அத்தியாயம் – 7
என்றும் இல்லாத திருநாளாக அந்த அதிகாலை நேரமே, தேவனின் வீடு பரபரப்பாக இருந்தது.
நாயகியின் முகத்தில் சிறுபிள்ளைதனமான மகிழ்ச்சியின் சாயல். ஆடு, கோழி, மீன், நண்டு, இறால் என அசைவத்தில் என்னென்ன வகை உண்டோ அவளுக்கு தெரிந்த அனைத்தையும் பக்குவமாக சமைத்து, அதற்கேற்ற பாத்திரங்களில் மாற்றி வைத்துக்கொண்டிருக்கும் போதே அவசரமாக கோதையும் வந்து சேர்ந்தாள்.
“அச்சோ நான் வரற்துகுள்ள நீயலே பாதி வேலைய முடிச்சிட்டியலாக்கா” வந்ததும் வேகவேகமாக மற்ற வேலைகளை செய்தபடியே பேச்சிக்கொடுத்தாள்.
“ஆமா கோத. உன் வீட்லயும் சமைச்சி வச்சிப்புட்டு விடிய காத்தால இருட்டுல பாவம் எப்டி ஒத்தையில நடந்து வருவ. அதே முடிஞ்ச அளவுக்கு நானே கொஞ்ச வேலைய முடிச்சிட்டேன்” என்றபடி நெய் மணக்கும் பாயசத்தை ருசி பார்க்க, அமிர்த சுவை தான்.
“சமைச்சி வைக்கிறது எல்லாம் பெரிய வேலையா க்கா.. ரோட்ல தெரு நாய்ங்க தொல்லதே பெருசா இருக்கு. எங்கே இருட்டுல வந்தா புடிச்சி புடிங்கிபுடுமோனு பயந்து, காத்திருந்து கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் ஓட்டமும் நடையுமா அவசர அவசரமா ஓடியாந்தேன்” பாவமாக சொன்ன கோதை, சுட சுட வெங்காய தோசையை வார்த்தாள்.
“என்ன கோத நீயி.. அப்டி யாரு உன்னைய இம்புட்டு அவசரமா பயந்தடிச்சி ஓடியார சொல்றது. பாத்து மெதுவாவே வந்து, எப்பவும் பாக்குற வேலையே செஞ்சிட்டு போ மத்ததையெல்லாம் நானே பாத்துக்குறேன்” அக்கறையாக சொன்ன நாயகிக்கு, “சரிக்கா” என பதில் தந்த கோதை, அவள் அடிக்கடி வாசலை ஆவலாக எட்டி பார்த்து, பின் நேரத்தை பார்ப்பதை கவனித்தவளாக,
“நீய எதிர்பாக்குற ஆள் வர மணி பத்தாகுமே க்கா, அதுக்குள்ள அம்புட்டு ஆர்வமா வாசலையே வெறிக்கிறீயலே” சின்ன சிரிப்புடன் கேட்ட கோதையை, தானும் சிரிப்பு மாறாமல் ஏறிட்ட நாயகி,
“பின்னே ஆர்வம் இருக்காதா கோத. சின்ன புள்ளைல இருந்து நான் தூக்கி வளத்த என் தங்கக்குட்டி படிப்ப முடிச்சிட்டு வரப்போறால்ல, அதே எப்படா அவள பாப்போம்னு மனசு ஏங்கி தவிச்சு வாசலையே வெறிச்சிட்டு நிக்கிறேன்” சிலாகித்து சொன்ன நாயகி, தேவன் ஆனந்தனின் ஒரே தங்கையான அமுதாவின் வரவிற்காக தான் அத்தனை ஆசையோடு காத்திருப்பது.
கோதையும் அவள் எண்ணம் உணர்ந்து கலகலத்தபடியே வேலையில் கவனம் ஆகிட, சற்று நேரத்தில் எல்லாம் வாயிலில் கார் சத்தம் கேட்டதும், அவசரமாக ஆலம் கரைத்த தட்டினை எடுத்துக்கொண்டு வெளியே வந்த நாயகி, அமுதாவை கண்டதும் ஆனந்த கண்ணீர் பொங்க ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தது தான் தாமதம், இருவரும் இறுகக் கட்டிக்கொண்டு தங்கள் பிரிவின் ஏக்கத்தையும் பாசத்தையும் ஒருசேர அழுது தீர்த்துவிட்டனர்.
