அத்தியாயம் – 31
அன்று வேலையை முடித்துவிட்டு, காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்ட தேவன், ஏதோ சிந்தனையில் காரோட்டி வந்து முன்னே ஆள் நிற்பதை தாமதமாகவே உணர்ந்தவனாய் நூலிழையில் சடன் பிரேக் போட்டு நிறுத்திய வேகத்தில், கடுங்கோபத்தில் வெளியே வந்தான் தேவன்.
எதிரே இருந்த நபரோ உடலை வளைத்து பின்னால் துள்ளி குதித்து தன்னை காத்துக் கொண்டவனாக, உயிரை கையில் பிடித்துக்கொண்டு மூச்சிறைக்க நிற்க,
“ஏலேய்.. அறிவில்ல ஒனக்கு.. எதுக்குடே என் காருக்கு முன்னாடி வந்து நின்னு உசுரவிட பாத்த..” பற்களை கடிதபடி அடிக்க பாய,
“அண்ணே.. அண்ணே.. அடிக்காதண்ணே.. ந்நா சாக வரல, சாக போற உன் பொஞ்சாதி உசுர காப்பாத்த சொல்லதே வந்தேன்” அவசரகதியில் உரைக்க, உறைந்த நிலையில் இருந்து மெல்ல மெல்ல கரத்தை கீழிறக்கினான் தேவன்.
“டேய்.. என்னடே சொல்ற என் பொஞ்சாதி உசுருக்கு ஆபத்தா..” இதய அதிர்வோடு நம்பாமல் பார்த்தான்.
“ஆமாண்ணே.. சலவ துணி வாங்க காத்தால சக்கரபாண்டி வீட்டுக்கு போயிருந்தேன். அந்த வீட்டு அம்மா நெறைய துணி இருக்கு மேல வந்து எடுத்துக்கனு சொல்லி கூட்டிட்டு போச்சி. அப்டி வீட்டுக்குள்ள போகைல, சக்கரபாண்டியும் அவர் ஆட்களும் பேசிகிட்டத அரைகுறையாதே கேட்டேண்ணே..
அப்டி அரைகுறையா கேட்டதுல தேவா பொஞ்சாதினு குறிப்பிட்டு சொல்லி, அவள முடிச்சி விட்ருங்க, கௌரவத்துக்காக சொந்த பொஞ்சாதிய கொன்னு பழி தீர்த்துட்டானு அந்த பழிய தூக்கி தேவா மேல போட்டுங்கனு சொன்னது தெளிவா என் காதுல கேட்டுச்சு..
ந்நா கெளம்புறதுக்கு முன்னாடியே அவைங்க கெளம்புனத பாத்தேன், அதே எல்லா வேலையும் அப்டியே உட்டுப்போட்டு உங்கிட்ட விசயத்த சொல்ல ஓடியாந்தேண்ணே..”
தனக்கு தெரிந்ததை மொத்தமும் ஒன்று விடாமல் சலவைக்காரன் கூறிட,
“டேய்.. என்னடா சொல்ற, நீ சொன்னது எல்லாம் நெசந்தானா?” வெளுத்த முகத்துடன் நம்பாமல் கேட்டான்.
“என் ஆத்தா மேல சத்தியாமா நெசந்தாண்ணே” தன் தலை மீது கை வைத்து சத்தியம் செய்தவனை அதற்கு மேலும் சந்தேகம் கொள்ளாமல், நன்றி சொல்லும் விதமாக அவன் தோளில் தட்டிய தேவன், மின்னல் வேகத்தில் காரை கிளப்பிக்கொண்டு நாயகி வீடு நோக்கி சென்றவனின் உள்ளமும் தேகமும் நடுக்கத்தில் ஜீவன் துடித்துப் போனது.
“வாங்க தம்பி ஒக்காருங்க” வீட்டிற்கு வந்த மருமகனை மரியாதை நிமித்தமாக இருவரும் அழைக்க, அவன் எங்கே நிதானமாக இருந்தான் கவனிக்க.
