Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 32

வதைக்கும் அகிம்சையே! – 32

by Indhu

அத்தியாயம் – 32

காலை கதிரவன் முகத்தை பிரகாசிக்க நீள் விழிகளை உருட்டி மெதுவாக கண் திறந்த நாயகி, தலையில் ஏற்பட்ட வலியில் ஸ்ஸ்.. என முகம் சுணங்கி மீண்டவளின் நினைவில், நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தோன்றி மறைய படுத்தபடியே திடுக்கிட்டு அதிர்ந்தாள்.

“அச்சோ..அவையலுக்கு என்னாச்சி..” பதட்டமாக எழ முயல, அரக்கன் மிதித்த மிதியில் நெஞ்சமெல்லாம் வலி சுள்ளென்றது.

“ம்.அ..அம்மா.. அவையலுக்கு என்னாச்சிம்மா..” அழுகையோடு லட்சுமியின் கரத்தை பிடித்தவளுக்கு, மயக்கத்தை தாண்டியும் தேவனினின் அலறல் சத்தம் கேட்டது போலும், இமைகள் மூடினாலும் கண்ணீர் மட்டும் வேதனையாக வழிந்தது அச்சத்தம் கேட்க கேட்க.

“கொஞ்சம் அமைதியா இரு நாயகி” அவளை அமைதி படுத்த முயன்றவர், மெல்ல தேவன் இருக்கும் நிலையினை சொல்ல,

“கத்தியால குத்திப்புட்டாகளா..!” வறண்ட தொண்டைக்குழி அடைக்க, வேர் முறிந்த மரமாக தெறித்த அம்பகத்தில் நீர் வழிய உயிர் துறந்த வேதனை கொண்டாள்.

அறுவை சிகிச்சை முடிந்து இருபத்தி நான்கு மணி நேரம் முடிந்து போனது, இன்னும் சற்று நேரத்தில் கண்விழிக்க தயாரா இருந்தான் தேவன். ஆழமான கத்தி குத்து தான் உயிர் பிழைத்ததே, கடவுள் அணுகிரதை என மருத்துவர் கூறியதை நாயகி கேட்டதும், அவள் மனம் எப்படியெல்லாம் துடித்து கதறியதோ! வெளிய கத்தி அழ தான், அவள் உடல்நிலை ஒத்தொழைக்கவில்லையே!

“அம்மாடி தேவா தம்பி கண்ணு முழிச்சிடுச்சாம். கண்ணு முழிச்சதுல இருந்து நொடி விடாம ஒன்னைய தேடுறதா கோத சொல்லிட்டு போச்சி, மெதுவா எந்திரிச்சி வா தம்பிகிட்ட கூட்டிட்டு போறேன்” பெற்றோர் இருவரும் மருமகன் உயிர் பிழைத்ததில் உவகை கொண்டு மகளை அழைத்து செல்ல வந்திருக்க, ம்ஹும்.. என இட வலமாக தலையசைத்தவளை இருவரும் புரியாமல் பார்த்தனர்.

இங்கோ, “அ.அவள எ.எங்க கோத..” கண் விழித்ததில் இருந்து பார்வை அலைபாய, ஆவலாக மனைவியை தேடிய தேவனை சமாளிக்க முடியாமல் திணறினாள் கோதை.

“வருவாக மாமா.. நீய அசையாம படுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல அழைச்சிட்டு வந்திடுவாக..” கோதை சொன்ன சில மணித்துளியில்,

“பக்கத்து வாடுல இருந்து இங்கன வர்ற எம்புட்டு நேரம் ஆவும்.. அவ நல்லா தானே இருக்கா.. பேசாம நானே அவள போயி பாத்திடறேன்” அத்தனை வலியிலும் கையில் இருந்த ஊசியை புடுக்கிவிட்டு எழுந்து செல்ல முயற்சிக்க,

“அச்சோ படுங்க மாமா.. ஏற்கனவே ரொம்ப கஸ்டப்பட்டு காப்பாத்தினதா டாக்டர் சொல்லிட்டு போனாக. அதுக்குள்ள இம்புட்டு தூரம் ஒடம்ப வருத்திக்கிட்டா எப்டி.. கொஞ்சம் பொறுமையா இருங்க மாமா..” கோதை அவனை சரியாக படுக்க வைக்க, வலியிலும் அவள் வராத கோபத்திலும் ஆஆஆ.. என கத்தியவனை காணவே பாவமாகி போனது.

