திரும்பி பாத்திருக்க கூடாது. அந்த பொண்ண தான் பிள்ளையா நினைச்சி வளத்தி இருக்க கூடாது. அந்த பொண்ணுக்கு நல்லது கெட்டது பாத்து பெத்த அம்மா ஸ்தானத்துல இருந்து அவளை தாங்கி இருக்கவே கூடாது.
இதெல்லாம் செய்யாம சுயநலமா இருந்து அவைங்க வாழ்க்கைய மட்டும் பாத்திருந்தா, இந்நேரம் அவங்க இந்த வீட்டை விட்டு போயிருந்திருக்க மாட்டாங்க.
அமுதாவும் நீங்க காட்டுற மாப்பிளைக்கு வாக்கப்பட்டு, காதலிச்சவனையும் மறக்க முடியாம, கட்டினவனுக்கும் உண்மையா இருக்க முடியாம, இந்நேரம் கெட்டு நொந்து வாழ்க்கையையே தொலைச்சிட்டு நரக வாழ்க்கைய வாழ்ந்திருப்பா..”
பேச்சி சத்தம் உயர்த்தவில்லை என்றாலும்,கோதை பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்க, தேவனின் பார்வையும் ஒருவித இறுக்கத்துடன் அவள் மீது அழுந்த பதிந்தன.
“அமுதா பொம்பள புள்ளையா பொறந்ததால தானே இம்புட்டு கோட்பாடுகளும், இதுவே ஆம்பள புள்ளையா பொறந்திருந்தா, அவளையும் இந்த வீட்ல சரிக்கு சமமா நடத்தி இருப்பீய. இந்நேரம் உங்கள மாதிரியும், உங்க தம்பிய மாதிரியும், அவளும் ஆம்பளை அப்படின்ற திமிரோட என்ன தப்பு செஞ்சிட்டு வந்திருந்தாலும் யாரும் எதுவும் கேட்டிருக்க மாட்டீய இல்ல.
அவ பொண்ணா பொறந்த பாவத்துக்கு ஆசைப்பட்டவனை தைரியமா கை பிடிக்க கூட அத்தனை போராட்டமா போச்சி. பொண்ணுங்க அப்டினாலே இளக்காரம் தானே.
நாயகி அக்கா இந்த வீட்டையும், உங்களையும், உங்கள சுத்தி உள்ளவங்களையும் இம்புட்டு வருசமா எந்த அளவுக்கு பாத்துகிட்டாங்கனு ந்நா சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல. ஆனா அவங்களையே ஒரு நிமிசத்துல பொண்டாட்டி இல்லைனு தூக்கி எறிஞ்சிட்டு, அடுத்த கல்யாணத்துக்கு தயாராகி நிக்கிறீய.
இதே முடிவை ஒரு பொம்பள எடுத்துட்டா, அம்புட்டுதே.. பொம்பளைங்க உணர்வுகளை புரிஞ்சி மதிக்க தெரியாத கூட்டம்தா இங்க அதிகம் இருக்கு.
நல்லவேளையா அமுதா இந்த வீட்டுல இருந்து போய்ட்டா.. நல்லதோ கெட்டதோ நாயகி அக்காவும் இத்தனை வருச அடிமை வாழ்க்கைல இருந்து விடுதலையாகி விலகி போய்ட்டாங்க.
உங்க அப்பா ஆசைப்படி இனிமே கட்டி கூட்டிட்டு வர்ற பெண்ணுக்காவது கொஞ்சமே கொஞ்சம் மதிப்பு குடுத்து, தெனமும் ஒரு பத்து நிமிசமாவது பேச நேரம் குடுத்து கேளுங்க. அப்பதே ரெண்டு பேத்தும் சுமூகமா வாழ முடியும்.
ந்நா ஏதாவது தப்பா பேசி இருந்தா தயவுசெய்து மன்னிச்சிடுங்க. உங்களுக்கு கல்யாணம்னு கேள்விபட்டதும் எப்டி பேசுறதுனு தெரியாம இன்னைக்கு பேசுப்புட்டேன்.
இன்னைல இருந்தாவது வீட்ல சாப்பிடுங்க, புது கண்ணால மாப்பிளை வேற கொஞ்சமாவது உடம்புக்கு ஊட்டம் வேணாமா.. பழைய உடம்பு மெலிஞ்சி போய் என்னவோ போல இருக்கீய. பாக்கவே வருத்தமா இருக்கு”
தனது மௌனமான பேச்சாலே படபடவென தேவனை சுக்குநூறாக்கி விட்டு, கடைசியில் மன்னிப்பும் கேட்டு அவன் உடல்நலம் பற்றியும் கவலையாக பேசிய கோதையை, கை முஷ்டி இறுக விரைப்பாக முறைத்து நின்ற தேவனின் பார்வையில் கால்கள் வெடவெடத்து போனது.