“அவள எங்கே..?” அவசரமாக கேட்ட தேவன், அவர்கள் பதில் அளிக்கும் முன்னவே வீட்டின் மூலை முடுகெங்கும் தேடியவனிடம்,
“இப்பதா தம்பி ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடி கடைக்கு போனா” அவனது பதறிய நிலையை கண்டு இவர்களும் பதட்டமாக பதில் தந்திருக்க, மச்.. தலையை பிய்த்துக்கொண்ட தேவன் மீண்டும் அவசரமாக காரை கிளப்பினான்.
எங்கே எங்கே எங்கே அவள்..?? கிராமத்தில் உள்ள மொத்த சந்து பொந்து விடாது தேடி, பார்ப்போர் பலரிடமும் நாயகியை பற்றி விசாரித்து விட்டான். மூச்சிறைப்பும் படபடப்பும் கூடியதே தவிர நாயகியை எங்கும் காணாது சிந்தை தவறியவன் போல, நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்த தேவனின் கண்கள் ரத்த ஆறாக குலம் கட்டி நின்றது.
“ஏலேய்.. ஆனந்து..ஊ..” அலைபேசியில் ஒளித்த நடுக்கமான அண்ணன் குரலில் இமைகள் சுருங்க நெஞ்சம் அடித்துக்கொண்டது தம்பிகாரனுக்கு.
“அண்ணே, ஏதாவது பிரச்சனையா..” தோட்டத்து வேலை பார்த்தவன் அப்படியே போட்டுவிட்டு தோளில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தான் அவசரமாக.
“ஆமாடே, இந்த சக்கர எம்மேல உள்ள கோவத்துல நாயகிய கொல்ல ஆள அனுப்பிச்சிட்டான்டா, அவள எங்கனயும் காணல படபடப்பா வருதுடே..” எதற்கும் கலங்காத தேவன், மனைவியியை காணாது தவிப்பில், அறியாத அச்சமெல்லாம் உணர்த்தான்.
“ஒன்னு ஆவாதுண்ணே.. நீயி தகிரியமா இரு.. இப்பவே நீ இருக்க எடத்துக்கு ந்நா வர்றேன்” என்றவன் இருசக்கர வாகனத்தில் பறக்க, தேவனோ சற்றே தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நாயகி நடந்து வந்த வழி முழுவதையும் நுனுக்கமாக சோதனையிட்டான்.
பெரிதாக யாரும் அதிகம் பயன்படுத்தாத காட்டு வழி பாதையை கூர்ந்து கவனித்தவனாய், ஏதோ ஒரு உந்துதலில் அதனுள் பாய்ந்த தேவன், “நாயகிஇஇஇ..” அவள் பெயரை பெருங்குரலெடுத்து கத்த, உயியவளின் காதில் விழவில்லையே!
தன் விதியை எண்ணி நொந்தபடி கடைக்கு நடந்துகொண்டிருந்த நாயகி, வெகு நேரம் நடந்த பிறகே தன்னை யாரோ பின்தொடர்வதை போல உணர்ந்தவளாக, சுற்றும் முற்றும் பார்த்து புரியாமல் விழித்து நின்ற போதே, உடம்பு முழுக்க எண்ணையில் பளபளக்க, கண்டு கண்டாக புடைத்த புஜத்துடன் தன் முன்னே வந்து நின்றவர்களை கண்டு பீதியடைந்தாள் நாயகி.
“ய்.யார் நீங்க..” வார்த்தை திக்க கேட்ட நாயகி, சுற்றி யாரேனும் உதவிக்கு வருவார்களா என்று பார்க்க, எந்நேரமோ பரிதாபம் ஒரு ஈ காக்கா கூட அவ்வழியில் இல்லாமல் போனது.