பேருந்து நிலையத்தில் இருந்து அமுதாவை அழைத்து வந்த தேவன், மனைவி மற்றும் தங்கையின் பாச பிணைப்பை அலட்சியமாக கண்டவனாக, கோதை கொடுத்த தேனீரை வாங்கிக்கொண்டு அறைக்கு சென்றதும் தான், இருவருக்கும் பேசும் சுதந்திரம் கிடைத்த உணர்வு வந்தது.
“அண்ணி எப்டி இருக்கீங்க” நீண்ட மாதங்களுக்கு பிறகு அண்ணியை பார்த்ததும் அழுகை நிற்கவில்லை அமுதாவிற்கு.
“நீ இல்லாத குறைய தவிர ரொம்பவே நல்லா இருக்கேன் அமுதா. ஆமா என்ன இது போன முறை பாத்ததைவிட இப்போ இளச்சி போய் வந்திருக்க, சரியா சாப்பிடறது இல்லையா” அவளை ஆராய்ந்தபடி வினவிய நாயகியை, சிறு முறைப்புடன் பார்த்தாள்.
“ஏன் அண்ணி உங்களுக்கே இது ஓவரா இல்ல. என்னைய பாத்தா இளச்சு போன மாதிரியா இருக்கு” தனது பூசின உடலை அவளே குனிந்து பார்த்துக்கொள்ள, மாற்றுத்தாயான நாயகி கண்களுக்கு என்னவோ, அவள் இளைத்து இருப்பதை போல் தான் தோன்றியது.
நாயகி திருமணமாகி வந்த போது, அமுதா ஆறு வயது கூட நிரம்பாத குழந்தை பெண். அவளுக்கு மூன்று வயது இருக்கும் போதே தேவனின் அன்னை கிணற்றடியில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து போய்விட, ஏற்கனவே பெண்கள் என்றால் ஆண்களின் அடிமை தான் என்று போற்றும் குடும்பத்தின் மத்தியில், ஆண்கள் மூவராலும் பாசம் காட்டாமல், அப்போது வீட்டு வேலை செய்த ஒரு மூதாட்டியிடம் ஏனோ தானோவென வளர்க்கப்பட்டாள் அமுதா.
நாயகி வந்த பிறகு அன்னையின் அரவணைப்புக்கு ஏங்கிய குழந்தைக்கு அன்பை அள்ளிக்கொடுத்து, இன்றளவும் தன் பிள்ளை போல பாவித்து வளர்ப்பவளின் மீது, அமுதாவிற்கு கொள்ளை பிரியம்.
அப்பா.. அண்ணா.. என்று ஆசையாக ஓடினால் அலட்சியப் பார்வை வீசி செல்லும் ஆண்களின் உதாசீனத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்ட அமுதாவை தேற்றி, இரவும் பகலும் மடியில் போட்டு சீராட்டி வளர்த்த நாயகி, மேற்படிப்பிற்கு வெளியூர் செல்கிறேன் என்று பாவமாக கேட்டவளைக் கண்டு அதிர்ந்து போனாள்.
பெண்கள் படிப்பதை பெருந்தவறாக எண்ணும் ஆட்களிடம், எப்படி சென்று கேட்பது ‘அமுதாவை கல்லூரி சேர்ப்பதை பற்றி, அதிலும் வெளியூருக்கு’ தலை சுற்றிக்கொண்டு வந்தது.
இருந்தும் பல முயற்சிகளுக்கு பிறகு பெரிய போராட்டம் செய்து, தேவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, கண்டபடி திட்டுக்களையும் அடிகளையும் வாங்கிக்கொண்டு அமுதாவை வெளியூர் அனுப்பி படிக்க வைத்தவளுக்கு தினந்தோறும் வயிற்றில் நெருப்பைக் கட்டிய உணர்வு தான்.
“போன எடத்துல படிப்பை தவிர்த்து, காதல் கீதல்னு ஆம்பள பையன் சகவாசத்தோட வந்து நின்னா, அவளை அப்பவே வெட்டி பொலி போட்றுவேன். அதுல முதல் பலி நீதே” தேவன் மட்டுமில்லாது கண்ணாயிதபாணியும் சேர்ந்து மிரட்டல் விட்டிருக்க, அப்படி ஒரு நிகழ்வு மட்டும் நடந்து விடக்கூடாது என கடவுளை வணங்குவளுக்கு, அமுதா மீதும் நம்பிக்கை குறையாமல் இருக்கிறது. ஆனாலும் இருதயத்தின் ஓரம் ஏதோ ஓர் சிறிய பயம் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை அவளால்.
