Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 33

வதைக்கும் அகிம்சையே! – 33

by Indhu

அத்தியாயம் – 33

“கோத..”

“என்னங்க..”

“எங்கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறியா டி..” சற்று நாளாக அவள் நடவடிக்கை வித்தியாசமாக படவே அன்றொரு தினம் தன் நெஞ்சில் படுத்து கிடந்தவளிடம் யோசனையாக கேட்டான்.

“ந்.ந்நா.. என்னத்த மறைக்க போறேன் அதெல்லாம் ஒ.ஒன்னுமில்லைங்க..” சற்றே தடுமாற்றத்துடன் ஒலித்த குரலும், வியர்வையில் நனைந்த அவள் தேகமும் அவனுக்குள்ளும் தடுமாற்றத்தை தந்தது.

“ந்நா இப்ப முன்னாடி மாதிரி இல்ல. கோவப்பட்டு கைய நீட்டிப்புடுவேன்னு எல்லாம் படப்படாத டி. ஒனக்கு என்ன பிரச்சனைனாலும் எங்கிட்ட சொல்லு. என்னால முடிஞ்சத செய்றேன் சரியா..” அவள் வட்ட முகம் மலர்த்தி, கண்களால் அவள் கண்களை ஊடுருவியபடி சொன்னவனுக்கு, ஏதோ ஒன்று இவளிடம் சரியில்லை என்று உள்மனம் அடித்துக் கூறியது.

“சரிங்க..” சுரத்தில்லாமல் சொன்னவள் முகம் சடுதியில் வாடி போனதை நொடியில் கண்டு கொண்டான் ஆனந்தன்.

“என்னத்த டி மனசுல மறச்சி மறச்சி வச்சி எப்பப்பாரு மூஞ்சி சுருங்கி போற. எதுவா இருந்தாலும் சொல்லி தொலையேன்..” பொறுமை அறியாதவன், மனைவிக்காக, கடலளவு பொறுமையை கைமண் அளவு கற்று வைத்திருந்தான்.

“அ. து.. சொன்னா கோவப்பட மாட்டீய தானே” உவர் நீர் கண்ணில் சுரக்க கேட்ட மனைவியின் செயல் விசித்திரமாகவே தோன்றியது.

“இப்டியே பேசிட்டு இரு, தானா கோவம் வந்து நாலு அப்பு அப்ப போறேன் நாயே..” பொறுமை இழந்து கத்தும் போதே சாத்தான் அவன் மீது இறங்கி விட்டதை, நன்கு உணர்ந்து லேசான பதட்டத்துடன் மான் விழிகளை உருட்டி வைத்தாள் கோதை.

“இல்லைங்க, என் தம்பி மது இருக்கான்ல அவனுக்கு அடிக்கடி உடம்புக்கு முடியாம போது. கடைசியா அம்மாக்கு தெரியாம டாக்டருகிட்ட கூட்டிட்டு போனேன், வைத்திய செலவே ஜாஸ்தி ஆகும்னு சொன்னாக.

நானா ஏதாவது பண்ணி காசு குடுத்தாலும், மதுக்கு மேற்கொண்டு வைத்தியம் பண்ணாலும் அம்மா நிச்சயமா ஒத்துக்காது. இப்ப வேலைக்கு போற வீட்டுல எண்ணி பாத்து சம்பளம்னு குடுக்குறதா சீதா சொன்னா. அதே என்ன பண்றதுனு தெரியல”

குட்டி தம்பிக்காக கலங்கி கணவனிடம் ஆதரவுக்கு அடங்கியவளை, இதமாக அரவணைத்தவன்,

“இதுக்கா இம்புட்டு தயக்கம், அந்த திமிரு புடுச்ச பொடிப் பயலுக்காக இல்ல, என் பொண்டாட்டி ஒனக்காக எல்லாத்தையும் சரி பண்றேன் சரியா டி.. ஆனாலும் எனக்கு உன் தொம்பிய சுத்தமா புடிக்கல..” முகத்தை அஷ்டகோணல் ஆக்கிய கணவனை, தலை தூக்கி முறைத்தாள் கோதை.

“உங்க வயசு என்ன அவன் வயசு என்ன, எதுக்குங்க சும்மா பச்ச புள்ளைய வம்புக்கு இழுத்து வைக்கிறீங்க..” அவன் தாடி கன்னத்தில் செல்ல அடி வைத்தாள்.

“யாரு அவனா பச்ச புள்ள.. ஆளும் முழியும் அவன் சைசும்.. ஒருநாள் பாரு டி என்னைய சும்மா மொறச்சி மொறச்சி பாக்குறப்ப, அவன் வுசர் சட்டைய உருவி ஜட்டியோட ஓட வைக்கிறேன்..”