“தப்பு பண்ணாதமா நாயகி, அங்க கத்திகுத்து பட்டு செத்து பொழச்சி கெடக்குறது உன் புருசன் தானே.. நீயே போயி பாக்க மாட்டேன்னு சொன்னா எப்டிமா.. அந்த கோத பொண்ணு உன் புருசங்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறா.. அவர் நீதா வேணும்னு அடம் பண்றார்னு.. வீணா வீம்பு பண்ணாம வாம்மா..”

மெதுவாக எழுந்து வீட்டிற்கு செல்ல தயாரான மகளிடம், பக்குவமாக எடுத்து சொல்லியும் நாயகி வருவதாய் இல்லை.

“ஒருதரம் அவர் முகத்துல முழிச்சதுக்கே சாக கிடைக்குறார்.. திரும்ப திரும்ப பாத்து அவையலுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சிதுன்னா என் உசுரே போய்டும்மா.. ந்நா அவையல பாக்காம இருக்குறதுதே நல்லது” கண்ணீரை துடைத்துக்கொண்டு சொன்ன நாயகியை பெருமூச்சு விட்டு பார்த்தனர்.

அன்று கோவத்தில் தேவன் உதிர்த்த வார்த்தை, நாயகி மனதில் ஆழப் பதிந்து, பலமாக பாதித்து போனதை யாரும் உணராமல் இல்லை. இருந்தும் வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைப்பது போல, தேவனே மனமிறங்கி வந்தும் இவள் வேண்டாத பயம் கொண்டு, ஒதுங்கி போவதை நினைத்து கவலையாகி போனது அனைவருக்கும்.

“யோவ்.. ஓடாத நில்லு.. கைல மாட்டுன சங்கறுத்துடுவேன்..” கழுகு விழிகள் சிவக்க, தரையில் பிரண்ட கைலியை காலால் நெம்பி தூக்கி கட்டியபடி வேக நடையில் வருவதே, பலம் கொண்ட காட்டுயானை வெறித்தனமாக துரத்தி வரும் தோரணையை கொடுக்க, ஆனந்தை பார்த்து பயந்தடித்து ஓடிய சக்கரைக்கு அல்லில்லை.

ஊர் முழுக்க பரவிய செய்தியில், தன் குட்டுகள் அனைத்தும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு போனதில், அவ்விருவர் மீதும் கொலைவெறியில் பற்களை கடித்த சக்கரைக்கு பதவி ஆசை போயி, உயிர் பொழச்சா போதும் என்ற உயிர் பயம் வந்து குடும்பத்தோடு அவரது பாதுகாப்பு படை நிறைந்த எஸ்டேட்டுக்கு வந்துவிட்டார்.

மருத்துவமனையில் இருந்து நேராக சக்கரை வீட்டிற்கு தேடி வந்திருந்த ஆனந்துக்கு, ஏமாற்றமாமே எஞ்சிட, அங்கிருந்த ஆட்களை அடி புரட்டி எடுத்து விட்டு நேராக எஸ்டேட்டுக்கு வந்த ஆனந்தன், அங்கிருந்த அனைவரையும் ஒரு கை பார்த்துவிட்டு, இதோ சக்கரைக்கே  அவரது எஸ்டேட்டை சுற்றி பார்க்கும்படி வைத்துவிட்டான்.

