அத்தியாயம் – 14
“என்னது பொண்ணு ஓடி போச்சா..”
“அடியாத்தே.. நாட்டாம குடும்பத்துக்கு வந்த வெக்ககேட பாரு. இப்டி மானத்த வாங்கிட்டு போய்ட்டாளே அந்த கூருகெட்டவ”
“ஆமா ஆமா அம்புட்டு கௌரவமான மனுசங்க, இனிமே எப்டி ஊர்ல தல நிமிந்து நடப்பாய்ங்க”
“அட இதுக்குதாய்யா அப்பவே அம்புட்டு தூரம் படிச்சி படிச்சி சொன்னேன். பொட்ட புள்ளைய வெளியூருக்கு படிக்க அனுப்பாதேன்னு. என் பேச்ச கேட்டிருந்தா இப்டி ஒரு அசிங்கத்தை பாத்திருப்பியா..”
“நல்லா கேளு முத்தையா.. நாம சொல்றத என்னத்துக்கு கேக்கணும்னு அலட்சியம் பண்ணதால வந்த வென”
ஊராரின் திறந்த வாய்க்கு, கெட்டியான அவல் உருண்டை கொடுத்தை போல, இஷ்டத்திற்கும் மூவரையும் நிற்க வைத்து, ஊசி குத்துவதை போல் வார்த்தையால் குத்திக் கிழித்துக் கொண்டிருக்க,
அவமானத்தில் முகம் கருத்து நின்றவர்களுக்கு, தங்கள் குடும்ப கௌரவத்தையே குலைத்து, நடுவீதியில் இழுத்துவிட்டு போன அமுதாவை கொல்லும் வெறியோடு, அத்தனை பேர் முன்னிலையில் தலைகுனிந்து நின்றிருந்தனர்.
அக்னி குண்டத்தின் முன்பு அமர்ந்திருந்த மாப்பிளையாண்டாள் இன்னும் அசையாமல் இருப்பதை கண்ட அவன் தந்தையோ வெகுண்டெழுந்து விட்டார்.
“இப்டி ஒரு ஓடுகாலிய என் மவன் தலைல கட்டி வைக்கதே இம்புட்டு ஆட்டம் போட்டியலா.. ஏய்யா தண்டாயிதோ, என்னவோ பெருசா பெரும பீத்துன, என் மருமக வளர்ப்புல, வைரமா என் மக வளர்ந்து நிக்கிறா அப்டி இப்டின்னு. கடைசில பாத்தியா உன் மருமக வளர்ப்பு லட்சணத்த.
அதானே, என்னதா பாசத்த கொட்டி வளர்த்தாலும், பெத்த புள்ள மேல அக்கறை காட்டி வளத்துறத போல வருமா. ஒரு மலட்டுக் கழுத கைல ஒப்படைச்சி வயசு பொண்ண வளத்த சொன்னா, இப்படித்தே அவமானப்பட்டு நிக்கோணும்”
கல்யாணம் நின்னு போன கடுப்பை விட, வரதட்சணை பரிப்போன கடுப்பில் தன் வன்மத்தை கக்கிய முத்துபாண்டியின் முகத்தில், ஓங்கி குத்திய வேகத்தில் கடவாய் பல் தெறித்து விழுந்ததை, அவர் நடுக்கத்துடன் நோக்க, ருத்ர அவதாரத்தில் அவர் முன் வந்தான் அமரதேவன்.
“உன் பையன் கண்ணாலம் நின்னு போச்சா அத்த மட்டும் பேசு, அனாவசியமா என் பொஞ்சாதிய நடுவால இழுத்த, மவனே உன் உசிர் இருக்காது. அதே கண்ணாலம் நின்னு போச்சின்னு தெரிஞ்சிடுச்சில்ல, இன்னும் என்னய்யா ஆளாளுக்கு நின்னு, வியாக்கணம் பேசிட்டு இருக்கீய. எல்லாரும் கெளம்புங்க”
அமரதேவனின் ஆங்கார கர்ஜனையில், மண்டபமே காலியாகி இருக்க,
“உன் பொண்ணு ஓடி போயி என் மவன் கண்ணாலம் நின்னு, நாங்க குடும்பத்தோட அசிங்கப்பட்டு நின்னதும் இல்லாம, என்னைய அடிச்சா அனுப்புறீய. வயிறு எரிஞ்சி சொல்றேன் நீயும் உன் புள்ளைங்களும் நல்லாவே இருக்க மாட்டய்யா” மாப்பிளை கோலத்தில் இருந்த மகனை இழுத்து சென்ற முத்துப்பாண்டி, தலை மறையும் வரை சாபமிட்டுக் கொண்டே சென்றிட, ஆத்திரத்தில் இறுகி நின்றான் தேவன்.
