அத்தியாயம் – 17
“இதெல்லாம் ஒனக்கு தேவையாமா, எப்டிபட்ட எடத்துல ஒன்னைய கட்டிக்குடுத்தேன். நாளுக்கு ஒரு புது பட்டும், நகையும், பூவும் வச்சி மங்களகரமான ஒன்னைய பாக்கவே அம்மன் கணக்கா, எங்க கண்ணு நிறைஞ்சி போவும்.
போதா குறைக்கு ஒவ்வொரு வேளைக்கும் வயிறு நிறைய நல்ல சாப்பாடு சாப்ட்டு, எங்ககிட்டக்க இருந்ததை விட, மாப்பிள தம்பி ஒன்னைய ஒரு குறையும் இல்லாம நல்லபடியா கவனிச்சிக்கிட்டாரே!
ஆனா இங்கன வந்து உன் நிலை என்ன டி. என் பழைய கந்த சீலையும், காதுல வெளுத்து போன முத்தும், புருசன் இருந்தும் கழுத்துல தாலி இல்லாம, எங்களால ஒன்னைய இப்டி பாக்க முடியலையேம்மா”
காலையிலேயே புலம்பலை தொடங்கி கண்ணீர் விட்ட தாய்க்கு எப்படி சொல்லி புரியவைப்பது, அங்கு கொத்தடிமையாக கழித்த சோகங்களை பற்றி.
புத்துடை கட்டி, பூவும் பொட்டுடன், தங்கநகையில் மின்னினால் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று அர்த்தமா?
வறுமையில் வாடுபர்களுக்கு கூட பொய்யாக ஆறுதல் காட்டவாவது, ஒருத்தர் இரண்டு பேர் முன் வருவார்கள் போலும்,
ஆனால் கொஞ்சம் வசதியோடு வாழ்வது தெரிந்தால் போதும், தொண்டைக் குழியிலேயே அடைத்து நிற்கும் பெரும் வேதனைகளை, தப்பித்தவறி மனசுவிட்டு வெளியே சொன்னால்,
“நகையும் நட்டும் பணமும் இருக்க ஒனக்கெல்லாம் என்ன கவலை” என்று பொறாமையில் ஏளனம் பேசி செல்லும் கொடுமை இருக்கிறதே! சொல்லில் மாலாது.
“அம்மா இங்கன ந்நா இருக்குறது ஒனக்கு இடைஞ்சலா இருக்கா” நாயகியின் ஆர்ப்பாட்டம் இல்லாத கேள்வியில், வெடுக்கென நிமிர்ந்தாள் லட்சுமி.
“ஒத்த பொண்ணு நீயி ஒன்னைய போயி அப்டி நாங்க நினைப்போமா நாயகி. என்ன இருந்தாலும் வசதியா கட்டிக்கொடுத்து இம்புட்டு வருசமும் சீரும் சிறப்புமா வாழ்ந்தவ நீயி. ஒனக்குதாம்மா இங்கன சங்கட்டமா இருக்கும்” என்ற தாயை உணர்வற்று பார்த்தாள்.
“அங்கங்க பொறந்த வீட்ல வசதியா வாழ்ந்துட்டு, புகுந்தவீட்டுக்கு போயி கஷ்டப்பட்றது தான் நிறைய பொண்ணுங்க வாழ்க்கைல நடக்கும். ஆனா எனக்கு அப்படியே நேர்மார், புகுந்த வீட்ல வசதியா வாழ்ந்துட்டு, பொறந்த வீட்டுக்கு வந்து கஷ்டப்படுறியேன்னு கவலை படரமா நீயி” வலி நிறைந்த புன்னகை சிந்தி,
“ந்நா வசதியா வாழ்ந்த வாழ்க்கை பத்தி ஒனக்கு தெரியும், ஆனா நிம்மதியா வாழ்ந்தேன்னானு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா?
வீட்லயும் சரி, ஊருக்கு முன்னாடியும் சரி, அவங்க பண பக்கட்டை காட்ட, என்னைய அம்மன் கணக்கா அழகு பாத்தது எல்லாம் நெசந்தே. ஆனா ந்நா போட்டிருந்த உயிர் இல்லாத பொருட்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் கூட, உயிருள்ள எனக்கு இதுநாள் வரைக்கும் அந்த வீட்ல இருந்ததில்ல தெரியுமா..
“போதும்மா இதுக்கு மேல எதையும் பேசி கேட்டு என்னைய நோகடிக்காத. சொல்ல நிறைய நிறைய மனவேதனைய அனுபவச்சிட்டேன். இதோ அனுபவச்சிட்டே இருக்கேன்.
