அத்தியாயம் – 29
வ்வாக்.. வ்வாக்.. கிணத்தடியில் நின்று வயிற்றை பிடித்தபடி வாந்தி எடுத்த கோதை, முகத்தை நீரில் அடித்துக்கழுவி முந்தானைகொண்டு துடைத்தபடியே கிணற்றின் மீது சோர்வாக சாய்ந்து நின்றாள்.
குழந்தை உண்டாகி நான்கு மாதங்கள் முடிந்து போனது. இவன் செய்த தீராத வினையால் திருமணத்திற்கு முன்பே உண்டாகி விட்டாள் போலும். ஆரம்பத்தில் அதனை கண்டுகொள்ளாத கோதை, சமீப நாட்களுக்கு முன்பு தான் தன் உடலில் உண்டாகிய மாற்றங்களை உணர்ந்து, தள்ளிப் போன நாட்களை கணக்கு செய்து பார்த்தாள்.
நாட்கணக்கு மாதக்கணக்கு அனைத்து கணக்கும் பிள்ளைக் கணக்காக காட்டிட, உவகை கொள்ள முடியாது தவித்தது மங்கை மனம்.
அங்கங்கு பிள்ளை வரம் கேட்டு தவமாய் தவமிருக்க, அவ்வரம் இவளுக்கு தானாக கிட்டியும் வேண்டாம் என நினைக்கும் சூழலை உருவாக்கியது என்னவோ!
“ஏய் கோத எம்புட்டு நேரமா கூப்புடறேன், எங்க டி போனவ..” ஆனந்தன் குரலில் தன்னிலை அடைந்த கோதை, நாளுக்கு நாள் தனக்குள் உண்டாகும் மாற்றங்களை கணவனிடமிருந்து மூடி மறைக்கவே பெரும் அவதிபட்டு போகிறாள்.
“இங்க தாங்க தண்ணி இறைக்கிறேன்” கிணற்றில் நீரை இறைப்பதை போல அவசரமாக பாவலா காட்டியவளின் பின்னோடு, சூடான முரட்டு தேகம் உரசி நின்றது.
“எ.என்னங்க..” கணவனின் அனல் தெறிக்கும் நெருக்கத்தில் மூச்சிமுட்டி வார்த்தை திணறினாள் கோதை.
“என்னங்கனா என்ன டி சொல்லட்டும்.. ஒன்னைய பாக்க தோணுச்சு தோட்டத்துல இருந்து கெளம்பி வந்துட்டேன்” என்றவன் கரங்கள் அவள் தோளோடு வழுக்கி வந்து, கோதை பிடித்திருந்த கயிற்றை அவள் கரத்தோடு இணைத்து பிடிக்க, கூச்சத்தில் நெளிந்தது பெண் தேகம்.
“ரொம்ப சந்தோசமோ!” அவன் தன்னை நாடி வந்த செய்தி, முகத்திலேயே அறிய வாய் திறந்தும் கேட்டு விட்டாள்.
“ம்ம்.. அண்ண நாலாவது முறையா ப்ரெசிடெண்ட்டு ஆயிடுச்சுல்ல.. அது மட்டும் இல்ல இப்ப அமுதாக்கு அஞ்சாவது மாசம் நடக்குறதா செய்தி வந்துச்சி” என்றுமில்லாத உற்சாகக் குரலில் மனைவியோடு ஒன்றி நிற்க, ஆனந்தனின் மீசை முடி கழுத்தில் குத்தி குறுகுறுத்தது கோதைக்கு.
“உங்க அண்ணன் ப்ரெசிடெண்ட் ஆனதுல சந்தோச படுறது சரிதா, ஆனா அமுதா..” கோதை இழுக்க, தாடி சூழ்ந்த தடித்த உதடுகள் விரிந்தது.
“என்னைய நீயி என்ன டி நெனச்ச, மனசாட்சி தொலைச்ச மிருகம்னா.. அப்டியே கூட நெனச்சிக்க அதைப்பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல. ஏன்னா ந்நா மனுசன் பாதி மிருகம் பாதி..” அவளை விட்டு விலகி நின்று, இடுப்பில் கை வைத்து பெரிதாக சிரித்தவனை புரியாத பயத்துடன் பார்த்தாள்.