“ம்.. அவனும் லேசுப்பட்ட ஆளிலைங்க, சின்ன பையனா இருந்தாலும் பயங்கர கோவக்காரன்”

“ஆமா ஆமா பெரிய கோவக்காரன்.. டவுசரே இன்னும் அவைன் சீட்டுல சரியா நிக்கல, இதுல அவன் கோவப்பட்டு ந்நா அப்டியே பொசுங்கிபுடுவேன் பாரு..” பெரிதாக அலுத்தான்.

அவளோடு சகஜமாக பேசி வம்பளந்த கணவனோடு, தானும் சிரித்து பேசி கதையளந்த கோதை, எப்படி அவன் சுற்றி வளைத்து அவளைப் பற்றி கேட்டும், தண்டாயிதம் மிரட்டியதும், பிள்ளை உண்டான செய்தியும் தன்னிடம் சொல்லாமல் கமுக்கமாக இருந்தவளின் மீது கொலை வெறியே உண்டானது ஆனந்தனுக்கு.

கோதை சொன்னதை கேட்டு சில கணங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த தண்டாயிதம், சுதாரித்து ஏதோ பேச வாயெடுக்கும் முன், தன் எதிரே உக்கிரமான முகபாவனையில் கொதித்து போய் நின்றிருந்த மகனை கண்டு, மேலும் அதிர்ந்து வாயடைத்துப் போக, கோதையின் உடல் அப்பட்டமான பயத்தில் உதறல் எடுத்துவிட்டது.

“எ..என்னங்க அதுஊ..” அவள் திணறும் போதே, ஆஆ.. என்ற அலறல் சத்தம். அவன் அடிக்க ஓங்கிய கரத்தைக் கண்டே முகத்தை மூடி அலறி விட்டாள் கோதை.

“காரணம் சொல்லி சமாளிக்க பாத்தே.. அடிச்சே கொன்னுபுடுவேன்” ஆத்திரத்தை அடக்கமுடியாது பற்களை கடித்தவனின் கோபத்தில் தவித்து போனாள்.

தந்தையை ஒற்றை பார்வை பார்த்த ஆனந்தன், கண்ணீரில் பதகளிப்புடன் நின்ற கோதையை அழுத்தமாக பார்த்தவனாக,

“பெத்தவைங்க முக்கியந்தே, ஆனா நீதா என் வாழ்க்கை துணைனு முடிவு எடுத்த பொறவு, ஒனக்கும் எனக்கும் நடுவால எம்புட்டு பெரிய முக்கியமான உறவுங்க வந்தாலும் அது நமக்கு அந்நியந்தே..

எந்த ஒரு சூழ்நிலைலையும் ஒன்னைய என்னால யாருக்காகவும் உட்டுகுடுக்க முடியாது டி.. ஆனா எப்டி ஒன்னால மட்டும் என்னைய அம்புட்டு சீக்கிரத்துல உட்டுக்குடுக்க முடிஞ்சிது..?”

குற்றம் சுமத்தும் பார்வையால், கோபத்தில் ஜொலித்தவனை காணவே நெஞ்சில் திகில் பரவினாலும், குற்றவுணர்ச்சியில் நெஞ்சம் விம்மியது பெண்ணுக்கு.

“அம்புட்டு தூரம் கேட்டும் சொல்லாம மறச்சிட்டல்ல..” அவள் முகத்தில் இருந்த கனல் பார்வை, அவள் வயிற்றில் மென்மையாக பதிந்து தந்தையானவன் கண்களை கரிக்க வைத்தது.

“மறைக்கணும்னு இல்லைங்க, குழந்தை உண்டானதை கூட சந்தோசமா அனுபவிக்க முடியாம, என் மூலமா வர்ற குழந்தைய ஏத்துபீயலோ மாட்டியலோன்னு நெனச்சி, பயத்திலயும் பதட்டத்துலயும் ஒவ்வொரு நாளும் தவிச்சு கெடந்தேங்க. அதுமட்டும் இல்லாம நம்ம வீட்டு சூழ்நிலையும் சரி இல்லாத இந்த நேரத்துல, ந்நா பிள்ளை உண்டாகி இருக்குறத சொல்லலாமா, வேணாமானு தயக்கம் வேற இருந்தது”

கலக்கத்துடன் கண்ணீரோடு சொன்ன மனைவியை, மீண்டும் உச்சிக்கு ஏறிய கோபத்துடன் பார்த்த பார்வையில், கம் போட்டதை போல வாய் மூடிக்கொண்டாள் கோதை.