“அப்போ ந்நா என் பொஞ்சாதிய இம்புட்டு நாளும் அடிமையா வச்சிருந்தேன்னு சொல்ல வர்றியா நீயி” ஆத்திரத்தில் பற்களை கடிக்க, அவனது கோபத்தில் பதறினாலும் அதுதானே உண்மை எனும் விதமாக,
“இதுல கோவப்பட ஒன்னுமே இல்லைங்க. நிதானமா ஒக்காந்து யோசனை பண்ணி பாருங்க, உங்களுக்கே புரியும். அப்புறம் ஒரு முக்கியமான விசயம், நாயகி அக்கா இப்ப உங்க பொஞ்சாதி இல்ல. என்னைக்கு கட்டின தாலிய உங்க கையாலே அத்து வீசிப்புட்டியலோ அன்னைக்கே உங்களுக்கும் அவங்களுக்குமான உறவு முடிஞ்சி போச்சி”
நிறுத்தி நிதானமாக சொன்னவளை பார்வையாலே எரித்திருந்தான் தேவன். தம்பி மனைவியின் சாட்டையடி பேச்சிக்கு எதிர்வாதம் செய்ய முடியாது நிற்கும் பரிதாபநிலை தனக்கு வரும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டான்.
“நேத்து வரைக்கும் என்னைய பாத்து நடுங்கின கழுதைக்கு கொழுப்ப பாரு.. எல்லாம் அந்த தடியன் பண்ண வேலை” உதட்டசைவில் முனகியவன் செயலை கண்டு, அதற்குமேலும் எதுவும் பேசிடாமல் வெளியேறப் போக, வாசற்படியில் கைகட்டி நின்றபடி இருவரது வாதத்தையும் கேட்டிருந்த ஆனந்தை கண்டு உடலே உதறல் எடுத்தது கோதைக்கு.
“வாடா நாயே.. என்னடா பொண்டாட்டி கட்டி வச்சிருக்க. ஒரு ஆம்பளைக்கு முன்னாடி இம்புட்டு வாயி ஆவாது. ஒழுங்கா அடக்கி வையி இன்னொரு தரம் எம்முன்னாடி இப்டி பேசுனா நடக்குறதே வேற” கோதையிடம் காட்ட முடியாத கோபத்தை தம்பியிடம் காட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிட, மனைவியை முறைத்து வைத்தான் ஆனந்தன்.
“ஒனக்கு எதுக்கு டி தேவை இல்லாத வேல” எரிந்து விழுந்த கணவனை இப்போது இவள் முறைத்தாள்.
“எனக்கு இது தேவை இல்லாத வேலை இல்லைங்க. என்னோட கடமை. இந்த வீட்ல உள்ள உங்க யாருக்குமே பொம்பளைங்க அருமை தெரியல. ஒரு பொம்பள போனா ஒடனே இன்னொரு பொம்பள உங்கள எல்லாம் அடைகாக்க வந்திடுறான்ற மிதப்புல, பொம்பளைங்க மனச புரிஞ்சிக்காம திரியிறீங்க.
அதா வர்ற போற உங்க புது அண்ணி மனசு கோணமா நடந்துக்க சொல்லி, உங்க அண்ணனுக்கு பேசி புரிய வச்சிட்டு இருந்தேன்” பயம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி அழுத்தமாக உரைத்த மனைவியின் பேச்சில் கோபம் அதிகரித்து போனது.
“அடி நாயே.. யாருக்கு யார் டி சொல்லி புரிய வைக்கிறது. அதுக்கு ஒனக்கு என்ன தகுதி இருக்கு. ஒன்னயெல்லாம் வைக்க வேண்டிய எடத்துல வைக்காம பாவம் பாத்து சுதந்திரம் குடுத்து வச்சிருந்தேன் பாத்தியா என்னைய சொல்லணும்.