“என்னதா அமுதாவ பெருசா கண்டுக்கிடலைனாலும் அவ என் தங்கச்சி டி. அந்த பாசம் இல்லாம இருக்குமா! என்ன ஒன்னு பெருசா அத்த வெளிய காட்டிக்க மாட்டேன், ஏன்னா சின்னதுல இருந்தே என் அப்பன் சொல்லிக் குடுத்து வளத்ததப்படி.
ஒனக்குதே என் அப்பனபத்தி தெரியுமே, அசல் சாதி பயல எப்டி அமுதாக்கு கட்டி தர்ற ஒத்துப்பாரு. போதா குறைக்கு கல்யாணமும் நெருங்கி போச்சி. இதுக்கு மேல எம்பேச்சி மட்டும் இல்ல என் அண்ணன் பேச்சே என் அப்பங்கிட்ட எடுபடாது.
அப்பப்ப இந்த நாயகி புள்ள வேற என்னைய பாக்கும் போதெல்லாம் ஒரே ஒப்பாரி வச்சிது.
எனக்கு ஒன்னைய புடிச்சது போல தானே, அமுதாக்கு அந்த பயல புடிச்சி இருக்கும்னு யோசனை பண்ணி யோசனை பண்ணியே மண்டை சூடா போச்சுது.
என் அண்ணங்காரனும் அப்பன் எவ்வழியோ அவனும் அவ்வழியேனு சுத்துனான். சரி இதுக்கு மேற்பட்டு வேலைக்கு ஆவாதுனு நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன்”
தீவிரமாக சொன்னவனை அதிர்ச்சியும் ஆச்சிரியத்தோடும், இதயம் துள்ளித் துடிக்க கண்டாள் கோதை.
அன்று அமுதாவின் காதல் விடயத்தை பற்றி கூறி இருவரையும் சேர்த்து வைக்குமாறு கெஞ்சி நின்ற நாயகியை அலட்சியப்படுத்தி விட்டு நேராக சென்ற இடமோ, ஹரியின் விபரங்களை முழுவதும் அறியதான்.
விசாரித்தவரை ஒருவர் விடாது ஹரியை பற்றி நல்லதையே சொல்ல, ஒருவாரு மனதை தேற்றிக்கொண்ட ஆனந்தபாலன், தண்டாயிதம் பற்றியும் தேவனை பற்றியும் நன்கு அறிந்திருந்தவனாக, நாயகியின் முடிவு என்னவாக இருக்கும் என முன்னவே அவதாணித்து அதன்படி ஒவ்வொன்றும் செய்து வைத்தான்.
பின்னே எல்லை தாண்டி பழக்கம் இல்லாத நாயகி, சொந்த ஊர் கோவிலுக்குள்ளே அமுதாவை அழைத்து சென்று அவள் குடும்பத்தை மீறி எப்படி திருமணத்தை நடத்தி இருப்பாள்?
“என் தங்கச்சிக்கு இன்னைக்கு இங்க கண்ணாலம். அதுவும் என் அண்ணன் அப்பன் அறியாம நடக்க போற ரகசிய கண்ணாலம். என் வீட்டு பொம்பளைங்க மண்டபத்துல இருந்து நேரா இங்க வர்றத பாத்து மெரண்டு போயி பஞ்சாயத்த இழுத்து வைக்காத. அவ அண்ணங்காரன் என் சம்மதத்தோடதே இங்கன கண்ணாலம் நடக்க போவுது புரியிதா..