செய்து வைத்த உணவுகளை தானே அமுதாவிற்கு ஊட்டி விட்டு, அவள் அறைக்கு சென்று அமுதா உறங்கும் வரை, பல கதைகளை பேசிய நாயகி, கீழே வந்து விட்ட வேலைகளை தொடரும் நேரம் “நாயகிஇஇ..” என உள்ளிருந்து சத்தமாக வந்த கணவனின் குரலில், அடித்துபிடித்து ஓடி வந்தவளை ஏற இறங்க பார்த்தான்.
“ஏங்க, எதுக்கு கூப்ட்டீங்க” மூச்சி வாங்க நின்றவளின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை துளிகள் பூத்திருக்க, அதனை அவசரமாக முந்தானை கொண்டு ஒற்றி எடுத்தாள்.
“இம்புட்டு நேரமா டி இங்குட்டு வர. நான் எப்போ வந்தேன், என்னைய கவனிக்காம அங்குட்டு என்ன டி ஒரே சிரிப்பா சிரிச்சிட்டு அவகூட கூத்தடிச்சிட்டு இருக்கவ” கடுமையாக கேட்டவன், வெடுக்கென அவள் இடை வளைத்து இழுக்க, அவன் இழுவைக்கு ஏற்ற வளையம் போல அழகாக அவன் கையில் குழைந்து நின்று, பாவமாக அவன் முகம் பார்த்த வேதநாயகியின் அழகில், தடுமாறாமல் இருக்குமா ஆண் நெஞ்சம்.
“ரொம்ப நாளைக்கு பொறவு அமுதா வந்திருக்கா, அதாங்க அவளோட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன். மத்தபடி உங்கள கவனிக்காம விடணும்னுலாம் எனக்கு எண்ணம் இல்லைங்க” மின்னும் கருவிழிகள் மிரண்டு உருல, அவனது படர்ந்த நெஞ்சத்தில் கை ஊன்றியபடி, பரிதவிப்பாக சொல்லும் இந்த பதிலுக்காக தான் இத்தனை கடுமை அவளிடம்.
தலையினை உளுக்கிக்கொண்ட தேவன், சட்டென அவள் மார்புகூட்டில் முகம் புதைக்க, கணவனின் எண்ணம் அறிந்த நாயகியும் வாகாக தன்னை வளைந்து கொடுத்து அவனை ஆதரிக்க, அதற்கு மேலும் பேச்சிக்கு என்ன வேலை!
சிறப்பான தாம்பத்தியம் நடந்தேறி ஓய்வுக்கு வந்திருக்க, அசதியாக படுத்திருந்த தேவனின் அகண்ட நெஞ்சத்தில், பதுமையாக பதுங்கிக் கிடந்தாள் நாயகி.
“ஏய் அத்தா முடிஞ்சிதுல்ல, இன்னும் என்ன டி எந்திரிச்சி தொலையாம கனா கண்டுட்டு இருக்க” கண்களை மூடியபடி கடுப்பாக கேட்டதும், அவன் மீதிருந்து வெடுக்கென எழுந்துகொண்ட நாயகி, தயங்கி தயங்கி அங்கேயே இருப்பதை கண்டு புருவம் நெளித்தான் அமரதேவன்.
“ஏதாச்சி சொல்லனுமா?” என்றவனின் பார்வை அவள் முகத்தினை உற்று நோக்கியது.
“அ.ஆமாங்க..” என வேகமாக தலையசைத்த நாயகி,
“எதிர்த்த வீட்டு ஆச்சி சொல்லுச்சி, கும்பகோணத்துல ஒரு கைத்தேர்ந்த டாக்டரு, குழந்தை இல்லாதவையகளுக்கு வைத்தியம் செஞ்சி, கரு தரிக்க வைக்கிறாங்கலாம். நல்லபடியா அவையலுக்கு குழந்தையும் பொறந்து குடும்பமா சந்தோசமா இருக்காகலாம்.
அங்கன போய் பாத்தா நிச்சயம் உனக்கும் குழந்தை பொறந்துடும்னு ஆச்சி நம்பிக்கையா சொல்லுச்சிங்க. நாமலும் அந்த டாக்டர போயி பாக்கலாமாங்க” எப்படியோ சொல்ல வந்ததை சொல்லி முடித்து, ஆவலாக அவன் முகம் பார்த்திட, அவனும் அமைதியாக அவள் முகத்தை தான் பார்த்திருந்தான்.
