Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 13

வதைக்கும் அகிம்சையே! – 13

by Indhu

அத்தியாயம் – 13

இப்படி ஒரு விபரீத முடிவை அமுதா எடுப்பாள் என்று கனவிலும் நினைத்ததில்லையே அவள்.

பிள்ளை இல்லை என்ற குறையை இவள் முகத்தை பார்த்து தானே இன்றளவும் மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறாள். ஆனால் அவளே தற்கொலைக்கு முயன்றால், பெறாத தாயுள்ளம் செத்து மடியாதா!

இதோ தளத்தின் மேலுள்ள காற்றாடி மாட்டும் இரும்பு கொக்கியில் தூக்கிட்டு, கால்கள் விட்டு விட்டு உதறித் துடிக்க, கண்கள் மேல்நோக்கி சொருகி உயிர் போகும் தருவாயில் கயிற்றில் தொங்கியவளை காப்பாற்ற வழி அறியாது, தவித்துக் கதறிய நாயகி, தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக்கொண்டு பைத்தியம் போல் அறையினை சுற்றி சுற்றி வந்தவள், எப்படியோ கடினப்பட்டு அமுதாவை காப்பற்றி விட்டாள்.

கழுத்தை சுற்றிலும் ரணப்பட்டு, அரைமயக்கத்தில் கண்கள் சொருக படுத்திருந்தவளின் வாயில், நீரை ஊற்றியவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லையே! அமுதாவை காப்பற்றி தரைக்கு கொண்டு வருவதற்குள், இவள் ஒவ்வொரு நொடியும் இறந்து துடித்த துடிப்பையெல்லாம், அமுதா கூட உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

கண்களை மெல்லத் திறந்து, பரிதவிப்போடு தன்னையே பார்த்திருந்த வளர்ப்பு தாயை, “அண்ணிஇஇ..” என்ற பெருங்குரலிட்டு தாவி அணைத்துக் கதறி அழ, நாயகி உடைந்து போனாள்.

“பாவி.. பாவி.. எதுக்கு டி இப்டி ஒரு காரியத்தை பண்ண. செத்து போற அளவுக்கு ஒனக்கு ந்நா என்னத்த டி கொடுமை பண்ணேன். பெத்த புள்ள மாறி பாசத்த கொட்டி வளத்தின பாவத்துக்கா, இப்டி ஒரு தண்டனைய எனக்கு குடுக்கப்பாத்த” அவள் முதுகில் இரண்டு கைகளாலும் அடி வைத்து, கதறி அழுத அண்ணியின் அடிகளை தடுக்காது, தானும் கதறிய அமுதா,

“தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க அண்ணி..” என்ற வார்த்தையை தான் தொடர்ந்து உதிர்த்து அழுதுக் கொண்டிருந்தாள்.

“ஒனக்கு புடிக்காத கண்ணாலத்தை எப்டி டி நடத்த விடுவேன்னு நெனச்ச. நீ கேட்டதை எதையும் சின்னதுல இருந்து ந்நா செஞ்சதே இல்லையா!

12வது வரைக்கும் படிக்கணும்னு சொன்ன, உன் அப்பா அண்ணனுங்ககிட்ட படாத பாடுபட்டு படிக்க வச்சேன். அதுக்கு நடுவால கம்ப்யூட்டர் கிளாஸ் போவணும்னு சொன்ன, அதுக்கும் எப்டியோ போக வழி செஞ்சேன்.

தாவணி போடுன்னா, எனக்கு சுடிதாரும் சீன்ஸு பேண்டும்தா வேணும்ன, சரி யார் கண்ணுலயும் மாட்டிக்காம போடுன்னேன். பிடிச்சதெல்லாம் ஒவ்வொண்ணா கேப்பியே, என்னத்தயாவது இல்ல முடியாதுனு சொல்லிருக்கேனா டி.

போதா குறைக்கு மேற்படிப்புக்கு வெளியூர்தா போவேன்னு ஒத்தகாலுல நின்ன, அதுக்கு ந்நா எம்புட்டு அடிஒதைப்பட்டு, வாங்கக்கூடாத ஏச்சி பேச்சையெல்லாம் வாங்கினேன்னு தெரியுமா டி ஒனக்கு!