“உன் புருசன் தாந்டி உன்னைய கொல்ல சொல்லி அனுப்பிவுட்டான்” கறிப்பற்கள் காட்டி அகோராமக பேசியவனை கண்டு மிரண்ட போன நாயகி, “அவையலா” அதிர்ச்சியாக ஓர் நொடி நினைத்தாலும் உடனே தன்னை சுதாரித்தவளாக,
“ப்.பொய்.. சொல்லாதீய. என் புருசன பத்தி எனக்கு நல்லா தெரியும. நிச்சயமா அவைய அப்டி சொல்லி இருக்க மாட்டாக” கணவன் மீதுள்ள அதீத நம்பிக்கை மாறாது உரைத்தவளை, கேலியாக பார்த்தனர்.
“பார் டா தர்மபத்தினிய, கழுத்துல தாலியே இல்லைனாலும் எப்டி புருசன உட்டுகுடுக்காம பேசுறான்னு..” கேலிக்கை பேசி இருவரும் சிரிக்கும் போதே, விபரீதம் உணர்ந்து புகுந்தடித்து ஓட தொடங்கியவளை,
“டேய் ஓடுறா பாருடா.. சீக்கிரம் புடி..” என துரத்திக்கொண்டு அவள் பின்னே ஓட, உயிர் பயத்தை விட இருவரின் வக்கிரத்திற்கு பலியாகி விடக் கூடாது கடவுளே என தன் மானம் காக்க கதறியபடி ஓடிய நாயகியை எப்படியோ இருவருமாக வளைத்துப் பிடித்து விட்டனர்.
“ஓட்டமாடி ஓடுற.. எம்புட்டு நாளா ஒன்னைய பாத்து எச்சி ஊற காத்திருந்திருந்தோம், இன்னைக்கு வசமா சீக்கிட்டியா..” நாக்கை கடித்துக்கொண்டு மண்டையை ஆட்டிட, உடல் மொத்தமும் அச்சத்தில் வியர்த்து நடுநடுங்கி விட்டது.
“ஆஆ.. தயவுபண்ணி என்னைய விட்டுடுங்க.. உங்கள கெஞ்சி கேக்குறேன்” கொத்து முடியை கையில் பிடித்துக்கொண்டு தரதரவென இழுத்து சென்றவன் காலை பிடித்துக்கொண்டு, கெஞ்சிக் கதறிய பூ பெண்ணை கொஞ்சமும் பரிதாபம் பார்த்தான் இல்லை.
“யோவ் மலையாண்டி, சும்மா இவ கத்திக்கிட்டே இருந்தா கடுப்பா இல்ல.. எப்டியும் கொல்றதுன்னு முடிவாகி போச்சு, மொதல்ல அவ வாய அடிச்சி ஒடடே” இன்னொருவன் சொல்லியது தான் தாமதம்,
நாயகியின் கொத்து முடியை கையில் சூழட்டி வைத்திருந்த அதே வேகத்தில் அருகில் இருந்த பாறையில் அவள் தலையினை நெத்திய நெத்தில்,
ஆஆஆஆ.. என்ற பலத்த அலறலோடு உதிரம் கொட்ட துடித்துக் கிடந்தவளின் சேலையினை உருவி முட்செடியில் வீசப்பட்டிருந்தது.
சுற்றி அடர்ந்த மரங்கள் முட்செடிகள் என அவ்விடமே செடி கொடிகளால் நிறைந்து கிடக்க, கீழே முழுவதும் செம்மண் மலை மேடு என வேகமாக அடித்த காற்றில் கண்ணை மறைக்கும் அளவிற்கு பறந்த புழுதிகள் நாயகியின் உடலை கவசமாக்கி இருந்தது.
“வ்.வேணா வேணா.. வ்.விட்டுடுங்க..” ஈனஸ்வரத்தில் முனகிய எதையும் காதில் வாங்காமல், அப்பாவி பெண்ணை சூழ்ந்து நாசம் செய்ய துணிந்தவர்களை, கண்களை திறவ முடியாத நிலையில் குருதி கலந்த கண்ணீரோடு வேதனையாக கண்ட நாயகிக்கு, இப்போதே உயிர் பிரிந்தாலும் கூட போதுமே கடவுளே என்று தான் கதற தோன்றியது.