“ஏங்க எதுவும் சொல்லாம இருக்கீய. கொஞ்சம் நினைச்சி பாருங்களேன், கண்ணு மூக்கு காது உதடு எல்லாமே உங்கள உறிச்சி வச்சதபோல நமக்குனு ஒரு குழந்தை வந்தா எப்டி இருக்கும்” தனது மென்மையான வயிற்றில் கை வைத்து தடவி, கண்களில் அதீத ஏக்கம் பிரதிபலிக்க, ஆசையாக சொன்ன நாயகியை எரிச்சலாக பார்த்தான் அவன்.
“மச்.. தேவையில்லாத கற்பனைல உழலாம மரியாதையா இங்கிருந்து போடி.. எப்பப்பாரு குழந்தை குழந்தைனு உயிர எடுத்துக்கிட்டு. கட்டின சீலைய தவிர ஒன்னுமே இல்லாத வந்த படிக்காத பட்டிக்காடு உன்னைய கட்டி கஞ்சி ஊத்துறதே பெரிய விசயம், இதுல உன் மூலியமா ஒரு உயிரு வந்து அத்தையும் பாத்துக்கணுமாம்.
படிக்காதவளா கட்டினாதே வாய் செத்த பூச்சியா நம்ம காலடிலே கிடப்பாளுங்க அன்னைக்கு என் அப்பன் சொன்னதாலதே, சரி போனா போவட்டும்னு உன்னைய கட்டிக்க சம்மதிச்சேன். மத்தபடி உன் அழகுல மயங்கியெல்லாம் கட்டிக்கிடல.
உன் கழுத்துல தாலிய கட்டின பாவத்துக்கு உன்னைய தொரத்தி விடாம இம்புட்டு வருசமா வச்சி குடும்பம் நடுத்துறதே பெரிய விசயம். அத்ததாண்டி ஒரு ம*ரும் இங்க இல்ல” தன் மார்பை தட்டி சொன்னவன்,
“ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாய்ங்க அதையெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுட்டு இருக்காம, போடி.. போயி ஜோலியப் பாரு” வெறுப்பாக மொழிந்து அவள் மனதை சிதைத்து விட்டு அவன் கண்ணுறங்கி போக, கற்சிலையாக சமைந்திருந்தவளின் கண்ணில் நிற்காமல் ஊற்றெடுத்தது கண்ணீர்.
** ** **
ஆலமரத்தடியில் அமர்ந்து பக்கத்து ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் பேசிக்கொண்டிருந்த தண்டாயிதபாணி, தொடை வரை லுங்கியை ஏற்றிக்கட்டிக்கொண்டு, சுருள் சுருளான நெஞ்சி ரோமங்கள் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் அளவிற்கு சட்டை பொத்தாங்கள் திறந்து விட்டப்பட்ட நிலையில், வீர நடை போட்டு நடந்து வந்த ஆனந்தபாலனை பார்த்தவர்,
“சரி கோதண்டம், உன் மவனுக்கு கவர்மெண்டு வேலைக்கு ஏற்பாடு பண்ண சொல்லி, என் மூத்த பையங்கிட்ட பேசுறேன். நீயி பாத்து பொறப்படு” என்ற தண்டாயிதமிடம், நன்றி கூறி விட்டு அவர் கிளம்பியதும், இளைய மகனிடம் கோபமாக பார்வையை வீசினார்.
“உன்னைய நான் எப்போ பாக்க வர சொன்னது. இன்னைக்குதே நேரம் கிடைச்சிதா ஆனந்தா” பற்களை கடித்தவரை காணாது, அலட்சியமாக மரக்கிளையில் துளிர்விட்ட இலைகளை கிள்ளி, அதனை தூர தூக்கி போடுவதில் அவன் பிசியாக இருக்க, கோபம் உச்சி தொட்டது அவருக்கு.
“டேய், உன்னைய தான்டா கேக்குறேன், இப்டியே பொறுப்பில்லாம இருந்தா என்னடா பண்றது. உன் கூட பொறந்தவன் தானே தேவாவும். கல்யாணம் பண்ணி பொண்டாட்டி வேலைனு எப்டி ஊருக்கு முன்னாடி மதிப்பா இருக்கான். ஆனா நீ மட்டும் ஏன்டா வேலவெட்டிக்கு போவாம பொம்பள சகவாசத்தோட சுத்திட்டு இருக்க.