என்னைக்கு என் கழுத்தை நிறைச்ச தாலிய அவையலே அத்து வீசிப்புட்டாகளோ, அந்த நிமிசமே என் கல்யாண வாழ்க்கை முடிஞ்சி போச்சுது. இதுக்கு மேல அதைப்பத்தி பேச எதுவுமே இல்ல.
ஒனக்கும் அப்பாக்கும் தொந்தரவா இருந்தா தயவுசெய்து சொல்லிடு, இப்பவே இங்கிட்டிருந்து போயிடுறேன்”
வேதனை கவ்விய குரலில், தொண்டை அடைக்கக் கூறி கண்ணீரை துடைத்தவளை, அவர்களும் வேதனையாக தான் பார்த்து நின்றனர்.
வேலை தேடி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டாள். ஆனால் என்ன வேலை தெரியும். வீட்டு வேலை சமையல் வேலைகளை தவிர வேறு எதுவும் தெரியாது.
கடைவீதிகளை அலைபாய்ந்தபடியே நடந்தவளுக்கு, அங்கு வியாபாரம் செய்யும் வழிமுறைகளை கண்டு விழிபிதுங்கியது.
கோவில், சொந்த பந்த விஷேசங்களை தாண்டி பெரிதாக வேறெங்கும் சென்றது இல்லை. வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும், கேட்கும் முன் வீட்டில் இருக்கும். அதை தவிர ஒன்னு ரெண்டு பொருள் விட்டு போச்சின்னா, தெரு முக்கில் இருக்கும் கடைக்கு சென்று வருவாள்.
அப்படி இருக்க, இங்கு பரபரப்பாக கூவிக் கூவி ஒவ்வொரு பொருட்களையும் வியாபாரம் செய்வதை எல்லாம் பார்த்து தலை தான் சுற்றியது.
“பேசாம வீட்டு வேலை எதுக்காச்சி போலாமா” அப்படி யோசிக்கும் போதே “அச்சோ.. அவைய கௌரவம் என்னாகுறது” பாழாய் போன மனது பயத்தில் மூழ்கியது.
“ஏன் இம்புட்டு நாளும் அவைய வீட்ல வேலைக்காரியா தானே இருந்த. அப்போல்லாம் உன் அவைய கௌரவம் ஒன்னும் ஆகலையா” தேவன் மீது கோபம் கொண்ட மனசாட்சி அவனை எதிர்த்து நின்றது.
“என்ன இருந்தாலும் அது ந்நா வாக்கப்பட்டு போன எடம். அவைய என் புருசன். அவையளுக்காக ந்நா பாத்து பாத்து செஞ்சது தப்பில்லையே! பாவம் ந்நா வேற அங்கன இல்ல, மூணு வேளைக்கும் நல்லா சாட்டு பழகின மனுசன். இப்ப சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறாகலோ” அப்பாவி பெண், இன்னும் அது தன் குடும்பம் என்றே கூக்குரலிட்டடு, கன்னவன் நல்ல சோறு உண்டானா கவலை கொண்டது.
“ஆமா நீதே மெச்சிக்கணும் உன் புருசனை. யாராவது திங்காம இருப்பாகலா. அந்த வேலையெல்லாம் சரியான நேரத்துக்கு ஆகிடும். ஆனா நீ அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாம இதோ நடுவீதில ஒன்னுமில்லாம நின்னுட்டு இருக்க.
அவையலுக்குலா நீ ஒன்னுமே இல்ல நாயகி, இப்பயாவது புரிஞ்சிக்க. இந்நேரம் உன் நினைப்பையே மொத்தமா தொடச்சி போட்டு இருப்பாக. இம்புட்டு வருசமும் வக்கனையா சோறாக்கி போடவே ஒன்னைய அடிமையா வச்சிருந்தாவலே தவிர, உம்மேல எந்த ஒரு நேசமும் இல்ல அவையலுக்கு.
எத்தனை தரம் உங்கிட்டயே பச்சையா சொல்லிருப்பாக, தாலி கட்டிட்ட பாவத்துக்குதே ஒன்னைய படுக்கைல நாடி வரேன். இல்லைனா வகைவகையா அனுபவச்சி இருப்பேன்னு, அப்போல்லாம் நீ எந்த அளவுக்கு மனசளவுல வலிய அனுபவச்சி கூனி குறுகி போயிருக்கேன்னு கொஞ்சம் நினைச்சி பாரு. இப்பேர்ப்பட்ட மனுசனுக்காகவா வரிஞ்சிட்டு வர்ற” தேவனுக்கு எதிராக நின்ற மனசாட்சி, சரியாக சொன்னதும், நாயகி முகம் வருத்தத்தில் சுணங்கியது.