தவழ்ந்து சென்றவளின் இடையில் கால் வைத்து நசுக்கித் திருப்பி, பெண் நெஞ்சில் ஓங்கி உதை விட, கண் முழி பிதுங்கி, வாயில் இருந்து எச்சில் ரத்தம் கொப்பளிக்க வலி தாங்காது கத்திய நாயகி, மானம் காக்க முடியாத தவிப்பில் ரத்தக்கண்ணீரோடு மண்ணில் துடித்தாள்.
பெண்ணை வதைத்து அவள் மீது படரப்போன காத்தன், கரெண்ட்டில் அடிப்பட்டவனை போல நொடி பொழுதில் தூக்கி எறிய பட்டிருந்ததில், புரியாமல் விழித்த மலையாண்டி பின்னால் திரும்பிய அதே நேரம், “டேய்ய்ய்ய்..” என்ற கர்ஜனை குரல் முழங்க, அவனும் செத்த பாம்பை போல அதிவேகத்தில் தூக்கி வீசப் பட்டிருந்தான்.
மனைவியை காணாத துடிப்பில் மலையெங்கும் தேடி சுற்றிய தேவன், முக்கி முனகி வந்த அழுகுரலை கேட்ட நொடி உடல் மொத்தமும் உதிரி உதிரியாக சிதைந்து வெடித்த உணர்வில், அத்திசைப்பக்கம் ஓடோடி வந்து, உயிர் பிரியும் நிலையிலும் கைக்கூப்பி கெஞ்சிட்டு குருதியோடு கிடந்த மனைவியின் கோலத்தை பார்த்தவன் ஜீவனே துடிதுடித்து இறந்து போனது.
கோபத்தில் விரைத்த உடல் கனியாதிருந்தவன் மடியில் அவளை தாங்கியதும் மொத்தமாக உடைந்து போனான் தேவன்.
“நாயகி.. ஏய்.. கண்ண தொற டி.. ந்..ந்நா தேவா வந்திருக்கேன் டி..” அவள் நிலை காண சகிக்காது நடுங்கிய கைகளால் அவள் கன்னம் தட்டி, அவள் முகத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டவன் கண்களும் கலங்கி கண்ணீர் கரைபுரண்டு அவள் உச்சியில் நிறைந்தது.
மென்மையான உடல் பாகம் செயலிழந்து கிடந்த நாயகியின் கண்கள் திறக்க முடியாமல், மூடிய இமைகள் கண்ணீருடன் துடிக்க, கணவனின் குரலை மட்டும் உள்வாங்கிக்கொண்டவளின் மனம், கொஞ்சம் நிம்மதி அடைந்து மெல்ல மெல்ல தன் நினைவை இழந்தது.
“நாயகி என்ன பண்ணுது டி.. வா ஆஸ்பத்திரிக்கு போலாம்.. கண்ண மட்டும் தொற டி.. ஏய்..” மனைவியின் சிறு சோர்வையே தாங்காத ஆண் மனம், இத்தகைய பரிதாப நிலையை எப்படி தாங்கும்?
பாவம் அவனே பரிதாபமாக அவ்விடத்தில் மாறி, நாயகியை கையோடு தூக்கும் போதே, அவன் இடையில் கூரான கத்தியை இறக்கி இருந்தான் காத்தன்.
ஆக்.. உடல் விறைத்து வலியில் அலறிய தேவன், நாயகியை அப்படியே வைத்துவிட்டு நிமிர மீண்டுமொரு முறை குத்திய கத்தியை உருவி மீண்டும் சொருகி இருக்க, தேகம் முறுக்கியது தேவனுக்கு.
“என்ன டா அவசரப்பட்டு குத்திப்புட்ட.. இதுனால நமக்கு தான்டா சிக்கலாகும்” மலையாண்டி பயத்தில் கத்த,
“அதுக்காக இவன அப்டியே உட்டு போவ சொல்றியா.. அப்டி போனா இவன் நம்மள சும்மா உட்டுடுவானா.. எது நடந்தாலும் பாத்துக்கலாம், ஆனா இனிமே இவன உயிரோட விடுறது நம்ம ரெண்டு பேத்துக்குமே ஆபத்துதே. அவள அடையிறோமோ இல்லையோ இவனை முடிச்சிட்டு அவளையும் குத்திப் போட்டு பொறப்படுவோம் வா..”
