இறுதி அத்தியாயம் – 37
“கோத பைல எல்லாத்தையும் எடுத்து வச்சிகிட்டியா! தண்ணி, ஜூஸ், மாதுளம் பழம் உறிச்சி வச்சது, அப்புறம் சாப்பாடு ஹான்.. எல்லாம் சரியா இருக்கு.. வேற எதுவும் மறக்கலையே! டாக்டர் ரிப்போர்ட்டு சரியா இருக்கானு ஒருதரம் பாத்துக்கோ. அங்கன போயி ஏதாவது காணலைனா வம்பா போய்டும்”
கோதையை கேள்வி கேட்டு, இவளே அதற்கு பதிலும் சொல்லிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படபடப்பில், நாயகி செய்யும் லூட்டி எல்லாம் பார்த்திருந்த கோதைக்கு சிரிப்பாக வந்தது.
“அக்கா எதுக்கு இம்புட்டு பதட்டம். பொறுமையா இருங்க”
“என்னத்த பொறுமையா இருக்க. நானே நாளு கிட்டத்துல நெருங்கிடுச்சேன்னு பதக்கு பதக்குனு இருக்கேன், நீ வேற எதையாவது பேசாத. வா வா நேரமாச்சி” அவள் கையை பிடித்துக்கொண்டு மெதுவாக அழைத்து செல்ல கோதையின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.
இப்போதெல்லாம் இந்த வீட்டில் எந்த ஒரு குறையும் இல்லை அவளுக்கு. தங்கம் போல தாங்க கணவன். அன்னை போல தாங்க நாயகி. அண்ணன் போல தாங்க தேவன். தங்கை போல அக்கறை காட்ட அமுதா என அனைத்து உறவுகளும் உயர்வாக நின்றது அவள் மனதினில்.
ஆனாலும் சின்ன சின்ன வருத்தம் அவள் மனதை அழுத்துவதை தடுக்க முடியாமல் தடுமாறுகிறாளே!
கணவனின் பழைய வாழ்க்கை ஒரு ஓரமாக இருந்து அவள் இதயத்தை குத்திக் கொண்டே இருப்பதை என்ன செய்து நிறுத்த.
பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாக பிறந்தால் அமுதாவை போல் ஒதுக்கம் காட்டி விடுவார்களோ! முக்கியமாக தன்னை அறவே வெறுத்து ஒதுக்கும் மாமானர், என் குழந்தையை ஏற்றுக்கொள்வாரா? மேலும் பல குழப்பங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.
“அம்மாவும் குழந்தையும் ரொம்பவே நல்லா இருக்காங்க. எப்ப வேணாலும் டெலிவர் பெயின் வரும். ஒரு நாலஞ்சி நாளுல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனா சரியா இருக்கும்” இப்பக்கம் நாயகி, அப்பக்கம் ஆனந்தபாலன், நடுவில் கோதை என உன்னிப்பாக மருத்துவர் சொன்னதை கேட்டுக்கொண்டு வீடு திரும்பிய இரண்டே நாளில் கோதைக்கு வலி வந்துவிட்டது.
கண்ணீர் காணாத ஆனந்தபாலனின் கண்கள் கலங்கி, மனைவியின் ஒவ்வொரு அலறல் சத்தத்திற்கும் மாண்டு மாண்டு மீண்டவனுக்கு, வீரிட்டு அழுத குழந்தையின் மழலை சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கி கற்சிலையாக நின்றான்.
“சார் பெண் குழந்தை பிறந்திருக்கு” பட்டு ரோஜாவை மெல்லிய துணியில் சுற்றி தாதி எடுத்து வர்ற, கரங்கள் நடுங்க மழலையை வாங்க தடுமாறியவனை கண்டு, வேகமாக ஓடி வந்த நாயகி கண்ணீரோடு வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“க்.கோத.. எப்டி இருக்கா..” கண்கள் அவன் மகவை வெறிக்க, உள்ளம் மனைவி நன்றாக இருக்கிறாளா அடித்துக்கொண்டது.
“அது.. சார்.. டாக்டர் சொல்லுவாங்க” என நகர்ந்து விட பின்னாலே மருத்துவரும் வந்தார் ஒருவித பதட்ட முகத்துடன். அவர் முகத்தை பார்த்தே அனைவர் நெஞ்சும் திக்திக் என்றது.
“டாக்டர் கோதை எப்டி இருக்கா” என்றதும் மருத்துவர் கூறிய பதிலை கேட்டது தான் தாமதம், மருத்துவமனையே கத்தல் கதறலில் கதி கலங்கி போனது.