இம்புட்டும் பண்ணவ, இந்த கல்யாணத்த நிறுத்தி ஒனக்கு புடிச்ச வாழ்க்கைய ஏற்படுத்தி குடுக்க மாட்டேன். எப்டி டி என்னைய மறந்துட்டு, அம்புட்டு ஈஸியா தூக்குல தொங்க முடிவு எடுத்த”

ஆதங்கம் தீர அவளை அடித்து கட்டிக்கொண்டு அழுத நாயகியை கண்டு, தானும் அழுவதை தவிர வேறு வழி இல்லையே!

“சொல்லு டி.. இம்புட்டு தூரம் சாவ துணிஞ்சி இருக்கேன்னா நிச்சயம் ஏதோ இதுல பெரிய தப்பு இருக்கு. ஒழுங்கா நெசத்த மட்டும் சொல்லு. எனக்கு தெரியாம என்ன தப்பு பண்ணின” உரிமையும் பேரன்பும் எங்குள்ளதோ, அங்கு தான் கண்டிப்பும் கோபமும் அதிக அளவில் வெளிப்படும்.

அமுதாவை தன் பெண்ணாகவே போதிப்பவளுக்கு, அவளின் இந்த முடிவை சாதாரணமாக கடக்கமுடியவில்லை. ஏதோ தவறுள்ளதை உணர்ந்த நாயகியின் இதயம் படபடப்பாக துடிக்க, அவள் தோள்களைப் பற்றி ஆவேசமாக உளுக்கினாள்.

“ஐயோ.. பெரிய தப்பு பண்ணிட்டேன் அண்ணி.. அதா வேற வழி இல்லாம பயத்துல சாக முடிவெடுத்தேன்” தேகம் குலுங்கி தலையில் அடித்துக்கொண்டு அழுதவளை, தெறித்த பார்வையால் மௌனமாக துளைத்த நாயகியின் மனதில், ஏதோ சொல்ல முடியா பாரம் அழுத்தியது.

“எங்க காலேஜ்ல வேலை பாக்குற மேக்ஸ் லச்சுறர் பையன் ஹரிஷ். தினமும் எங்க மேம பிக்கப் ட்ராப் பண்ண வருவான் அண்ணி. அப்டியே நானும் என் பிரண்ட்ஸ் எல்லாரும் அவனோட பிரண்ட்லியா பழக ஆராமிச்சோம். முதல்ல அவனுக்கு எம்மேல லவ் வந்து ப்ரொபோஸ் பண்ணான், ந்நா ஒத்துக்கள.

ஆனா போக போக அவனோட லவ் அண்ட் கேர்ல மெல்ல மெல்ல எனக்கும் அவனை பிடிச்சிது. ரெண்டு பேரும் எங்க லிமிட் தாண்டாம லவ் பண்ணோம். நம்ம குடும்பத்தை பத்தியெல்லாம் அவங்கிட்ட சொன்னேன்.

என்னதா அவங்க அம்மா டீச்சரா இருந்தாலும், மிடில் கிளாஸ் பேமிலிதான் அண்ணி. இப்போதா ஹரியும் யமஹா கம்பனில மேனேஜரா ஜாயின் பண்ணி இருக்கான். ஆனா என்ன சொன்னாலும்  அப்பாவும் அண்ணனுங்களும் எங்க லவ்க்கு ஒத்துக்க மாட்டாங்க அண்ணி.

ஏன்னா அவன் நம்ம ஆளும் இல்ல. வசதியும் இல்ல. என்னைய எப்டியும் பெரிய எடத்துல கட்டிக் குடுக்கதா நினைப்பாங்க. அதுவே நாங்க ஒன்னானா யாராலயும் எங்கள பிரிக்க முடியாதுனு, பயத்துல நானும் அவனும் த்..த்..தப்பு பண்ணிட்டோம் அண்ணி”

அழுதுகொண்டே அமுதா சொன்னதையெல்லாம் கேட்டு, அதிர்ச்சியில் நிலைகுலைந்து அமர்ந்திருந்தாள் நாயகி.