காத்தன் கடுமையாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவன் நெஞ்சில் ஓங்கி உதை விட்டிருந்தான் தேவன். அதற்குள் ஆனந்தும் அதிவேகத்தில் வந்து, தேவனை தாக்கப் போன மலையாண்டியை இருசக்கர வாகனத்தால் இடித்துத் தள்ளியவன், இருவரது நிலையும் கண்டு அதிர்ந்து போனான்.
“அண்ணே..” தள்ளாடிய தேவனை தாங்கிப் பிடித்த ஆனந்தன், நினைவின்றி கிடந்த நாயகியை கண்டு, தலையில் அடித்துக்கொண்டான் கலங்கிய விழிகலோடு.
“அ.ஆனந்து அவளை காப்பாத்து டா..” மூச்சி திணறியது தேவனுக்கு.
“ஐய்யோ.. அண்ணே..” பதறிய ஆனந்து, மீண்டும் முட்டித் தள்ளாடி இருவரையும் தாக்க வந்த, காத்தனையும் மலையாண்டியும் கொலை வெறியில் அடித்து நொறுக்கியவன், அவர்களை குற்றுயிரும் குலையுயிருமாக்கி விட்டு தேவனின் காரில் இருவரையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
விடயம் கேள்விப்பட்ட நாயகியின் பெற்றோரும் கோதையும் பதறியடித்து ஓடி வந்திருக்க, ஜீவனற்ற பார்வை பார்த்த கணவன் கையை ஆதரவாக பற்றினாள் கோதை.
“தம்பி எங்க பொண்ணு..” வாய்ப் பொத்தி கதறிய பெற்றோருக்கு நாயகியும் தேவனும் நல்லபடியாக கண் விழித்தால் போதும் என்றிருந்தது.
“டாக்டர் சொல்லுவாங்க..” என்றதோடு இறுகி நின்ற ஆனந்தன் கைக்கு மட்டும், சக்கரபாண்டி சிக்கினால் அத்தனை வெறியோடு கொன்று தீர்த்திருப்பான்.
அதற்குள் விடயம் காட்டுத்தீ போல ஊர் முழுவதும் பரவி இருக்க, தண்டாயிதம் காதுக்கும் எட்டி மகனை எண்ணி பரிதவித்து ஓடிவந்தவர் என்னவோ, நாயகியால் தான் தேவனுக்கு இப்படி ஆகிவிட்டது என அவள் குடும்பத்தை விலாசி விட்டார்.
“இப்ப சந்தோசமா.. இந்த மலட்டு சிறுக்கிய எப்படியாவது திரும்பவும் என் புள்ள கூட சோடி சேத்து வைக்க பாத்தீங்கள்ல அதே இன்னைக்கு என் மவன் சாகக் கெடக்குறான்..”
வந்ததும் பேசிய கொதி சொல்லில் வயதான தம்பதியர் உடைந்து அழ,
“அப்ப்பாஆஆ..” ஆத்திரமாக கத்தி இருந்தான் ஆனந்தபாலன்.
“நீயி என்னடே கத்துற.. பாத்தெல்ல பெரியவன் நிலமையை.. சிங்கம் போல இருந்தவன் கத்திக்குத்து பட்டு கெடக்குறான் டா.. அதுவும் அவனுக்கு கண்ணாலம் வச்சிருக்க இந்த நேரத்துல.. எல்லாம் யாரால அந்த புள்ள இல்லாத தரித்திரம் புடிச்சவளால..”
தாண்டவம் ஆடிய தண்டாயிதத்தை,
“நிறுத்துப்பா… ஆஆ..” இவனும் ஆங்காரக்குரலில் கத்தி அவர் பேச்சை நிறுத்தி இருந்தான்.