“பெயின் ஓவராகி லாஸ்ட் டைம்ல அவங்களுக்கு பிக்ஸ் வந்து உயிருக்கே ரொம்ப கிறிடிக்கலா மாறிடுச்சு சார். குழந்தைய உயிரோட காப்பாத்தினதே பெரிய விஷயமா போச்சி. சாரி டூ சே திஸ், கடைசியா ஒரு முறை எல்லாரும் அவங்கள பாத்துக்கோங்க” மருத்துவர் கையை விரித்திட,
“கோதஆஆஆஆஆஆஆஆஆ..” அடித்து பிடித்து பெரும் அலறலோடு ஓடி வந்த கணவனை, வலி நிறைந்து பார்த்தவளின் கண்ணீர் மின்னிய கண்களை கண்டு செத்தே போனான் ஆடவன்.
“ஐய்யோ.. ஏய்.. குழந்தைய பெத்து நல்லபடியா எங்கிட்ட வர்றேன்னு சொன்னியே, டாக்டர் என்னென்னவோ சொல்லிட்டு போறாங்க டி.. பயமா இருக்கு கோத.. என்னைய ஏம்மாத்திடாம வந்திடு” சோர்ந்து சுருங்கும் கண்களை கடினப்பட்டு திறந்து வைத்து, கணவனை நோக்கி விரக்தி சிரிப்பை சிந்த, ஆனந்தபாலனின் கதறல் சத்தம் கோதை நெஞ்சையே உளுக்கிப் போட்டது.
“ம்.முடியலைங்க.. அக்.. ” ஒற்றை வார்த்தைக்கே நெஞ்சை அடைத்து சாவின் விளிக்கு சென்றாள்.
“ஏய்ய்.. கோத பயப்புறுத்தாத டி.. எனக்கு நீ வேணும்.. தயவுசெய்து வந்திடுமா..” வளவளவென வளைந்த நாராய் கிடந்தவளை தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொண்டு கணவன் கதற, மனைவி நிரந்தர தூக்கத்திற்கு கண் சொக்கினாளோ!
“ப்.பொம்பள ப்.புள்ளையா..” வார்த்தையே வரவில்லை மூச்சி அடைத்தது.
“ம்..” என்றான் சூடான கண்ணீர் அவள் முகத்தில் தெறிக்க.
“பொம்பள புள்ள தானேனு ஒதுக்கிடாம, உங்க எல்லாரோட பாசத்தையும் கொட்டி, தைரியமான பொண்ணா வளத்தி, நல்லா படிக்க வைங்க. வளத்துடுவீய தானே..?”
“வளத்துறேன் டி..” கண்ணீர் குரல் நடுங்கியது.
“ந்நா இல்லைனு திரும்பவும் குடிச்சி, க்.கண்டவகிட்டக்க போவ கூடாது. ப்.போவ மாட்டீய தானே..?”
“உ.உம்மேல சத்தியம் போவ மாட்டேன். நீ வந்துடு டி எங்கிட்ட” அவள் வாடிய முகத்தை தூக்கி கண்ணீர் முத்தமிட்டு துடித்து அழுதான்.
“ந்நா விட்ட ஸ்.சாபம் எனக்கே எதிரா திரும்பும்னு தெரிஞ்சிருந்தா, வாயவே த்.திறந்திருக்க மாட்டேங்க.. நீங்க கதறி துடிக்கிறது என்னால தாங்க முடியலையே .. ஆக்..” கண்ணீரோடு உடல் வெட்டியவளை இறுக அணைத்து, ஆஆ…எச்சில் ஒழுக கத்தி, இரும்பு கட்டில் முனையில் தானே தன் கையினை பலமாக அடித்துக் கொண்டான்.
“கேக்க நாதி இல்லைனு ஒரு பொண்ணோட உணர்வுகளை துச்சமாக்கி, இக்கட்டான நிலைல நிறுத்தி, என் உடம்பை வதைக்கிறதா நினைச்சி, என் மனசை கொடூரமா கொன்னு, இப்டி மோசமா நடந்துக்குற உங்களுக்கு, என்னைக்காவது ஒருநாள் நிச்சயமா அந்த கடவுள் கொடுமையான தண்டனைய குடுப்பான்.