“என்ன காரியம் டி பண்ணிட்டு வந்திருக்க. அப்டியா ந்நா ஒன்னைய வளத்தின. இந்த விசயம் மட்டும் உன் அப்பா அண்ணனுக்கு தெரிஞ்சா, கொன்னு போட்டுடுவாங்களே டி ஒன்னைய” இடிந்து போன நாயகிக்கு, எப்படி பேசி இந்த சிக்கலை முடிப்பது என்றே ஒன்னும் விளங்கவில்லை.

“வெறும் தப்பு மட்டுந்தானா இல்ல, கரு களைப்பு ஏதாவது பண்ணி தொலைச்சிருக்கியா” கோபத்தில் அவள் முகத்தை பார்க்கவே தவிர்த்தாள்.

“ம்.முப்பது நாள் க்.குழந்தை உண்டாகி இருக்கேன் அண்ணி” தலை குனிந்தபடி சொன்னவளை மேலும் அதிர்ந்து பார்த்த நாயகி, தலையை இருக்கரத்தாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டவளுக்கு, உலகமே தலைகீழான உணர்வு.

இத்தனை தூரம் ஆகி, வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்த பின்பு, இனி என்ன சொல்லி, வீட்டில் உள்ள ஆண்களை சமாளிப்பது. ஆனந்தபாலன் கூட ஓரளவுக்கு வீட்டு பிரச்சனைகளில் ஈடுபட்டுக்கொள்ள மாட்டன். ஆனால் மற்ற இருவரும் ஆஸ்தி அந்தஸ்து கௌரவம் என்று உயிரையே விட்டுக்கொள்ளும் வர்க்கம்.

நாயகியை திருமணம் செய்து வைக்கவே தண்டாயிதபாணி பெரும் அளவிற்கு யோசனை செய்தார். சாதாரண கலை வேலை பார்க்கும் தங்கவேலு மகள் வேதநாயகி.

வசதி இல்லையென்றாலும் அழகில் குறைவின்றி இருந்தவளுக்கு, படிப்பு என்னவோ படுமந்தம் தான். ஒன்பதாம் வகுப்பும் தேறவில்லை. ஆனபோதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லையே!

எதைபற்றியும் கவலை கொள்ளாது ரெக்கை விரித்து சுதந்திரமாக பறந்த காலம் அது. ஆனால் அவளை ஈன்றவர்களுக்கு பெரும் கவலை, பெண்ணுக்கு பத்தொன்பது வயதாகியும் பூப்பெய்திடாமல் இருப்பது தான்.

பருவப்பெண்ணின் அனைத்தை வளர்ச்சிகளும், பாவையின் தேகத்தை அலங்கரித்தாலும், பருவம் எட்டினால் தானே ஒரு பெண் முழுமையடைய முடியும். அதுவே ஊராரின் வாயில் போட்டு எள்ளுருண்டையாக மெல்ல, தம்பதியினர் தவித்து போவர்.

யார் செய்த புண்ணியமோ, இருபது வயது தொடக்கத்தில் பருவமடைந்து, பெற்றோரின் வயிற்றில் பாலை வார்த்தாள் நாயகி. ஆனால் அதே அளவிற்கு அவள் அழகே அவளை வீட்டில் முடக்கிப் போட வைத்தது.

பருவம் எய்தாத போதே, ஊரில் உள்ள காளிப்பயலுகளின் கண்கள் மொத்தமும் அவள் மீதுதான் இருக்கும். இப்போதோ சொல்லவே வேண்டாம். மொத்த வாலிபர் கூட்டமும் அவள் வீட்டின் முன்தான் குத்தவைத்து இருந்தது.