பொண்டாட்டி குடும்பம் குட்டினு வாழ விருப்பம் இல்லையா..!” மூச்சி பிடிக்க அவர் கத்திக்கொண்டிருக்க, அவை அனைத்தும் அவன் செவியை எட்டியதோ இல்லையோ, எங்கிருந்தோ வந்த கோழி வறுவல் வாசம் சுண்டி இழுத்தது அவன் நாசியை.
“யப்போய், அனாவசியமா பேசி என் நேரத்த வீணடிக்கதே கூட்டுவுட்டியா.. ஏதோ முக்கியமான மேட்ரு பேசணும்னு சொன்னியாமே அத்தமட்டும் சொல்லு. எனக்கு நெறைய ஜோலி கெடக்கு” தரையில் நிற்காத கால்கள் முன்னும் பின்னும் டொடக்.. டொடக்.. என தெனாவட்டாக ஆட்டிப்படி, பின்னால் கைக்கட்டி நின்ற மகனை, என்ன சொல்லி திருத்துவது.
“சரிபா நான் உன் வழிக்கே வரேன். இந்தமுறை நல்ல வரண்கள் வந்திருக்கு, அதுல உனக்கு புடிச்ச பொண்ணா பாத்து சொல்லு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். கல்யாணம் பண்ணி உன் இஷ்டத்துக்கு இரு அதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு ஒரு வாரிசை மட்டும் பெத்து குடுத்துடு.
தேவாக்கு கல்யாணம் பண்ணி வருசந்தே வீணா ஓடி போச்சே தவிர, அந்த நாயகியால ஒரு புண்ணியமும் இல்ல. எல்லாருக்கும் வடிச்சி கொட்ட மட்டும்தே அது லாயக்கியா இருக்கு. மத்தபடி நம்ம குடும்பத்தை பெருசு படுத்துற அளவுக்கு அவளுக்கு சக்தி இல்ல.
இவளை சமைக்க மட்டும் ஒரு ஓரமா வச்சிக்கிட்டு, குழந்தை பாக்கியம் உள்ள நல்ல பொண்ணா பாத்து ரெண்டாங்கல்யாணம் பண்ணி வைக்கிறேன், புதுசா வரவ மூலமா இந்த வீட்டுக்கு ஒரு வாரிசை பெத்து குடுடான்னு, நேரடியாவும் மறைமுகமாவும் நிறையதரம் தேவாகிட்ட பேசிட்டேன். ஆனா எதுக்கும் அவன் பிடி குடுக்க மாட்றான்.
நீயாவது இந்த அப்பன் சொல்றத புரிஞ்சிக்க ஆனந்தா. உனக்கும் வயசு ஏறி போச்சி, அடிக்கடி பொண்ணுங்க சகவாசம் வேற வச்சிருக்க. உடம்புக்கு ஏதாவது வரக்கூடாத நோக்கு வந்தா ரொம்ப சிரமமா போவும் பா. தயவுசெய்து இந்த ஒரே ஒரு வார்த்தையாவது அப்பா சொல்றத கேளுபா ஆனந்தா”
அவனது கரத்தைப் பற்றி நெஞ்சில் வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட அவர் கெஞ்சிக் கொண்டிருக்க, இந்த கெஞ்சலுக்கு எல்லாம் மசியும் ஆள் ஆனந்தபாலன் இல்லையே!
“யப்போவ், நீ என்ன செண்டிமெண்ட் சீனு போட்டாலும் எங்கிட்ட வேலைக்கு ஆகாது. நீ பயப்படுற மாறி பாதுகாப்பு இல்லாம எங்கேயும் வாய வைக்க மாட்டேன், கல்யாணம் பண்ணிக்க என் மனசுக்கா தோணினா மட்டுந்தே நடக்கும். ஆனா இப்ப எனக்கு விருப்பம் இல்ல” திட்டவட்டமாக தன் முடிவை சொன்ன ஆனந்தபாலன் அவரது பிடியில் இருந்து தன் கரத்தை உருவிக் கொண்டவனாக, அங்கிருந்து சென்றிருக்க, தண்டாயிதபாணி மனஉளைச்சலுக்கு ஆளாகிப் போனார்.
தொடரும்.