அத்தியாயம் – 16
அந்த புதியவனிடம் பேசி விட்டு, மன கலக்கத்துடன் வீடு வந்திருந்தாள் பூங்கோதை.
“என்னமா அதுக்குள்ள வந்துட்ட, அந்த தம்பி போய்டுச்சா” என்றபடி இன்முகத்துடன் வெளியே வந்தாள் செல்வி.
“ம்.. போய்ட்டாக ம்மா” கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு, பருப்பை கழுவிய மகளை பெருமூச்சு விட்டு பார்த்தாள்.
“ஏம்மா அந்த தம்பிய ஒனக்கு புடிக்கலையா” சோர்ந்த குரலில் கேட்ட அன்னைக்கு எப்படி சொல்வாள், தான் ஏற்கனவே கலங்கப்பட்ட பெரும் தீட்டு என்று.
“புடிக்கலையானு கேட்டா என்ன ம்மா சொல்றது. எனக்கு கல்யாணமே வேணானு தோணுதுமா” தயக்கமாக தாய் முகம் பார்க்க, செல்விக்கு அதீத வேதனை.
ஒரு வார காலமாக தான், உடல்நலம் கொஞ்சம் தேறி கோதைக்கு பதில் செல்வியே, தேவன் வீட்டிற்கு வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாள்.
தாயை வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்லை தான். ஆனால் அங்கிருக்கும் கொடிய மிருகத்தை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நரகமாய் போகிறதே!
அதிலும் அமுதாவின் திருமண பேச்சி எடுத்ததில் இருந்து அதிகமாக வீட்டில் தான் இருக்கிறான். தப்பித்தவறி அவன் கழுகு கண்ணில் மாட்டினால், இரக்கமின்றி பாய்ந்து அங்கம் பிய்த்து எடுக்கிறான்.
அந்த நேரத்தில் தான் ‘இனி நானே வீட்டு வேலைக்கு செல்கிறேன்’ என்ற தாயை தடுக்க முடியாது சரி என ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் செல்வி வேலைக்கு செல்லும் வழியில், கோதைக்கு வரண் தேடி வரும் என கனவா கண்டாள்.
சென்னையை சேர்ந்த இளைஞன். அசோக் குமார். வயது 32. சொந்தமாக ட்ராவல்ஸ் வைத்து நடத்துகிறான். கோதையை எங்கோ பார்த்து பிடித்து போனது போலும், அவள் யார் என்று விசாரித்து நேரடியாக செல்வியிடம் பெண் கேட்டும் விட்டான்.
யோசனை செய்த செல்வியும் முதலில் இருவரின் ஜாதகமும் பொருந்துகிறதா என பார்த்துவிட்டு, சர்ப தோஷம் கூட அவன் ஜாதகத்தில் ஒத்துப்பட்டு விலகி இருக்கவே, எட்டு பொருத்தமும் அமோகமாக பொருந்தி இருந்ததில் சந்தோசப்பட்டு, அசோக் கோதையிடம் பேச வேண்டும் என்றதும் இன்று தான் அவளை அனுப்பியும் வைத்தாள்.
கடைசியில் அவன் தான் நிறைய பேசினான், இவள் ம் என்பற்க்கு கூட சில்லறை கேட்பவள் போல, எதுவுமே அசோக்கிடம் பேசாமல் திரும்பி வந்த கூற்றை என்ன சொல்வது.
கோதையின் இந்த பிடித்தமின்மையான பேச்சி, தாய் மனதை கலங்க வைத்தது.
“இப்ப என்ன கோத சொல்ல வர்ற” எங்கே பெண் வாழ்க்கை ஒட்டிக்கட்டையாகவே முடிந்து விடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.
“எனக்கு ஒங்க எல்லார் கூடவும் இருக்கதாம்மா புடிச்சிருக்கு. ஒன்ன தங்கச்சி தம்பிய பாத்துகிட்டு இப்டியே இருந்திடறேனே!” கெஞ்சலாக சொன்ன மகளை பாவமாக பார்த்தாள்.