வாசலை கூட்ட வெளி வந்தால் கூட நிம்மதி தொலையும். வயதுக்கு வந்த பெண்ணை பாதுகாப்பு இல்லாத குடிசை வீட்டில் தனியே விட்டு செல்ல முடியாமல், அவள் அன்னையோ, தந்தையோ யாராவது ஒருவர் மாறி மாறி அவளுக்கு காவல் காக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நாயகி வயதுக்கு வந்த அந்த ஒருவருடமும், வயிற்றில் நெருப்பைக்கட்டிக்

கொண்டு திரிந்தவர்களுக்கு, தேனாக கிட்டிய சம்மந்தம் தான் அமரதேவனுக்கு, பெண் கேட்டு தண்டாயிதபாணியே நேரில் வந்தது.

ஜோசியத்தில் அதிக நம்பிக்கை உள்ள நபர் தண்டாயிதபாணி. “ஒரு ஏழை வீட்டு பெண்ணை உன் மகனுக்கு முடிந்தால், அவன் வாழ்வும் செழிக்கும், உன் கௌரவமும் மக்களிடையே உயரும்” என்று குடும்ப ஜோசியர் முடிவாக சொல்லி இருக்க, வேறு வழியே இல்லாமல் யோசனையில் மூழ்கினார்.

அவர் மகள் அமுதாக்கு கொடுக்க ஒற்றுக்கொண்டதை போன்ற வரதட்சணையோடு வரும் தன் குலப் பெண்ணை தான், தன் மகனுக்கு கட்டி வைக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தவருக்கு, அடுத்த வேளை உணவுக்கே ஓடி உழைத்தால் தான் என்ற அளவிற்கு வறுமையில் வாழ்ந்து வந்த நாயகியை பற்றி அறிந்து முகம் சுளித்தார்.

முதலில் இத்தனை வறுமையில் பெண் எடுக்க வேண்டுமா என்ற அதிருப்தியில் வேண்டாம் என தவிர்க்க நினைத்தவர், பின் அத்தனை அழகும் கொட்டிக்கிடக்கும் நாயகியை கண்டதும், அப்படியே மனம் மாறிப் போனார்.

இவளை விடவா தன் மகனுக்கு அழகாக மனைவி கிடைத்து விட போகிறாள் என்று எண்ணியவருக்கு மனம் ஆறுதல் அடைய செய்த ஒரே விடயம், நாயகி குடும்பமும் அவரும் ஒரே குலம் என்பது மட்டும் தான்.

ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழ் ஆன எண்ணம் அவருக்கு. ஜோசியர் சொன்னது போல, அனைத்தும் கிட்டியது. ஆனால் தன் மகன் பெயரை சொல்ல ஒரு வாரிசு இல்லையே! என்ற கடுப்பில் அவளை என்னென்ன சொல்லி வதைக்க வேண்டுமோ, அத்தனையும் சொல்லி வதைத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த விடயமெல்லாம் நாயகியும் நன்கு அறிந்திருந்ததால், “இப்போது எப்படி அமுதாவின் விடயத்தை பற்றி இவர்களிடம் பேசுவது” என ஒன்றும் புரியாமல் இருந்தவளுக்கு, மண்டை குழம்பி சூடானது தான் மிச்சம்.

விடிந்தால் திருமணம் எனும் நிலையில், உயிர்ப்பே இல்லாமல் அறையில் முடங்கிக்கிடந்த அமுதாவை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்ட நாயகி, இரண்டு நாட்களாக நன்றாக யோசித்து தீர்க்கமாக ஒரு முடிவினை எடுத்திருந்தாள்.

எட்டுப்பட்டி ஊரும் அந்த மண்டபத்தில் சூழ்ந்திருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் குஜாலமாக அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை, கண்ணும் கருத்துமாய் சொல்லிக்கொண்டிருந்தான் மாப்பிளை.

ஆண்கள் மூவரும் விழுந்து அடித்துக்கொண்டு அனைவரையும் வரவேற்று, மற்ற வேலைகளை கவனித்துவிட்டு மணமேடைக்கு வந்திருக்க, ஐயர் “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்ற சில நிமிடங்களில் நேரங்களில்,

“ஐயையோ.. பொண்ணு ஓடி போச்சுப்பேஏ..”  என்ற அலறல் சத்தத்தில், அவ்விடமே பலத்த சலசலப்பில் மூழ்கியது.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!