உண்மை தானே, “பொண்டாட்டி நீ எதுக்கு இருக்க. புருசன் படுன்னா படுத்திடணும். எதிர் கேள்வி கேக்க கூடாது” கூடலின் போதும் கடினமாக மிரட்டிய தேவன் முகம் வந்து போக,
“என்னத்ததே எனக்கு புடிச்சிருக்கானு கேட்டு செஞ்சிருக்காக. இத்த கேக்க. என்ன பேசுனாலும் கடைசியா எங்கிட்டதானே ஆவலா ஓடி வருவாக. அவைய தொடுர வரைக்கும் இல்லாத உணர்வுகள் எல்லாம், அவைய தொட்ட நொடி அனலா என் பெண்மையில கொதிச்சி, நானும் தானே அவைய தொடுதலுக்கு கட்டுப்பட்டு இருக்கேன். இதெல்லாம் புருசன் பொண்டாட்டிகுள்ள சொல்லிக் காட்டுவாய்ங்கலா. எனக்கு இதெல்லாம் பழகி போச்சி” இன்னும் கணவனை விட்டுக்கொடுக்காது, அவன் தவறை மறந்து பிதற்றிய பெண்ணை கண்டு, அவள் மனசாட்சியே அவள்மீது பரிதாபம் கொண்டது.
“நீ இப்டியே உன் அவையல விட்டுக்கொடுக்காம தலைல தூக்கி வச்சி ஆடிட்டு இரு. ஆனா அவைய உன் நினைப்பு எதுவும் இல்லாம மொத்தமா தூக்கி எறிஞ்சிட்டு, இந்நேரத்துக்கு நிம்மதியா கட்சிவேலைய பாக்க போயிருப்பாக. நீ போ தாயி.. போயி உன் புருசனுக்கு ஏத்த கௌரவமான வேலையா தேடு” அவளை கேலி செய்து திட்டிய மனசாட்சி மறைந்து போக, உள்ளம் கலங்கிய நிலையில் அடுத்து என்ன செய்வதென புரியாமல் நடுவீதியில் திக்கற்று நின்றாள் நாயகி.
** ** **
ஊர் பஞ்சாயத்து ஒன்றை முடித்து விட்டு, அசதியாக அந்த ஆலமரத்து நிழலில், அப்போது தான் சிறிது நேரம் கட்டையை சாய்த்து இருந்தார் தண்டாயிதபாணி.
“என்னய்யா வீட்டுக்கு போவாம, இங்கனவே படுத்துட்ட” என்றபடி அவருக்கு சமமான பெருசு, துண்டால் தூசி தட்டி அமர,
“வாழ்க்கையே வெறுப்பா போச்சி, மாணிக்கோ” புலம்பலோடு எழுந்து அமர்ந்தார் அவரும்.
“ம்.. பின்னே இருக்காதா, நீ பெத்த மூணு பேத்துமே ஆளுக்கு ஒரு தினுசா இருந்தா, பாவம் நீயும் என்னத்த பண்ணுவ” பெருசு சலித்துக்கொள்ள, தண்டாயிதம் முகம் நிறம் மாறியது.
“தேவாக்கு கண்ணாலம் பண்ணியும், அது பேர் சொல்ல ஒரு வாரிசு இல்ல பாரு. நல்ல எடத்துல பொண்ண எடுத்த போ..” பெருசு பேசுவதை வைத்தே எதற்க்கா அடிபோடுகிறது என புரியாத முட்டாள் இல்லையே!
“சொல்ல வர்ற விசயத்த நேரடியா சொல்லு மாணிக்கோ” தண்டாயிதம் குரல் இறுகியது.
“தேவாதே, அந்த மலட்டு சிறுக்கிய தாலிய புடுங்கிட்டு பத்திவுட்டானுல்ல, இதுக்கு மேல எதுக்கு காத்திருக்கோணும். வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து அதுக்கு கண்ணாலத்த முடிச்சிட்டா, காலா காலத்துல ஒரு புள்ளைய பெத்துபானுல்ல.
எப்டியும் ஆனந்து கண்ணாலத்துக்கு பச்சகொடி காட்ட போறது இல்ல. குடும்பத்துல உள்ளவைங்க எல்லாருமே ஒத்தையில கெடந்தா எப்டிய்யா! அடுத்த தலைமுறைய உருவாக்க வேணாமா!..”
மாணிக்கம் சொல்வது இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாக தண்டாயிதம் மனதில் சூழ்ந்திருக்கும், பெரும் கவலையில் ஒன்றான விசயம் தான். ஆனால் எதற்கும் பிடிப்படாமல் இருக்கும் மகன்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது!