அமுதாவை காணவில்லை என்று சொன்னதில் இருந்தே, நாயகியை பற்றிய எண்ணமில்லாது இருந்தவனுக்கு, முத்துப்பாண்டி அவளை பற்றி பேசவும் தான் மனைவியை தேடி கண்கள் அலைபாய்ந்தன.
அதிகாலை மண்டபத்தில் அவளை பார்த்ததோடு சரி. அதற்கு பிறகு நடுவில் எங்கும் அவளை பார்த்ததாக நினைவில் இல்லாததை கூர்ந்தவன் மனம் சந்தேகத்தில் பிசைந்தது.
“இல்ல இல்ல என் நாயகி அப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. நானோ அப்பாவோ தலை குனிஞ்சி நிக்கிற தவறை அவ நினைச்சி கூட பாக்க மாட்டா” தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டு, தன் சரிபாதியை மண்டபமெங்கும் தேடி அலைய, நாயகி சொல்ல சொல்ல அமுதா கைப்பட எழுதி வைத்த காகிதம் தான் அவனை கண்டு பல்ளித்தது.
அமுதாவின் காதல், கர்ப்பம் அதனால் அவள் தற்கொலைக்கு முயற்சித்து, கடைசி நேரத்தில் அவள் உயிரை காப்பாற்றியது என அனைத்து விசயத்தையும் ஒன்று விடாமல் தெளிவாக எழுதி,
“தயவுசெய்து என்னைய மன்னிச்சிடுங்க, ந்நா இம்புட்டு தூரம் ஆசை ஆசையா வளத்தின பிள்ள, என் கண்ணு முன்னாடி சாகக் கிடக்கும் போது. வேற எதைபத்தியும் என்னால யோசிக்க முடியல. இதை பத்தி நானும் உங்ககிட்ட எம்புட்டோ தூரம் பேச முயற்சி பண்ணேன் ஆனா நீங்க ந்நா சொல்ல வர்ற எதையும் காது கொடுத்து கேக்கல.
நம்ம குடும்ப கௌரமா, அமுதாவோட உசுரானு பாத்தா, எனக்கு என் அமுதாவோட உருசுதாங்க முக்கியம். அதா அவ காதலிச்ச பையங்கூடவே அவளை சேர்த்து வைக்க போறேன். தயவுசெய்து என்னைய மன்னிச்சிடுங்க”
என்றதோடு அக்கடிதம் முடிந்திருக்க, மனைவியின் ஏமாற்றத்தில் மனதளவில் குறுகி போனவனாக,
“அடியேய்.. மலையளவு நம்பிக்கை வச்சிருந்த என்னைய ஏமாத்திட்டல்ல டிஇஇ..” பற்களை கடித்து வெறிப் பிடித்தவன் போல் கத்தியவனை, அமைதியாக ஆனந்தபாலன் பார்க்க, அதீத கோபத்துடன் எழுந்து நின்றார் தண்டாயிதபாணி.
“அந்த நாயி உன் பொஞ்சாதிய ஒரு வார்த்த தப்பா பேசிட்டான்னு, கடவாய் பல்ல ஒடச்சி அனுப்பினியேடா. இப்ப பாத்தியா அந்த அமுக்குனி பண்ண காரியத்த. கூடவே இருந்து இப்டி ஒரு அசிங்கத செய்ய வச்சிட்டாளேடா அந்த திருட்டுக் கழுத.
இம்புட்டு வருசமா ந்நா கட்டிக்காத்த கௌரவத்த ஒத்த நொடில சரிட்டாளே பாவி” தலையில் அடித்துக்கொண்டு அவமானத்தில் துடித்து, கண்ணீர் விட்ட தகப்பனை கண்டதும், மேலும் நாயகி மீதுதான் கொழுந்துவிட்டு எரிந்தது கோபம்.
மூவரும் வீட்டிற்கு வந்து விட்டனர். இன்னும் நாயகி வந்தபாடில்லை. அவள் வரவை எதிர்நோக்கி கடுமையான கோபத்துடன் வாசலையே வெறித்த வன்னம் தந்தையும் மகனும் காத்திருக்க, அவர்களை வெறித்தபடி கொய்யா கனியை கடித்து மென்ற ஆனந்தபாலன், பின் போர் அடிக்கவே அவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டான்.