“இங்க பாரு கோத, இம்புட்டு நாளா ஜாதகத்துல இருந்த தோஷத்தால வர்ற வரண் எல்லாம் தடங்கலாச்சி. ஆனா இப்ப வந்திருக்க ஜாதகம் உன் ஜாதகத்தோட அமோகமா பொருந்தி இருக்கு. அந்த தம்பியும் கொஞ்சம் வசதி, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல புள்ளையும் கூட. ஒன்னைய காலமும் நல்லா வச்சி காப்பாத்தும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
நீயும் புருசன் புள்ள குட்டினு குடும்பமா சந்தோசமா வாழுறத என் ரெண்டு கண்ணால பாக்கனும்னு ந்நா வேண்டாத தெய்வம் இல்லமா. அது இப்ப கைகூடி வந்திருக்கு, வீணா தடா சொல்லாம அசோக் தம்பிய கட்டிக்க”
திட்டவட்டமாக செல்வி சொல்லி செல்ல, நெஞ்சில் இடி விழுந்ததை போல் ஆனது கோதைக்கு.
** ** **
“அப்புறம் தேவா, எப்டி இருக்க பாத்து நாளாச்சு” எதிர்க்கட்சி தலைவர் சக்கரபாண்டியன், கேலி கலந்த சிரிப்புடன் அவன் முன் வந்தார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு, வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடிவுக்காக காத்திருந்த தேவன், சங்கரபாண்டியன் எப்படியும் தன்னை வம்புக்கு இழுப்பான் என்று தெரிந்துகொண்டே, அமைதியாக பின்கை கட்டி நின்றான்.
“ந்நா ஒருத்தன், எந்த நேரத்துல போயி இந்த கேள்விய கேட்டு இருக்கேன் பாரு. இப்ப ஒன்னால எப்டிலே நல்லா இருக்க முடியும், எல்லாத்தையும் கேள்விபட்டேன் தேவா, மச்.. ரொம்ப வருத்தமா போச்சி.
ஏற்கனவே உன் தங்கச்சி கெட்டு ஓடி போயி அவமானப்பட்ட துக்கத்துல இருப்ப. உன் பொஞ்சாதியும் அதுக்கு ஒடந்தைனு தெரிஞ்சி, அடிச்சி தொரத்திவுட்டதா கேள்விப் பட்டேன். பாவம் நீ ஒரே நாளுல ஒட்டுமொத்த மான மரியாதையும் தொலைச்சிட்டு நிக்கிறியே தேவா”
பொய்யாக உச்சிக்கொட்டி வெறுப்பேற்றிய சக்கரபாண்டியனை, மிகுந்த ஆத்திரத்துடன் தாடை இறுக நிமிர்ந்து பார்த்தான்.
“அட என்ன பா தேவா நீ, உன் துக்கத்துக்கு ஆறுதல் சொல்ல வந்த என்னையவே இப்டி முறைக்கிற. சரி அத்தவுடு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்” என நிறுத்தி அவன் முகம் பார்க்க, எப்படி நின்றானோ அதே நிலை மாறாதுதான் நின்றிருந்தான்.
“ஊரார் முன்னாடி இம்புட்டு அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, கேவலப்பட்டு எப்டிபா தேவா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம மனு தாக்கல் பண்ண வந்திருக்க. யாருலே ஒனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பா” வன்மத்தை கக்கி நக்கலாக கேட்ட சக்கரபாண்டியனை, கொதித்துழும் அதீத கோபத்துடன் பார்வையாளே பொசிக்கி இருந்தான் அமரதேவன்.
“போதும் சக்கர, இதுதா நேரம்னு என்னைய அசச்சி பாக்கலாம்னு நினைக்காத. பொறவு ஒனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் ஒட்டுமொத்த ஊர் சனமே சேர்ந்து வருத்தப்பட வச்சிப்புடுவேன்” அவர் செவியருகே, முகத்தை கொண்டு வந்து இறுக்கமாக பேசிய தேவன், பரிசீலனை முடிவு வந்ததும் வேகமாக வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தான்.
சக்கரபாண்டியனோ, தேவா பேசியதை கேட்டு, முகம் கருத்த நிலையில் ஆத்திரத்தை அடக்க பற்களை கடித்தார்.
** ** **
நெற்றி காயத்தில் மஞ்சள் கட்டை கட்டியபடி, ஒரு மூலையில் படுத்து கையை தலைக்கு கொடுத்திருந்த நாயகியின் கண்களில், கண்ணீர் வற்றி விட்டது போலும்.
கடைசியாக எப்போது அழுதாளோ! அந்த ஈரத் தடயம் நன்றாக காய்ந்து உப்பு பூத்திருக்க, இமைக்காத விழிகள் ஓரிடத்தில் மட்டுமே மையலிட்டு விழித்திருந்தது.