“வேணாடே.. எம்மேல கைய வச்சா வீண் பிரச்சனை ஒனக்குதே.. மரியாதையா போய்டு.. எனக்கும் உன் அண்ணங்காரனுக்கும்தே போட்டியே தவிர ஒனக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல.. தேவை இல்லாம நீ நடுவுல வராதலே போய்டு..”

ஆனந்தின் வெறியான தோற்றத்தில் பயந்து, எச்சரிக்கை கொடுத்தபடியே தன் எஸ்டேட்டையே சுற்றி சுற்றி மூச்சிறைக்க ஓடிய சக்கரையை, அசட்டு சிரிப்போடு பின் தொடர்ந்தான் ஆனந்தன்.

“அதையே தான்டா நானும் சொல்றேன். உன் போட்டி என் அண்ணங்காரனோட முடிஞ்சி போச்சி, அத்தவிட்டு பெரிய புடுங்கி மாறி என் வீட்டு பொம்பள மேல என்ன மை*துக்குடே கை வைக்க சொன்ன..” ஆங்காரமாக சக்கரையின் பின் சட்டையை பிடித்து தூக்கி திருப்பி, முகத்தில் ஒரு குத்து விட, வயதான கிழம் அலண்டு போனது.

“ஆஆ.. ஏதோ பதவி மேல இருந்த ஆசைல தெரியாம பண்ணிட்டேன், இதுக்கு மேல எனக்கு பதவியும் ஒன்னும் வேணா.. என் குடும்பத்துக்காக என்ன மன்னிச்சி உட்ருபா” ஒற்றை அடியிலே சரண்டர் ஆன கிழத்தை புழுவை போல பார்த்தவனுக்கு, மன்னித்து விடும் எண்ணம் மட்டும் துளியும் இல்லை.

“அது எப்டி எப்டி.. தேவா பொஞ்சாதிய கொன்னுபுட்டு அந்த பழிய தூக்கி அவம்மேல போட்டு, அவன் பதவி குடும்பம் வாழ்க்கை எல்லாத்தையும் திட்டம் போட்டு கெடுக்க நெனச்சது தெரியாம பண்ணதா.. அதுவும் அவள நாசம் பண்ணி கொல்ல பாத்தத எப்டிடா மன்னிக்க சொல்ற..” மீண்டும் ஒரு அடி செவிலில் ஓங்கி விட, தலைக்கு மேல் பூச்சி பறந்தது.

“தம்பி தம்பி.. வயசாகி போயி மனுசனுக்கு மூளை கெட்டு போச்சிப்பா.. இவரு பண்ணதுக்கெல்லாம் நாங்க உங்க குடும்பத்தார் எல்லார் காலுலயும் விழுந்து மன்னிப்பு கேக்குறோம். எங்களுக்காக இந்த மனுசன மன்னிச்சி உட்டுடுப்பா.. எங்களுக்கு எல்லாம் இவரை தவிர வேற யாரும் கிடையாது”

சக்கரையின் மனைவி, மகன், மருமகள், பேரன் பேத்தி என அனைவரும் அவருக்காக அழுது, கெஞ்சி மன்னிப்பு கேட்டிட, யாரினுடைய கண்ணீருக்கும் மன்னிப்புக்கும் துளியும் மசியாத ஆனந்தன், தேவன் மட்டும் நன்றாக திரும்பி வந்தால் மூவரையும் கொன்று புதைக்க வாய்ப்பிருப்பதை நன்கு உணர்ந்தவன், சக்கரையும் அவர் ஏவிய ஆட்களையும் வெளியே வரமுடியாதபடி சாட்சியோடு காவலர்களிடம் ஒப்படைத்த ஆனந்தன், மீண்டும் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

இங்கோ தாயை தேடி அடம் பிடிக்கும் பச்சிளம் போல, மனைவி பார்க்க அடம் பிடித்து, கத்தி கூச்சலிட்டு எம்பி குதித்து அமர்க்களம் செய்தவனை, அதற்கு மேலும் சமாளிக்க முடியாது, மருத்துவரை அழைத்து வந்து மையக்க மருந்து செலுத்தி உறங்க வைத்த கோதைக்கு, கர்ப்ப கால உபாதைகள் வேறு மிகவும் படுத்தி எடுத்துவிட்டது.