அன்னைக்கு நீங்க என்ன மன்னிப்பு வேண்டி கண்ணீர் விட்டு கதறினாலும், யார் வந்து ஆறுதல் சொன்னாலும், அந்த மோசமான தண்டனைல இருந்து வெளியவர முடியாம துடிச்சி போவீங்க. இது இந்த அபலையோட சத்தியம்”
அன்று கோவத்தில் கண்ணகியாக மாறி கண்ணீரோடு உதிர்த்த கொடூர சாபம் தாமாகவே மாறி, தானே தன் கணவனை இத்தனை தூரம் வதைத்து துடிக்க வைப்போம் என தெரிந்திருந்தால், அன்றே மாண்டு இருப்பாளோ மங்கை!
“எல்லாம் என்னால தான்டி ந்நா ஒழுங்கா இருந்திருந்தா, நீ ஏன் அப்டி பேசி இருக்க போற. எதுவும் வேணாம் டி யாரும் வேணாம் டி.. ந்..நீ ஒருத்தி போதும்.. தயவுசெஞ்சி என்னைய விட்டு போகாத கோத.. இப்பதான் டி உன் கூட ந்நா சந்தோசமா வாழவே ஆரமிச்சேன்.. அதுக்குள்ள என்னையும் உசுரோட கொன்னுட்டு நீயும் செத்துடுவியா கோத..
ஏய்ய்.. கோத.. இதுவரைக்கு ந்நா பண்ண தப்புக்கெல்லாம் உன் காலுல விழுந்து கூட மன்னிப்பு கேக்குறேன் டி.. எங்கிட்ட வந்துடுமா..” எக்கி அவள் பாதங்களை தூக்கி முகத்தில் பதித்துக்கொண்டு கட்டான ஆண்காளை தேம்பி தேம்பி அழ, அங்கிருந்த அனைவரின் கண்களும் துக்க கண்ணீரில் ஆழ்ந்து, தாங்க முடியாத வேதனையில் துடித்துப் போயினர்.
கணவனின் கண்ணீரை அதற்கு மேலும் கண்கொண்டு பார்க்க முடியாத கோதையின் கண்கள் மேல்நோக்கி சொருகி உடல் தூக்கிவாரி போட, நடுங்கும் கரத்தால் கணவன் தலையினை மெல்ல வருடியபடியே, நாயகியின் கையில் குட்டியாக உறங்கி கொண்டிருந்த தன் மகவை கண்ணீரோடு பார்த்தாள்.
“கோத.. கோத.. ஏய்.. சாவடிச்சி போட்றுவேன். அதே மன்னிப்பு கேட்டேனே டி.. இன்னும் எதுக்கு பயம் காட்ற. வேணாம் கோத எனக்கு அந்த கொடுமையான தண்டனைய மட்டும் குடுத்துட்டு போயிடாத.. தாங்க மாட்டேன் டி..”
அவள் நெஞ்சோடு புதைந்து கதறித் துடிக்க, கணவனின் கண்ணீரை காண முடியாத தேவதை, தன் இதயத் துடிப்பை அஃதே நிறுத்தி விட்டாளோ!
திறந்திருந்த கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, பெண்ணிதழோ கணவனின் நெற்றியில் தனது கடைசி முத்திரையை பதித்துக் கொண்டிருந்தது.
“ஐய்யோ.. கோதஆஆஆஆ… எங்கள எல்லாம் விட்டு போய்டியா டிஇஇஇ..” நாயகி மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கத்தி அழுத சத்தத்தில்.
தெறித்த பார்வையால் தலை தூக்கி பார்த்தான்.
மகராசியின் கடைசி சொட்டு கண்ணீர் அப்போதே பக்கவாட்டில் விழ, உயிரற்ற கூடாக மாறியும் தன்னையே நோக்கிய அவள் பூவிழிகளை உள்ளங்கை நடுநடுங்க மூடிய ஆனந்தபாலன், உயிரோடு ஜீவன் பிரிந்து போனானே! அண்ணனவன் தாங்கி பிடித்தான் ஆனந்தனின் பலம் இழந்த உடலை.
பிறந்த பச்சிளம் மொட்டு தந்தையின் மடியில் கை சப்பி தவழ,
சிவப்பு நிற பட்டில், வில்லை அளவு நெற்றி குங்குமப் பொட்டிட்டு, உச்சி குங்குமம் மிளிர்ந்து, தலை நிறைய மல்லிப் பூ மணக்க, தங்கத் தாலி நெஞ்சில் குத்திட்டு, ஊதுபத்தி மணம் கமழ, தீர்க்க சுமங்கலியாய் ரோஜா மாலைக்குள் அலங்கரிக்கப் பட்ட பொம்மை போல கண்மூடி படுத்திருந்த மனைவியை சுற்றியும் ஒரே அழுகை குரல்.