பேருக்கு நாயகியை கட்டி வைத்தாரே தவிர, அவளை இதுநாள் வரை மருமகளாக எண்ணியதே இல்லை. அதிலும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் குழந்தை உண்டாகாது போனதில், சுத்தமாக அவள் மீது வெறுப்பு தட்டி விட்டது.
அவர் மனைவி அகிலாண்டீஸ்வரி, ஒன்றுக்கு மூன்று பிள்ளைகளை பெற்றும் என்ன புண்ணியம். அப்பேர்ப்பட்ட மகராசியையே அவர் மதித்து நடத்தியது இல்லை உயிர் பிரிந்த நாள்வரை. நாயகியை சொல்லி மட்டும் என்ன பிரயோஜனம்!!
“எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லாம இருக்குமா மாணிக்கோ, ஆனா தேவா இதுக்கு சம்மதிக்கனுமே! அதிலயும் இப்ப தேர்தல் வேற தொடங்கிடுச்சி, இந்த நேரத்துல அவன் ஒத்துக்கவே மாட்டான்” என்றார் தேவனின் மனம் அறிந்தவராக.
“மச்.. என்ன தண்டாயிதோ நீயி, இன்னும் விவரம் பத்தாம இருக்க. நீ பெத்த ரெண்டுல ஒருத்தன் முரட்டு பய, அவைன் உன் கட்டுப்பாட்ட தாண்டி கைமீறி போய்ட்டான்.
இன்னொருத்தன் பாக்க கடுமையா இருந்தாலும், ஒனக்கு கட்டுப்பட்டு வளந்தவன். நீ என்ன சொன்னாலும் மறுப்பு சொல்லாம கேட்டு நடப்பான். இம்புட்டு நாளா அவைன் பொஞ்சாதி மோகத்துல இருந்துட்டான். என்ன இருந்தாலும் அவ அழகும் பொறுமையும் யாருக்கு வரும் சொல்லு. அதே பயன் மயக்கத்துல இருந்தான்.
இப்பதே அவமேல அம்புட்டு வெறுப்புல இருக்கானே, இதுதே நேரம். பய தனியா வேற இருக்கான். எப்டி சொன்னா உன் வழிக்கு வருவானோ அப்டி சொல்லி, கல்யாணத்த முடி”
அம்புட்டுதே தெளிவாக மூளை சலவை செய்து விட்டு பெருசு நகர்ந்திட, தீவிர யோசனையோடு வீட்டுக்கு புறப்பட்டார் தண்டாயிதம்.
** ** **
“யம்மாடி கோத..” வரும் போதே அவசரமாக அழைத்து வந்த தாயை, புரியாமல் பார்த்து வந்தவளின் கரத்தை கெட்டியாக பிடித்த செல்வி,
“கோத, அந்த தம்பி ஒனக்கு ஏதோ ஆசையா வாங்கி கொண்டாந்து இருக்காப்புல டி. ஒங்கிட்ட பேசிட்டு அப்டியே அத்த குடுத்துட்டு போறேன்னு சொல்லுச்சி. ஆனா சின்ன பசங்க உள்ளுக்க இருக்கும் போது, இங்கன பாத்து பேசினா சரிவாராதுனு, நம்ம சாமிபிள்ள தோட்டத்துக்கு மக வருவானு சொல்லி அனுப்பி இருக்கேன்.
தடா சொல்லாம, போய் அந்த தம்பிய பாத்து பேசிட்டு வாம்மா” தாடை பிடித்து வருடி, கெஞ்சலாக சொன்ன தாயை, கலக்கமாக பார்த்து விட்டு சென்றவளுக்கு, இரண்டு நாட்கள் முன்பு தான் அசோக்குடன் நிச்சயம் முடிந்திருந்தது.
பெரிதாக ஊர் கூட்டி தம்பட்டம் அடிக்கவில்லை என்றாலும், முக்கிய சொந்தங்களை கூட்டி, அசோக் வீட்டு ஜனங்கள் கொண்டாட, அவன் தலைமியிலேயே சிறப்பாக நடந்து முடிந்தது நிச்சய விழா.
ஆனால் கோதையின் நிலைதான் மிகவும் மோசம். நெருப்பின் மீது நிற்கும் கொடூர உணர்வில், இருதலை கொல்லி எரும்பாக, உண்மையை கூற முடியாத சூழ்நிலையில் சிக்கி சிதைந்து போனாள்.
சாமிபிள்ளை தோட்டத்தில், கையில் பார்சலுடன், கோதையை எதிர்ப்பார்த்து ஆவலாக நின்றிருந்தான் அசோக்.
கோதையும் வந்தாள், கூடவே வில்லங்கத்தையும் அழைத்து வருவாளே இந்த ரைட்டர். ஹி ஹி.. சிறப்பான சம்பவங்கள் சுட சுட ஆன் தி வே.
தொடரும்.