“வயிறு பிரட்டி விட்டு அவசரமாக பாத்ரூம் நோக்கி ஓடிய கோதை, வயிற்றில் இருந்த மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு சோர்வாக முகத்தை துடைத்தபடி நடந்து வர்ற, வழி மறித்து நின்றார் தண்டாயிதம்.

ஆனந்து மதிக்காது பேசி சென்றதில் அதீத கோபத்தில் இருந்தவருக்கு, தேவன் கண் விழித்த செய்தி கேட்டு பதைப்பாக உள்ளே சென்று நலம் விசாரித்தவரை, பார்க்க மருத்துவிட்டான் தேவன்.

“தேவா அப்பா வந்திருக்கேன் ப்பா..” தவிப்பாக அவன் கரம் தொட,

“தெரியும் ப்பா, ந்.நாயகிய பாத்துட்டு உங்கிட்ட மெதுவா பேசுறேன் போ..” கண்ணை திறக்காது அவன் அழுத்தமாக சொல்ல, எரிச்சல் மூண்டியது அவருக்கு.

“அப்பாவ விட அவ ஒனக்கு ஒசத்தியா போய்ட்டாளா தேவா..” தன் கைக்குள் இருந்த மகனும் தன்னை நிராகரித்ததில் என்னவோ பறிகொடுத்த உணர்வு தோன்றியது.

“எப்பவும் நீ எனக்கு ஒசத்திதா ப்பா.. ஆனா என் பொஞ்சாதி எனக்கு உசுரு.. என் கோவமும் அவதே என் சந்தோசம் நிம்மதி எல்லாமே அவதே.. அவ இல்லாத இந்த தேவன் வெறும் மண்கூடு ப்பா.. அவ என் பக்கத்துல வேணும்” கண்ணை திறவாது மனைவி தான் பார்க்க வேண்டும் என அவர் கையையும் பிடித்துக்கொண்டு பொண்டாட்டி வேணும்னு அடம் பண்ண, மனுசன் டென்சனாகி போனவர் தான் இப்போது கோதை முன்பு நிற்பது.

“ஒன்னும் இல்லாத குடும்பத்துல இருந்து வந்த நாயி.. என் பையன வளைச்சி போட்டதும் இல்லாம, என் பெரிய பையன் கரிசனத்தையும் வாங்கிட்டு, என் பசங்க ரெண்டு பேத்தையும் எனக்கு எதிரா மாத்திப்புட்டல்ல..” பற்களை கடித்த பெரியவரை பீதியாக பார்த்த கோதை, முகத்தில் பூத்த வியர்வை துளிகளை புடவை நுனியால் ஒற்றி எடுத்தாள்.

“ந்.நீய நினைக்கிற மாறி ந்நா ஒன்னும் தப்பான பொண்ணு இல்லைங்க ம்.மாமா..” திக்கித் திணறியபடி தன்னை அவருக்கு புரியவைக்க முயல,

“ச்சீ.. வாய கழுவு.. கண்ட சாக்கடையெல்லாம் என்னைய மாமானு கூப்பிடறதா.. நெனச்சி பாக்கவே கொமட்டுது” அப்பட்டமான வெறுப்பை காட்டியவரை கண்டு கண்ணீரோடு தலைகுனிந்தாள் கோதை.

“அன்னைக்கே உங்கிட்ட என்ன சொன்னேன், மரியாதையா என் மவன உட்டுபோட்டு எங்கனயாவது போய்டுனு சொன்னேனா இல்லையா.. ஆனா நீ ந்நா சொன்னதையெல்லாம் மறந்துபுட்டு வசதியான வாழ்க்கைய அனுபவிக்க, என் மவன மயக்கி முந்தானைல முடிஞ்சி வச்சிக்கிட்டியா..” அதட்டலாக கேட்டதும் நடுங்கி போனாள்.