“அம்புட்டு சொல்லியும் என்னைய ஏமாத்திட்டு போய்ட்டியா டி” வீங்கிய முகம் பரிதவித்து உதடுகள் முணுமுணுக்க, மனைவி படுத்திருந்த திசையையே கண் கொட்டாமல் வெறித்தான்.
மகள் இறந்து போன செய்தி கேட்டு பெருத்த அழுகையோடு ஓடி வந்த செல்வி,
“படுபாவி படுபாவி.. என் பொண்ண ஏமாத்தி அவள ஒரேடியா சாவடிச்சி போட்டியே டா.. நீயெல்லாம் நல்லா இருப்பியா. நாசமாதான் போவ.. ஐய்யோ.. கடவுளே.. என் பெத்த வயிறு எரியிதே..”
ஏற்கனவே செத்தவனை மேலும் மேலும் வார்த்தையால் குத்தி சாகடித்தவள், அவன் மூலமாக வந்த குழந்தையின் முகத்தை கூட பாராமல் அதற்கும் சேர்த்தே பல சாபங்களை வாரி இறைத்து விட்டு கண்ணீரோடு செல்ல, எதையும் காதில் வாங்கும் திறனற்றவனாய் கண்ணீர் தேங்க அமர்ந்திருந்த ஆனந்தன், பார்வையை மட்டும் அவளிடமே வைத்திருந்தான்.
இதோ இன்னும் சற்று நேரத்தில் அவள் உடலும் கருகி சாம்பலாக காத்திருக்க, கரம் நடுங்க தீ பந்தத்தை கையில் வாங்கிய நொடி “ஐய்யோ.. யம்மாடிஇஇஇஇஇ.. தீ பட்டா தாங்குவியா டி என் தங்கமே..” ஆனந்தன் அழுகையில் ஊரே கண்ணீர் விட்டது.
“உன்ன பூ போல பாத்துக்க நெனச்சேனே, இப்டி தீ வச்சி கருக்குற தண்டைய ஏன் டி இந்த பாவிக்கு தந்த..” ஜகஜோதியாய் எரியும் அவள் பூ உடலை கண்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு மண்ணில் புரண்டு கதறியவனை கனத்த மனதுடன் அங்கிருந்து அழைத்து சென்றான் அமரதேவன்.
கோபத்தில் விட்ட வீரியம் மிகுந்த வார்த்தையே தங்கள் வாழ்க்கையில் சாபமாக மாறி, தன் குடும்பத்தையே நிலைகுலைய வைக்கும் என முன்கூட்டியே தெரியாமல் போனதோ அந்த புண்ணியவதிக்கு.
இதோ அவள் ஈன்றெடுத்த பச்சிளம் அவள் ஜாடையில், அன்னை இறந்தது தெரியாமல் தந்தையின் நெஞ்சை முட்டி பசிக்கு அமுதம் கேட்டு வீரிட்டு அழ, குனிந்து பார்த்தவன் கண்களும் குட்டிமகளை கண்டு தேகம் குலுங்க கண்ணீர் வடித்தது.
பெண்ணை உதாசீனம் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக சேர்த்து, நிரந்தர அகிம்சை வழி தண்டனையைக் கொடுத்து சென்றாளோ!
பெண்ணை மதிக்க தெரியாதவன் மண்ணுக்கு சமம். பெண் பிள்ளை பெற்று அவன் கையிலே கொடுத்து ஆனந்தனை மனிதனாக்கி சென்றாளோ!
ஆரம்பத்தில் அவள் உணர்வுகளை வதைத்த பாவத்திற்கு, அவளின்றி உயிர் வதை கண்டான்.
பெண்களுக்கு மன வலிமை அதிகம் கணவன் இருந்தாலும் இல்லை என்றாலும் தன் நம்பிக்கையை மட்டுமே சார்ந்து வாழ்ந்திட முடியும்.
ஆனால் மனைவியை நேசித்து இழந்த ஒவ்வொரு கணவன்மார்களும் கை ஒடிந்த மரபாச்சி பொம்மைகளே!
அவள் நினைவுகள் கூட அகிம்சையாய் வதைத்து உயிருடன் வாழும் போதே நரகத்தை அனுபவிக்கும் கொடுமையை அவர்களே அறிவர்.
இனி விரும்பியே அவள் நினைவுகளை சுமந்து இன்பவதை படுவான், மகளை வளர்த்த வேண்டிய கட்டாயத்தில்.
******
“பிழையின் ரணமே!” பகுதி இரண்டில் மீண்டும் சந்திப்போம்.
ஆதரவளித்த அன்பர்களுக்கு இந்துவின் நெஞ்சார்ந்த நன்றிகள்.