ஒழுங்கா நல்லா சாமிய வேண்டிக்கிட்டு தாலி எடுத்து குடுத்து ஆசீர்வாதம் பண்ணி அனுப்பு”
இவள் செல்லும் கோவில் அறிந்து, முன்பே அர்ச்சகரை மிரட்டிவிட்டு அனைத்து ஏற்பாட்டையும் செய்து முடித்து வந்தவன்,
நாயகி அமுதாவை அழைத்து செல்லும் வரையில் கூட, யார் கண்ணும் அவர்கள் மீது சந்தேகமாக தீண்டாதவாறு கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்கிய ஆனந்தபாலன்,
இதன்பிறகான பின்விளைவுகளை நன்கு அறிந்தே, மண்டபத்தில் தாலி கட்ட மணப்பெண்ணை அழைக்கும் வரை, தேவனின் கவனத்தை நாயகி பக்கம் திரும்பாது பார்த்துக்கொண்டான்.
“என் அப்பன போல எனக்கும் இந்த சாதி கௌரவம் எல்லாம் பெருசுதே, ஆனா அந்த அளவுக்கு உசுரா மதிக்கிறவன் இந்த ஆனந்து இல்ல டி. அதுவும் ஒன்னைய பாத்து புடிச்சி போனதால வந்த சமீபத்திய மாற்றம்தே. இல்லாட்டி அமுதா காதலுக்கு எல்லாம் நிச்சயமா ஒத்துக்கிட்டு இந்த அளவுக்கு செஞ்சிருக்க மாட்டேன்”
பின்கை கட்டி நின்று எங்கோ பார்த்து உரைத்த புருசனை, முதன்முறையாக பொங்கி பெருகும் நேசத்துடன் பார்த்த கோதை, அவளாகவே முன்வந்து அவன் கட்டிமார்பில் சாய, குனிந்து அவள் தலையில் தாடை பதித்த ஆனந்தன் கரம், மனைவி முதுகோடு அணைத்துக்கொண்டது.
“ஏங்க என்னைய நெசமாலுமே அம்புட்டு புடிக்குமா!” அவளாகவே பேசிய முதல் ஆசை வார்த்தையில் நெஞ்சி குளிர்ந்தவனுக்கு, இப்போதெல்லாம் மனைவியின் காதலை தெகுட்ட தெகுட்ட அள்ளிப்பருக பேராசையாக எண்ணம் எழுந்தது.
“இந்த கேள்விக்கு ந்நா எப்டி பதில் சொன்ன ஒனக்கு புரியும்?” யோசனையாக கேட்ட ஆனந்தபாலன், தன்னோடு மனைவியை இறுகி அணைத்தபடி இடமும் வலதும் மெதுவாக உடலை ஆட்டிட,
“எப்டி வேணாலும் சொல்லுங்க” அவனது ஆசைக்கு ஏற்ப பாந்தாமாக அவன் நெஞ்சோடு பொருந்தினாள் அன்னமயில்.
“சரி அப்போ தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ.. வப்பாட்டி எத்தன வச்சிக்கினாலும், பொண்டாட்டிய மட்டும் நம்ம சாதிக்காரியா நம்ம வசதிக்கு ஏத்தாபுல கட்டணும்னு எங்க அப்பன் சொன்னத கேட்டு கேட்டு வெறுத்து போயி, எனக்கு பொண்டாட்டியே வேணாம் வப்பாட்டி போதும்னு குசாலமா இருந்துட்டேன்..
ஆனா பாரு ஒன்னைய பாத்ததும் வப்பாட்டிக்கும் மேல தோணிடுச்சி டி.. அதுலயும் உன் கண்ணு இருக்கே கண்ணு..”