ஆனந்தோடு ஓரளவுக்கு மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய கோதையை, சந்தித்து பேசிய தண்டாயிதம், “என் பையன உட்டும் அவன் வாழ்க்கைய உட்டும் மரியாதையா ஓடி போய்டு.. எங்க தகுதிக்கு ஏத்த பொண்ணா பாத்து ந்நா கட்டி வச்சி,  அவன் வாழ்க்கைய சிறப்பிச்சிக்கிறேன். அத்தவுட்டு அவன காரணம் காட்டி கண்ட சாக்கு சொல்லி இங்கனவே இருக்க நெனச்ச, நிம்மதியா வாழவிட மாட்டேன்..”

அன்று குரோதமாக மிரட்டி விட்டு சென்றது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகம் வந்ததும் அச்சத்தில், முகம் வெளுத்து நின்ற கோதை,

“ந்நா ஒங்க தகுதிக்கு வேணும்னா குறைஞ்சவளா இருக்கலாம், ஆனா ஒழுக்கத்துல எந்த ஒரு குறையும் இல்லாமதே ஒங்க மவனுக்கு வாக்கப்பட்டு இருக்கேன்.

நானே போறேன்னாலும் அவைய என்னைய விடமாட்டாக.. சொல்லாம போனாலும் என்னைக்கா இருந்தாலும் பிரச்சனைதே.. அவையலுக்கு என்னையதே புடிச்சிருக்கு. எங்கூட இருந்தா சந்தோசமா இருக்காக..

முக்கியமா கெட்ட சகவாசத்த எல்லாம் நிறுத்திப்புட்டு, இப்பதே மனுசனாவே மாறி இருக்காவ.. இது போதாதா ஒங்களுக்கு அவையல பாத்து சந்தோசப்பட. தயவுபண்ணி எங்கள வாழ விடுங்களேன்..”

கண்ணீரோடு அவரிடம் வாழ்க்கை பிச்சை கேட்டு கையேந்திய கோதையை இம்மியும் மதிக்கவில்லை அவர்.

“என் சந்தோசமே என் பசங்க ரெண்டு பேத்தும்தே.. அவனுங்கள என் தகுதிக்கு ஏத்த பொண்ணுங்களுக்கு கட்டி வச்சி புள்ள குட்டியோட சந்தோசமா வாழுறத பாத்துட்டு ந்நா நிம்மதியா கண்ண மூடனும்.. அம்புட்டுதே.. நடுவுல வந்த நீங்க ரெண்டு மூதேவிங்களும் எக்கேடாவது கெட்டு ஒழிங்க”

எப்படியாவது மகன்களுக்கு வேறு வாழ்க்கை அமைத்து தர்ற துடியாக துடித்தவர் காலிலே விழுந்து விட்டாள் கோதை.

“தயவுபண்ணி கருணை காட்டுங்கய்யா.. வாழுற கொஞ்ச காலம் அவையலோட நிம்மதியா இருந்துக்குறேனே.. வாரிசு தானே உங்க கவலை, உங்க மகன் வாரிசு இப்ப என் வயித்துல வளருது.. அதுக்காகவாது என்னைய அவையலோட வாழ விடுங்கய்யா”

காலில் விழுந்து கெஞ்சி அழுத கோதையை அவர் அதிர்ச்சியோடு நோக்க, மருத்துவமனைக்கு வந்ததும் உறங்கும் அண்ணனை பார்த்துவிட்டு மனைவியை தேடி வந்த ஆனந்தபாலன், அவள் கடைசியாக சொன்னதை கேட்டு ஓர் நொடி உறைந்தாலும், பின் ஆத்திரத்தில் கை முஷ்டி இறுக்கினான்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!