என் அண்ணன் முன்னாடி நானே நின்னு எதிர்த்து பேச மாட்டேன், நேத்து வந்த கழுதை நீ.. எம்புட்டு நெஞ்சி தகிரியம் இருந்திருந்தா என் அண்ணன் மனச நோகடிச்சி அனுப்பினதும் இல்லாம, என்னையும் எடுத்தெறிஞ்சி பேசுவ” கண்மண் தெரியாத கோபத்தில், எதிரே நின்ற கோதையின் கன்னத்தில் அவனையும் அறியாது ஓங்கி அறைந்து இருந்ததில், தள்ளாடி கீழே விழுந்த கோதைக்கு சகலமும் அடங்கியது.
“இனிமே உன் தரத்துக்கு மீறி ஒரு வார்த்த பேசுனாலும் தொலைச்சிபுடுவேன். பாத்து கவனமா இருந்து பழகு” கடுமையாக எச்சரித்த ஆனந்த், கன்னம் தக்காளியாக வீங்கி கண்ணீரோடு நடுங்கி கிடந்த கோதையை தீப்பார்வை பார்த்துவிட்டு தானும் அங்கிருந்து சென்றிருக்க, பாவப்பட்ட பெண்ணின் மனம் தான் இப்போது நொந்து கிடந்தது.
** ** **
தந்தைக்கான மருந்து செலவுகளை எப்படியோ கொஞ்சம் வட்டிக்கு வாங்கி சமாளித்த நாயகி, காலையிலேயே மறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த தாயும் தந்தையும் எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவர் என்று அவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்தவள்,
கதவு தட்டும் சத்தத்தில் வந்தது தாய் தந்தை தானோ என நினைத்து கதவை திறக்க, நெடுநெடுவென பெரிய உருவத்தில் விரைப்பாக நின்றிருந்த கொழுந்தனை கண்டு புரியாமல் விழித்து வைத்தாள்.
“வீட்டுக்கு வந்தவன உள்ள கூப்பிடனும்னு அறிவில்ல ஒனக்கு” அங்கு மனைவியோடு சண்டையிட்டு, இங்கு வந்து நாயகி மீது எரிந்து விழுந்த வேகத்தில், திணறிப் போனாள் நாயகி.
“ம்.. வ்.வாங்க” அவனது திடீர் வரவில் குழம்பி உள்ளே அழைக்க, என்னவோ உரிமைப்பட்டவன் போல அத்தனை வேகமாக உள்ளே வந்து, அங்கிருந்த பழைய இருக்கையில் அமர்ந்தவனை புரியாமல் பார்த்தாள்.
“வெயில்ல அங்கிருந்து வந்திருக்கேனே குடிக்க மோரோ தண்ணியோ குடுக்க தெரியாது.. ஒன்னு ஒன்னா சொல்லி தரணுமா..” மீண்டும் வள்ளென விழ, “இது என்னடா புது வம்பு” மனதில் அலறியபடி, வேகமாக நீர்மோரை அவனிடம் நீட்டிய அண்ணன் மனைவியை, ஆழ்ந்து பார்த்தன அவன் விழிகள்.
“பெரியவனுக்கு கல்யாணம் பண்ண போற செய்தி கேள்விப்பட்டியா?” என்றதும் மௌனமாகவே நின்றாள்.
“ஒன்னையத்தா கேக்குறேன், அமைதியா இருந்தா என்னத்த புரிஞ்சிக்க” குரல் உயர்த்தியதில்,
“கேள்விப்பட்டேன்” என்றாள் மெதுவாக.
“ஒனக்கு சம்மதமா?” ஆனத்தின் அடுத்த கேள்வியில் விரக்தி புன்னகையை தந்த நாயகி,
“இதுல ந்நா சம்மதிக்க சண்டை போட ஒன்னுமே இல்லத்தான்.. அவையளுக்கு விருப்பம்னா கட்டிக்கிடட்டும்” என்றாள் தீர்க்கமாக.
“ஓ.. சரி.. அப்ப மொத்தமா யாருமே வேணாம்னு தலைமுழுகிட்ட”
“எல்லாம் தெரிஞ்ச நீயலே இப்டி கேட்டா ந்நா என்ன பதில் சொல்றது. ந்நா யாரையும் வெறுக்கவும் இல்ல ஒதுக்கவும் இல்ல. என்னைய வேணானு தொரத்தி விட்ட பொறவு கெஞ்சி கூத்தாடி என் உரிமைய நிலைநாட்டுற அளவுக்கெல்லாம் என் மனசுல தெம்பு இல்ல அத்தான்.