அவன் காதலை பற்றி சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் வேகமாக அவனை தள்ளிவிட்டு மூக்கு விடைத்த முறைத்த கோதையை, நமட்டு சிரிப்போடு பார்த்தவன்,
“மாமன் ரசனையா காதல சொல்லும் போது தள்ளி உடலாமா புள்ள.. இன்னும் ந்நா என் காதல் சமாச்சாரத்த முழுசா சொல்லி முடிக்கல டி. வா வா.. இன்னும் வெளக்கமா சொல்றேன். அப்பதே ஒனக்கு தெளிவா புரியும்” மீண்டும் அவளை நெருங்கி வர்ற,
“இதுவரைக்கும் நீங்க சொன்ன காதல் காவியத்தை கேட்டே என் நெஞ்சி குளிர்ந்து போச்சி இதுக்கு மேல தெளிவா போனா, என்னைய மொத்தமா தூக்கி ஐஸ் பொட்டிலதே வைக்கணும். நீங்க ஒன்னும் சொல்ல வேணா போங்க..” அவன் பழைய வாழ்க்கை நியாபகம் வந்து அம்பகம் கலங்கிய மனைவியை, ஒரே தாவில் இழுத்து தன் மார்போடு அணைத்தவனாக,
“எப்டி வேணாலும் சொல்ல சொல்லிட்டு மாத்தி பேசுற பாத்தியா.. சரிவுடு ந்நா எதையும் சொல்லல.. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் டி,
நீ என் மனசுக்குள்ள வராம இருந்திருந்தா, கடைசி வரைக்கும் ஒட்டிகட்டையா வாழ்ந்தே செத்து போயிருப்பேனே தவிர, வேற எவ கழுத்திலும் தாலிய கட்டி என் பொண்டாட்டின்ற அந்தஸ்த மட்டும் குடுத்து இருக்கவே மாட்டேன்”
தீர்க்கமாக சொன்ன கணவனை, உவர் நீர் பெறுக மென்சிரிப்புடன் கட்டிக் கொண்டவளின் மனம் மட்டும், அவனது பழைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் முரண்டு பிடித்தது.
“ஏன் கோத.. எனக்கு ஒன்னைய புடிச்ச மாறி, ஒனக்கும் என்னைய புடிச்சிருக்கா டி” அவள் தாடை நிமிர்ந்து குறுகுறு பார்வையோடு கேட்டவனை கண்டு கோபம் வந்தாலும், சிரிக்க வைத்தது கணவனின் குழந்தை செயல்.
“இந்த கேள்விய நீங்க என் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடியே கேட்டிருக்கணும்”
“அப்ப கேட்டிருந்தா மட்டும் புடிச்சிருக்குனு சொல்லிருப்பியாக்கும். நாந்தே உன் மனசுல மோசமானவனா பதிஞ்சி போய்ட்டேனே” உதடு கோணி முகத்தை திருப்பியவனை, மீண்டும் தன் முகத்தின் நேரே திருப்பி, கால்கள் எக்கி கேசம் படர்ந்த அவனது முன் நெற்றியில் மென்முத்தமிட்ட கோதை,
“இப்ப இருக்க என் புருசன் ஆனந்தபாலனை ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குங்க..” நாணத்தில் சிவந்து போன மனைவியை, இறுகிய அணைப்பில் மூச்சிமுட்ட வைத்து விட்டான் காதல்கிறுக்கனாகி.
“காதல் பண்ணா அப்பஆத்தா பேச்சை கேக்காம எதுக்கு தரிகெட்டு திரியிதுங்க, அப்டி என்னதே இந்த கருமத்துல இருக்கோனு நானும் பல சோடிகள கேவலமா பாத்து இருக்கேன்டி.. ஆனா காதலிச்சி பாத்த பொறவுதே தெரியிது காதலோட மகிமை என்னனு.
காதல் வந்தா அப்பன் ஆத்தாள மட்டும் சுத்தி இருக்க எல்லாத்தையும் மறக்கடிக்கிற அளவுக்கு தாறுமாறான போதை வஸ்து இந்த காதலுக்கு மட்டும்தே இருக்கு.
சும்மா உச்சி வரைக்கும் ஜிவ்வுனு ஏறுது டி, நீ குடுத்த ஒத்த காதல் முத்தம்” காதல் பைத்தியம் முற்றி ஏதேதோ பிதற்றிய கணவன் பேச்சை ஒன்று விடாது, சலிக்காது அன்றைக்கெல்லாம் கேட்ட கோதை, மறந்தும் தன் கர்ப்ப விஷயத்தை ஆனந்தனிடம் வெளிப்படுத்தவில்லை.
தொடரும்.