** ** **
இங்கோ, மஞ்சள் தாலி பளிச்சிட்டு மாலையும் கழுத்துமாய், திருமண கோலத்தில் நின்றிருந்த அமுதா ஹரிஷ் தம்பதியினர், பட்டென நாயகியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற, நிறைந்த மனதுடன் அவர்களை ஆசிர்வதித்த நாயகிக்கு இன்னுமும் அமுதா மீதுள்ள கோபம் குறைந்தபாடில்லை.
“அண்ணி ப்ளீஸ் அண்ணி, என்னைய மன்னிச்சிடுங்க. தெரியாம இல்ல தெரிஞ்சே தான் தப்பு பண்ணேன். எல்லாம் அப்பா அண்ணா மேல இருந்த பயத்துனாலதா அண்ணி. மத்தபடி உங்க மனச நோகடிக்கணும்னு கனவுல ந்நா நினைச்சதில்ல.
நீங்க தானே அண்ணி எனக்கு எல்லாமே, நீங்களே எம்மேல கோவமா இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது அண்ணி. ப்ளீஸ் இந்த ஒருமுறை உங்க மகளை மன்னிக்க மாட்டீங்களா”
அவள் கை எடுத்து கண்ணில் ஒற்றி தேம்பி அழுத அமுதா, சட்டென அவளை கட்டிக்கொண்டு கெஞ்சலாக நாயகி முகம் பார்க்க, அதற்கு மேலும் அவள் மீது கோபம் நிலைக்குமா! அதுவும் தன்னை விட்டு பிரிந்து செல்லும் இந்நேரத்தில்.
நாயகிக்கு கண்ணீர் வழிந்து கன்னம் தாண்டியது, அமுதாவின் கண்ணீரை கண்டு.
“வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு சும்மா சும்மா அழாத டி. இதெல்லாம் தப்பு பண்றதுக்கு முன்னாடி யோசிச்சி இருக்கணும். இப்ப அங்கன என்னென்ன பிரச்சனையெல்லாம் வெடிச்சி இருக்கோ, நெனச்சி பாக்கவே என் ஈரக்குலை நடுங்குது.
எல்லாத்தையும் ந்நா போயிதே சமாளிக்கணும். நீ எதைப்பத்தியும் கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காத. எப்டியோ நீ ஆசைபட்டவனையே கை புடிச்சிட்ட, இனிமே சந்தோசமா இரு. நல்ல சத்தான ஆகாரம் சாப்ட்டு ஒன்னையும் புள்ளையும் பத்திரமா பாத்துக்க. புள்ள உண்டான இந்த நேரத்துல ஒன்னைய எங்கூடவே வச்சிருந்து வாய்க்கு வக்கனையா ஆக்கிப் போடவுடாம பண்ணிட்டியே டி”
அவளுக்கு என்ன ஆறுதல் கூறினாலும், எந்த வகையிலாவது நாயகியின் ஆதங்கமும் சேர்ந்தே வெளிப்பட்டு விட, கண்ணீரோடு அவள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டாள்.
“தம்பி ஒன்னைய நம்பிதாம்பா, என் புருசனையும் குடும்பத்தையும் எதிர்த்து அமுதாவ ஒனக்கு கட்டி வச்சிருக்கேன். அவள நல்லபடியா பாத்துக்கோ, எந்த விதத்துலயும் என் பிள்ளைய கலங்க வச்சிடாதபா” ஹரியிடம் கைகூப்பி கண்ணீரில் வெம்பிய அன்னையான அண்ணியை விட்டு பிரிய முடியாது, தேம்பி அழுதாள் அமுதா.
“இனிமே அமுதாவ நினைச்சி நீங்க கவலையே படாதீங்க அக்கா. என் அம்முவ நான் எந்த ஒரு சூழ்நிலைலயும் வருத்தப்பட வைக்க மாட்டேன். அவளை காலத்துக்கும் கண் கலங்காம பாத்துக்குறேன்”
அழுத்தம் திருத்தமாக நம்பிக்கை தந்த ஹரியை, திருப்தியாக பார்த்த நாயகி, அவர்களை நிறைந்த உள்ளத்துடன் வழியனுப்பி வைத்துவிட்டு, நடுக்கத்துடன் தன் வீட்டை அடைந்தாள்.
அவளுக்காகவே கொலைவெறியில் கூடத்தில் காத்திருந்த இரண்டு ஆண்களும், அவள் வந்த நொடி என்ன செய்து இருக்க கூடும்?
“சாதி சனங்க முன்னாடி எங்க கௌரவத்தையே குழி தோண்டி புதச்சிட்டு, இப்ப நீ எங்கே டி வந்திருக்க” தேவனின் கோபத்தின் உச்சியில், உடல் மொத்தமும் உதறல் எடுத்துக்கொண்டது.