நல்லா யோசனை செஞ்சி பாத்தேன், எனக்கென்ன புள்ளையா குட்டியா அதுகளுக்காக கூட போராட. வெறும் மலடி தானே.. என் ஒருத்திக்காக அவைய சந்தோசத்த கெடுக்க நினைக்கல. நல்ல பொண்ணா கட்டிக்கிட்டு புள்ள குட்டியோட அவையலாவது நிம்மதியா இருக்கட்டும்”
நெஞ்சை அழுத்தும் வேதனையோடு , தனது கணவனை வேறு பெண்ணுக்கு விட்டுக்கொடுக்க மனதளவில் தயாராகி விட்ட நாயகி, கண்ணை தாண்டும் கண்ணீரை முந்தானை கொண்டு துடைத்தவளாக,
“கோத ரொம்ப நல்ல பொண்ணு, எங்கே அவ வாழ்க்க வீணா போய்டுமோன்னு ஆரம்பத்துல அவளுக்காக ரொம்பவே வருத்தப்பட்டதுண்டு. ஆனா அவளையே நீய கட்டிக்கிட்ட விசயம் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.
எங்கே கடைசி வரைக்கும் நீய ஒத்தையிலே திரிஞ்சி வாழ்க்கைய வீணடிச்சிப்பீயலோ ரொம்ப கவலையா இருக்கும். இனிமே அந்த கவலை இல்ல, கோத உங்கள நல்லபடியா பாத்துப்பா. ரெண்டு பேத்தும் சந்தோசமா இருப்பீய. அவள பத்திரமா பாத்துக்கோங்க அத்தான்”
கணவன் பேச்சை விடுத்து, கோதை பேச்சிக்கு தாவியவளை, கண்கள் சுருக்கி பார்த்தான்.
“அவ கெடக்கா திமிரு புடிச்சவ.. சரியி.. சோறு பொங்கினியா” சம்மந்தம் இல்லாது கேட்க,
ம்.. என்ற மெல்லிய தலையசைப்பை கொடுத்தாள் நாயகி.
“அப்போ போடு, உன் கையாள சோறு திங்காம என்னவோ மாறி இருக்கு” வயிற்றை தடவிய முரட்டான கொழுந்தனை ஆச்சிரியமாக பார்த்தாள் அவள்.
“என்ன அப்டி பாக்குற. நீ யாருக்கு வேணுமோ வேணாமோ.. உன் கழுத்துல தாலி இருக்கோ இல்லையோ.. வயசுல என்னைய விட சின்னவளா இருந்தாலும் எனக்கு நீ எப்பவும் இன்னொரு அம்மாதே..
ஒன்னோட தரம் என் மனசுல இருந்து என்னைக்கும் மாறாது. யாருக்கும் உன் ஸ்தானத்த விட்டுகுடுக்கவும் முடியாது. வீணா என்னைய அசிங்கபடுத்தணும்னு நெனச்சி ஒன்னைய நீயே கலங்க படுத்திக்காத. நானும் முன்ன மாதிரி இல்ல. அம்புட்டுதே சொல்ல முடியும். சோத்த போடுறியா இல்ல எந்திரிச்சி போகவா..”
அவனது அம்மா என்ற சொல்லை கேட்டே நெஞ்சிக்குழி குளிர்ந்து, ஆனந்த கண்ணீரில் நெஞ்சடைக்க நின்றவளை கண்டு தலையை உளுக்கிக்கொண்ட ஆனந்தபாலன்,
இத்தனை தூரம் அவளிடம் இறங்கி வந்து பேசியதே கடுப்பாகி போக, அதற்கு மேலும் பொறுமை இல்லாமல் எழப் போனவனை அவசரமாக தடுத்த நாயகி,
“இருங்கத்தான், ரொம்ப நாளைக்கு பொறவு இன்னைக்குதே கருவாட்டு குழம்பு வச்சேன். வைக்கும் போது கூட உங்களுக்கு ரொம்ப புடிக்குமேனு நினைச்சிட்டே இருந்தேன், கடைசில நீயலே வந்துடீய. ஒக்காருங்க தட்டுல போட்டு எடுத்துட்டு வர்றேன்”
முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு தலைகால் புரியாமல் ஓடிய அண்ணிக்காரியை, மீசை மறைத்த உதட்டில் உறைந்த புன்னகையோடு பார்த்த ஆனந்தன் கை கழுவி வந்து அமர, தட்டு நிறைய அவனுக்கு பரிமாற பிரிமாற வயிறு முட்டமுட்ட திருப்தியாக உண்டு முடித்தான்.
தொடரும்.