ஆனந்தன் பேசிய பேச்சிலேயே இருவருக்குள்ளுமான நேச பிணைப்பினை அப்பட்டமாக கண்டுணர்ந்த தண்டாயிதம், கேவலம் தகுதி குறைந்தவளுக்காக தன்னையே உதாசீனம் செய்யும் மகனை முறைத்து நின்றவரை சட்டை செய்யவே இல்லை அவன். அதில் கடுப்பானவர் அங்கிருந்து விருவிருவென சென்று விட்டார்.

பார்வை மொத்தமும் தன் மகவை சுமக்கும் மனைவி மீதே ஆர்ப்பரிக்கும் உணர்வுகளோடு பதிந்து கெடக்க, கோதை தான் தன்னவனின் ஆழ் பார்வையில் குறுகி நின்றாள்.

மனைவி தன்னிடம் உண்மை சொல்லாததில் தீராத கோவம் தான். அதற்காக வரத்தை வயிற்றில் பெற்று நிற்பவளை வதைக்க விரும்பாத ஆனந்தன், உள்ளுக்குள் பொங்கிப் பெரும் சந்தோசத்தில் கால்கள் தரையில் துள்ளாத குறையாக கலங்கி நின்ற மனைவி முன்பு மண்டியிட்டவன், தன் முகத்திற்கு நேரே இருந்த அவள் மென் வயிற்றில் அழுத்தமாக பதித்த சூடான முத்தமே தந்தையவன் மெய்அன்பை திரையிடாமல் தெளிவாக உணர்த்தி இருந்ததில், சிலிர்த்து போன கோதைக்கு இதைவிட வேறு என்ன ஆனந்தம் வேண்டும்.

“என்னங்க நெசமாலுமே இந்த குழந்தை வந்தது ஒங்களுக்கு சந்தோசந்தானா..” கணவனின் தலை கோதி அவன் முகத்தை பார்த்தவளின் கண்ணீர் துளிகள், ஆனந்தன் நெற்றியில் பட்டுத் தெறித்தது.

“இன்னும் ஒரு வார்த்த பேசுனாலும் அறைஞ்சி பல்ல பேத்துடுவேன் டி.. இம்புட்டு நாளும் சொல்லாம கமுக்கமா இருந்தல்ல, அப்டியே வாய மூடிக்க.. கேக்க வந்துட்டா பெருசா..” பற்களை கடித்தவன், தந்தையை கொதரி வைக்க அவரை தேடிய ஆனந்தன், அவர் இல்லாமல் போகவே , மீண்டும் மனைவியை முறைத்துவிட்டு தேவனின் அறைக்கு சென்றான்.

இங்கோ மனைவி தன்னை காண வராத ஏக்கத்தில் ஒவ்வொரு நாளும் அலம்பு செய்த தேவனுக்கு, நாயகி மீது ஆத்திரம் கூடிக்கொண்டே போனது.

“எம்புட்டு நெஞ்சி தகிரியம் இவளுக்கு, அவளுக்காக செத்து பொழச்ச என்னைய கூட பாக்க வர்ற முடியாத அளவுக்கு வெறுத்து போய்ட்டேனா.. அம்புட்டு தூரமா அவ கண்ணுக்கு ந்நா கொடுமைகாரனா தெரிஞ்சிருக்கேன்..” நினைக்க நினைக்க ஆண் மனம் கதறி, தானாக கண்ணீர் கசிந்தன விழிகளில்.

“ஆஸ்பத்திரில இருந்து ந்நா போறதுக்குள்ள ஒருதரமாவது நீயா வந்து பாத்துட்டா நல்லது டி.. நானா ஒடம்பு தேறி வந்தேன் நீ செத்த..”

உள்ளுக்குள் குமுறியவனுக்கு கோபம் ஒருபுறம் இருந்தாலும், மனைவி வேண்டுமென பேரேக்கத்தில் கண்கள் பூத்து மருத்துவமனை வாசத்தை சுவாசித்து உயிர்பின்றி கிடந்த தேவன், அன்று டிஸ்சார்ஜ் செய்ய சொன்னது தான் தாமதம், கோதை தடுக்க தடுக்க கேளாமல் புறப்பட்டு விட்டான் அவனது மாடபுறாவை தேடி.

எங்கே மருத்துவமனையில் இருந்தால் அருகில் இருக்கும் கணவனை தன்னை மீறி சென்று பார்த்து விடுவோமோ என்ற பேரச்சத்தில், அன்றைய தினமே வீட்டிற்கு வந்து விட்ட நாயகிக்கு, கத்திக் குத்துப்பட்டு கிடந்த கணவன் முகம் பார்க்க துடிக்கும் மனதுக்கு கடிவாளமிட்டு அடக்கி வைக்க முடியாது, பெரும்பாடு பட்டு தவித்துப் போனாள்.