“எ.என்னங்க ந்நா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க, தெளிவா எல்லாத்தையும் சொல்றேன். நம்ம அமுதா அந்த பையங்கூட..” அவள் சொல்லி முடிக்கவில்லை, கடுமையான கோபத்துடன், தேவன் ஓங்கி ஒரு அறை விட்டிருந்ததிலேயே, ஆஆ… என்ற பலத்த அலறலுடன் சுருண்டு விழுந்தாள் நாயகி.
“அடிச்சி சாவடி டா இந்த அன்னக்காவடி நாய. அன்னைக்கு எந்த கௌரவத்தை காப்பாத்த இந்த சனியன உன் தலையில கட்டி வச்சேனோ, இன்னைக்கு என் மொத்த கௌரவத்தையும் கண்டந்துண்டமா ஆக்கிட்டாளே டா இவ. அந்த ஓடுகாலிக்கு இவதான்டா என்னத்தையோ பேசி தூண்டி விட்டு இம்புட்டு தூரம் என்னைய அவமானப்படுத்தி இருக்கா”
ஆவேசமாக கத்திய தண்டாயிதபாணி, மேஜையில் இருந்த தண்ணீர் குவளையை தூக்கி அவள் மேல் விட்டெறிந்து இருக்க, அது சரியாக நாயகியின் நெற்றியின் ஓரம் பதம் பார்த்து, உதிரம் கொட்டியது.
“ஸ்ஸ்..ம்மா..” தலையைப் பிடித்துக்கொண்டு வலியில் அலறினாலும், பரிதவிப்புடன் தேவனின் கால்களை பற்றிக் கொண்டவளை, இருந்த கோவத்தில் ஈவு இரக்கமே இல்லாது காலால் விசிறி அடித்தான். வலியில் கதறினாலும், தாயை தேடும் சேயை போல மீண்டும் மீண்டும் கணவனிடம் தான் ஓடி சென்றாள் நாயகி.
“என்னங்க தயவுசெய்து ஒரே ஒரு தரம், ந்நா சொல்றத தெளிவா கேளுங்க” கெஞ்சிக் கேட்டு தன்னிலை விளக்கம் சொல்லிவிட தவித்தவளை, அற்ப புழுவை போல் ஒரு பார்வை பார்க்க, உடல் குறுகி வெம்பினாள் பெண்ணவள்.
“எம்புட்டோ தரம் சொல்லிருக்கேன், அமுதா விசயத்துல அதிக பிரசங்கி மாறி நடந்துக்காதேன்னு. இப்ப பாரு டி போற வர்றவனெல்லாம், “என்ன தேவா உன் தங்கச்சி ஓடி போச்சாமே, அதுவும் எவங்கூடவோ கெட்டு போன பயத்துல” அப்டின்னு கேலி பேசி காரி துப்புறான் டி மூஞ்சி மேல.
இந்த அவமானமெல்லாம் யாரால.. ஒன்னால டி..” அவள் முகத்தின் நேரே கரத்தை வேகவேகமாக ஆட்டி கோபத்தில் கத்த, செவிப்பறை அடைத்து தலை சுற்றியது அவளுக்கு.
“இனி ஒரு நிமிசம் இந்த வீட்ல நீ இருக்க கூடாது டி. இம்புட்டு தூரம் அவமானப்பட்ட பொறவு இனிமே ஒனக்கும் இந்த வீட்டுக்கும் மட்டுமில்ல, ஒனக்கும் எனக்குமான கண்ணால ஒறவே முறிஞ்சி போச்சி டி. என் பொஞ்சாதி நாயகி இன்னைக்கு காலையோட செத்துட்டா. மருவாதையா வெளிய போடி..”
தேவனின் கண்மண் தெரியாத அதீத கோபத்தில், அதிர்ந்து போனாள் நாயகி.
“அதே என் புள்ளையே சொல்லிட்டானே டி, இன்னும் என்ன இங்கன ஒக்காந்து நடிச்சிட்டு இருக்க. போ வெளிய” தண்டாயிதபாணியும் உடன் சேர்ந்து கத்திட,
தேவன் பேசிய அதிர்ச்சியில் இருந்தே வெளிவர முடியாது திகைப்பில் இருந்தவளின் மார்பை உரசி, கொத்தாக அலங்கரித்து இருந்த தாலி சரடு, வெடுக்கென அறுக்கப்பட்டதில், திக்பிரம்மை பிடித்ததை போல மேலும் அதிர்ச்சியில் திளைத்து, கத்தி கதறிய மெல்லியகொடியை வேரோடு பிடிங்கி, அவ்வீட்டில் இருந்து குப்பையாக வீசப்பட்டிருந்தாள்.
தொடரும்.