“இங்க நடக்குற பிரச்சனையே மொதல்ல ஒன்னாலதே.. பெத்தவராச்சேனு மரியாதை குடுத்து பேசிட்டு இருக்கேன். இல்ல நடக்குறதே வேறையா இருக்கும்..” இதுநாள் வரை சின்ன சின்னதாக எதிர்த்து பேசிய மகன், இப்போது கொளுத்தும் கோபத்துடன் விரல் நீட்டி தன்னை காரணம் காட்டி கத்தியதை அதிர்ச்சி மாறாது பார்த்தார்.
“புருசன் பொஞ்சாதி பிரச்சனைகுள்ள ஆஆ.. ஊஊ.. ன்னா நீ எதுக்கு நந்தி மாறி குறுக்க வர்ற.. அதுக்கு ஒனக்கு என்ன உரிமை இருக்கு மொதல்ல” கையை மடக்கி கேள்வி கேட்ட சின்ன மகனை ஸ்தம்பித்து பார்த்தன அவர் விழிகள்.
“சரி பெரியவன் இருக்கையில நானும் எதுவும் கேட்டுகிட கூடாதுனு எம்புட்டு நாள்தே பொறுமையா கடந்து போறது..
அந்த பொண்ணு வீட்ல இருக்கும் போதுதே, மூச்சிக்கு முந்நூறு தரம் மலடி மலடினு சொல்லி அவள குத்திட்டு இருந்த, இப்ப அது சாவக்கெடக்குது இங்கனயும் வந்து அத்தையே சொல்ற..
நாயகிக்கு புள்ள இருக்கு இல்ல அதைபத்தி கவலை பட வேண்டியவனே சகஜமா எடுத்துட்டு பொண்டாட்டிதே வேணுங்குறான்.. வாழ்ந்து முடிச்ச மனுசன் நீ எதுக்குயா சும்மா அவிங்கள போட்டு நோண்டிட்டு கெடக்க..?
அமுதா விசத்துல புருசன் பொஞ்சாதி சண்ட வந்துச்சி சரி, நீ என்ன இதுக்கு நடுவுல சீறிட்டு போற.. கழுத்துல கெடக்க தாலிய அத்து வீசுற அளவுக்கு அவன தூண்டிவுட்டு, ரெண்டு பேத்தையும் பிரிச்சி வச்சி பெரியவனோட நிம்மதிய கெடுத்ததே நீதே..
போதும் இத்தோட அவிங்க விசயத்துல உன் எல்லை என்னவோ அத்தோட நின்னுக்க, நானே அந்த சக்கர மேல செம்ம காண்டுல இருக்கேன், அனாவசியமா பேசி அந்த காண்ட உன் பக்கம் திருப்பிக்காத..”
கடுமையாக எச்சரித்த ஆனந்தனின், இதுநாள் வரை பார்த்திடாத கோபத்தில் மிரண்டு நின்றிருந்த கோதை, அவன் சட்டென தன் புறம் திரும்பவும் திடுக்கிட்டு விழித்தாள்.
“டாக்டர் என்ன சொல்றாங்கன்னு கவனமா இருந்து கேளு.. பணம் தேவைப்பட்டா இந்தா இந்த பைல இருக்கு எடுத்து குடு..” இரும்பாக உரைத்துவிட்டு, கோபம் தீராது வெளியே செல்ல எத்தனித்த கணவன் கையை பட்டென பிடித்த கோதை,
“எங்கங்க” என்றாள் தவிப்பாக.
“தாமதமாவுற ஒவ்வொரு நிமிசமும், சக்கர தப்பிக்க வாய்ப்பிருக்கு..ந்நா போயி அந்த சக்கரைய புடிச்சி நாலு காட்டு காட்டிபுட்டு வர்றேன்..” அழுத்தமாக பிடித்திருந்த அவள் விரல்களை பிரித்துவிட்டு விருவிருவென ஆனந்தபாலன் சென்றிருக்க, மகனின் அவமரியாதை பேச்சில் அவமானத்தில் முகம் கருத்து நின்றார் தண்டாயிதம்.
தொடரும்.