தினமும் கடவுளை அர்ச்சித்து, கணவனுக்காக மூன்று வேளையும் கடவுளை வேண்டி, பூஜை அறையே சரணாகதியாகி கிடந்த மகளை பெருமூச்சு விட்டு பார்த்த பெற்றோர் இருவருக்கும் பெருங்கவலை தான் மகள் மருமகனை நினைத்து.

“இந்த அளவுக்கு நீயும் வருத்தப்பட்டு அந்த தம்பியையும் எதுக்கு நாயகி வருத்தப்பட வைக்கிற. நாங்க பாக்க போகும் போதெல்லாம் ஒன்னைய தேடி அந்த தம்பி எந்த அளவுக்கு ஏங்கி தவிக்குது தெரியுமா.. பாக்கவே பாவமா இருக்குமா.. நீ போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடீன்னா ரெண்டு பேத்துக்குமே மனசுக்கு நிம்மதியா போவும் பாரு”

லட்சுமி எடுத்து சொல்ல, நாயகியின் மனதிலோ தேவன் கடைசியாக சொன்ன வார்த்தை மட்டுமே, ஆறாத வடுவாக ஆழப்பதிந்து அவளை ரணமாக வருத்தி எடுத்தது.

புழுதி பறக்க நிறுத்திய காரில் இருந்து இறங்கிய தேவன் உடல் இன்னும் முழுதாக குணமடையவில்லை என்றாலும், மனைவி தன்னை பார்க்க வராத கோவத்தில் வலி மறந்து, தனது தடுமாற்றத்தை மறைத்து, படாரென கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவனை கண்டு ஸ்தம்பித்து போனாள் நாயகி.

வெள்ளை வேஷ்டி சட்டையில் நேர்கொண்ட ராஜபார்வையில், சிங்கம் போல நடக்கும் அவன் வேகமும், காப்பு அணிந்த கரத்தை நீட்டி அவன் பேசும் தோரணையும் என எப்போதும் கம்பீரமான தோற்றத்துடன் நடக்கும் கணவன்,

இப்போது உடல் மெலிந்து, நடை தோரணை மாறி, வலியில் முகம் சிவந்து என ஆளே மாறி வந்திருந்தவனை கண்டு இருதயம் பரிதவித்து கண்ணீர் வழிய நின்றவளின் கழுத்து, தேவனின் கையில் சிக்கி வதைகண்டது.

“தம்பிஇஇஇ..” அவளின் பெற்றோர் பதறிக் கத்த, அவன் பார்த்த ஒற்றை பார்வையில் இருவரும் பெண்ணை பார்த்தபடியே வெளியேறி இருக்க, தேவனின் அழுத்தமான பிடியில் நாயகியின் கண்கள் அப்பட்டமான அச்சத்தில் விரிந்து, மூச்சிக்கு முடியாமல் தொண்டைக்குழி அடைத்தது.

“இந்த அளவுக்கு எப்டி டி கல்நெஞ்சக்காரியா மாறின.. ஒவ்வொரு நிமிசமும் நீ வருவ.. நீ வருவன்னு எதிர்பாத்து எதிர்பாத்து சாத்தி கெடந்த கதவையே வெறிச்சி பாத்து படுத்து கெடப்பேன் டி.. ஆனா நீ கடைசி வரைக்கும் வரவே இல்லைல..” அனலாக கோவம் அவன் கண்களில் கொப்பலித்தாலும், அவனது கோபத்தில் உள்ள வேதனையும் அப்பட்டமாக பிரதிபலித்தன விழிகளில்.

நாயகி உடல் விரைப்பதை உணர்ந்த தேவன், மெல்ல தனது பிடியினை தளர்த்திட, லொக் லொக் இரும்பிய நாயகி, சோர்ந்து போய் இருக்கையில் அமர்ந்த கணவனை கண்டு நெஞ்சே பதைத்து போனது.

“ந்நா செத்து போயே பொணமா கெடந்திருந்தாலும், எம்மேல உள்ள கோவத்துல என்னைய பாக்க வந்திருக்க மாட்ட தானே டி.. அந்த அளவுக்கு ந்நா பண்ண கொடுமைல என்னைய நீ வெறுத்துபுட்ட அப்டித்தானே..”

வெற்று சிரிப்போடு கேட்ட தேவனை நேர்கொண்டு பார்க்க முடியாது, முகத்தை மூடி குலுங்கி அழுத மனைவியை அழுத்தமாக ஏறிட்டான் அமரதேவன்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!