“நாயகி சோறு பொங்கி வச்சிட்டேன் எந்திரிச்சி சாப்பிடுமா” என்ற லட்சுமியின் குரலுக்கு, எவ்வித அசைவும் இல்லை.
“இப்டியே இருந்தா என்னமா அர்த்தம். நாங்களா உன் வாழ்க்கைய கெடுத்துக்கிட்டு வந்து ஒக்கார சொன்னோம். நீயாவே உன் தலைல மண்ணள்ளி கொட்டிக்கிட்டு வந்திருக்கேன்னா, அதுக்கு நாங்க என்ன பண்றது” மகள் வாழ்க்கை பாதியில் முறிந்துவிட்டதே என்ற ஆதங்கத்தில், அடிக்கடி இப்படித்தான் அவள் மனம் நோக பேசி விடுகிறார்.
அவை எதற்கும் எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல், மன புழுக்கத்தில் எப்படித்தான் இந்த ஒருவார காலமும் போனதோ! முடிந்த அளவிற்கு தேவனின் நினைவை அகற்ற முயன்றாள். ஆனால் உயிரோடு கலந்துவிட்ட உணர்வு, அவனை நினையாதே மனமே என கூப்பாடு போட்டாலும், காற்றில் கலந்து வரும் கிருமி போல அழையா விருந்தாளியாக அவன் எண்ணம் வந்து உயிரை வதைக்கிறது.
நாயகியின் தாய் தகப்பன் இருவருமாக அன்றுதான் கலை பிடுங்க சென்றிருந்தனர். இந்த ஒருவாரமும் லட்சுமி வீட்டில் இருந்து நாயகியை கவனித்து கொள்ள, இதற்கு மேலும் வீட்டில் இருந்தால் ஒற்றை சம்பாதியத்தால் ஒன்றும் செய்ய முடியாதே! என்ற கவலை இருந்தாலும், சோகமே உருவாக மூலையில் கிடந்த மகளை விட்டுசெல்ல மனமின்றி அரைமனதுடன், லட்சுமியும் வேலைக்கு சென்றிருந்தார்.
வீட்டில் லட்சுமியின் சத்தமின்றி பேரமைதியாக இருக்கவே மெதுவாக எழுந்த நாயகி, அவர்கள் சாப்பிட ஏதாவது சமைக்கலாம் என்று பார்த்தால், அரிசி, பருப்பு, எண்ணெய் அனைத்தும் ரேஷன் பொருட்களாக, அதுவும் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதை கண்டு, கண்கள் பணித்தாள்.
“இத்தனை காலம் ஆனபின்னும், இன்னும் அதே ஏழ்மை நிலைதானா..!” என விரக்தியாக நினைத்த நாயகி, வீட்டை சுற்றியும் கண்களை சுழல விட்டாள்.
அவள் அவ்வீட்டில் இருக்கும் போதே பயன்படுத்திய பாதி பொருட்களை அப்படியே தான் உபயோகப்படுத்தி வருகின்றனர் போலும். பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை. ஆனால் இருவருக்கும் வயது முதிர்ந்து விட்டதே!
முன்பு நிமிர்ந்த நடையோடு கம்பீரமாக நடந்த தங்கவேலு, குனிந்து குனிந்து கலை பிடிங்கியே முதுகெலும்பு தேய்ந்து கூன் விழுந்து விட்டது. கை கால்கள் கூட நடுக்கம் வர தொடங்கி இருந்தது.
நல்ல வாட்டசாட்டமாக இருந்த லட்சுமியின் உடல் உள்ளடங்கி, சதைகள் வற்றி, வயது முதிர்ந்த தோற்றம் பட்டு, தோல் சுருங்கி போனது.
“இப்படி ஓர் நிலையில் இவர்களை வெயிலில் வேலைக்கு அனுப்பி விட்டு, தான் மட்டும் எப்படி நோகாமல் உண்ணுவது” பச்சை தண்ணீர் கூட தொண்டை விட்டு இறங்க மறுத்தது அவளுக்கு.
இருந்ததை வைத்து மூவரும் சாப்பிடும் அளவிற்கு செய்து முடித்த நாயகி, எப்படியாவது தானும் ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டாள்.
தொடரும்.